Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஜூலை 21

நிகழ்காலத்தில் வாழ்வோம் !

ஒன்று – கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்ளலாம்.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதில் மூன்று நன்மைகள் உண்டு.

இரண்டு – கடந்த காலத் தவறுகளுக்குத் “தவ்பா” செய்து தூய்மை அடையலாம்.

மூன்று – கடந்த கால செய்திகளை நம் சந்ததிகளுக்காக ஆவணப் படுத்தி வைக்கலாம்.

இது தவிர – கடந்த காலத்தை அசை போடுவதில் வேறு எந்த நன்மையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

ஆனால் நம்மில் பலர் - கடந்த காலத்தைத் தாங்கள் “கவலைப் படுவதற்காகவே” நினைவு கூர்கிறார்கள். ”ஆகா, இப்படி செய்து விட்டோமே…. அப்படிச் செய்திருந்தால் இப்படி நடந்திருக்காதே”.

இப்படிப் பட்ட நினைவுகளுக்கு ஒருவர் வாழ்வில் பஞ்சமே இல்லை என்பதால் இவர்கள் கடந்த காலத்திலேயே “வாழ்ந்து திளைப்பவர்கள்” என்று சொல்லலாம்.

வேறு சிலர். இவர்கள் எதிர் கால “மாயையில்” மூழ்கிக் கிடப்பவர்கள். ”நாளை என்ன நடக்குமோ.. ஏது ஆகுமோ…விபத்து நடந்து விடுமோ… மவுத் ஆகி விடுவோமோ….நஷ்டம் வந்து விடுமோ…. தோற்றுப் போய் விடுவோமோ…பெயில் ஆகி விடுவோமோ…. வேலை போய் விடுமோ….”

ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களில் யாரும் நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை!

ஆனால் நமது வாழ்க்கை என்பது என்ன? நமக்குத் திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லாத கடந்த காலமா? நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிச்சயமற்ற எதிர்காலமா? அல்லது நம் கைகளில் இறைவன் வழங்கி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலமா?

“காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” – என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுவதை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் தனக்கு நஷ்டம் விளைவித்துக் கொள்வது என்பது அவன் தன் நிகழ் காலத்தைப் பாழ் படுத்திக் கொள்வதால் தான்!

மனிதனை நஷ்டவாளியாக ஆக்குவது யார்?

வேறு யார்? ஷைத்தான் தான்!

அவன் என்ன செய்கிறான்?

நம்மை -நமது நிகழ் காலத்தைப் பற்றி சிந்திக்க விடுவதில்லை. ஒன்று – நம்மைக் கடந்த கால சிந்தனைகளில் தள்ளி விட்டு விடுவான். அல்லது -நம்மை நமது எதிர் காலம் குறித்த சிந்தனைகளில் மூழ்க வைத்திட முயல்வான்.
அதனால் நாம் நமது நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனைப் பற்றிய உணர்வே இல்லாமல் ”கடமையே” என்று காரியம் ஆற்றிக் கொண்டிருப்போம்.அதனால் அதன் பயன்களை நாம் வெகுவாக இழந்து விடுவோம்.

இப்படித் தான் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கை “இயந்திரத் தனமாக” ஓடிக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடு பட இறைவன் நமக்கு அருட்கொடை ஒன்றை வழங்கியிருக்கின்றான். அது என்ன தெரியுமா?

அது தான் தொழுகை!

அனு தினமும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான்.

“நிகழ் கால விழிப்புணர்வுக்காக” சற்று ஆழமாக சிந்திப்போம் இக்கடமை குறித்து.

இப்படி சிந்தித்துப் பாருங்கள்.

அதான் – தொழுகை அழைப்பொலி – காதில் விழுகிறது. அச்சமயத்தில் நாம் எந்தக் “காலத்தில்” மயங்கிக் கிடந்தாலும் - இந்த அழைப்பொலி நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறதா இல்லையா? நீங்கள் சும்மா இருந்து விட முடியாது; அழைப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். இது முதற் கட்டம்.

அடுத்து நீங்கள் உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்காக – உளூ செய்வதற்காக – தயார் ஆகிறீர்கள். நீங்கள் அதனைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றிட வேண்டும் – இது நபி வழி. இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால் உங்கள் உளூ ஏற்கப் பட மாட்டாது. எனவே தொழுகையும் வீணாகி விடும். எனவே நீங்கள் உளூவின் சமயத்திலும் நிகழ் காலத்துக்கு வந்தே ஆக் வேண்டும்.

அடுத்து நீங்கள் பள்ளிவாசல் நோக்கி நடக்கிறீர்கள். ஆம். கம்பீரமாக நடந்திட வேண்டும். எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் நமக்கு கூலி எழுதப் படுகிறது அல்லவா? உங்கள் சிந்தனையும் நிகழ் காலத்துக்கு வந்து விடுகிறது.

பள்ளிவாசலை நெருங்குகிறீர்கள். “இகாமத்” கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு – காதில் விழுகிறது. நமது அவசர புத்தி நம்மை ஓடச் சொல்லித் தூண்டுகிறது. அதாவது சற்றே படபடப்பு. அதாவது Anxiety. அங்கேயே அல்லாஹ் நம்மைத் தடுத்து நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறான்.

இகாமத் சொல்லப் பட்டால் – நீங்கள் ஓடி வர வேண்டாம்; நடந்தே வாருங்கள்; கிடைப்பதில் சேர்ந்து கொள்ளுங்கள்; கிடைக்காததை முழுமை செய்து கொள்ளுங்கள் என்பது நபி மொழி. நாம் தொழுகைக்காக நடந்து வரும் போதே நாம் தொழுகையில் தான் இருக்கின்றோம் என்பதும் நபி மொழியே. சுப்ஹானல்லாஹ்!

ஆனால் – இகாமத் கேட்டதும் வேகமாக ஓடி வரக்கூடிய பல் பேர்களை நாம் அடிக்கடி பார்த்திட முடியும். இது கூடாது.
அடுத்து தொழுகை துவங்குகிறது; ஷைத்தான் ஓடோடி வந்து விடுவான்; நாம் நிகழ் காலத்தை விடுத்து கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் போய் வந்து கொண்டிருப்போம்.

ஆனால் அல்லாஹ் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறான்?

நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போல் தொழுங்கள்; அது இயலாவிட்டால் அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றாவது தொழுகையை நிறைவேற்றுங்கள். இதுவே தொழுகைக்கு அழகு! இதுவும் நபி மொழிக் கருத்து என்பதை நாம் அறிவோம்.

தொழுகையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நூற்றுக் கணக்கான நபி மொழிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் நாம் தொழுகையை இயந்திரத் தனமாக அன்றாடம் நாம் செய்கின்ற ஒரு “பழக்கமான செயலாக” (habitual act) செய்து வருகிறோம்.

இப்போது நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் – இன்றிலிருந்து முயற்சி செய்யுங்கள்; உடனேயே “முழு வெற்றி” கிடைத்து விடும் என்று எதிர் பார்க்காதீர்கள்; தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள்; உங்களின் முயற்சி அளவுக்கு வெற்றி கிடைக்கும்.

தொழுகையில் உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பயிற்சியை நம் வாழ்வின் இதர செயல்களுக்கும் கடைபிடித்துப் பாருங்கள்.

சான்றாக – உணவு உண்ணும் சமயம் – நீங்கள் உணவு உண்ணுவது குறித்தே சிந்தித்திட வேண்டும். பிஸினஸ் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

உணவு உண்ணும் போது - இறைவன் பெயரால் துவக்குகின்றீர்கள். அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.அதன் ருசிக்காக உங்கள் மனைவிக்கு நன்றி செலுத்துகின்றீர்கள். அருகில் இருப்பவருடன் பகிர்ந்து உண்ணுகிறீர்கள். நிதானமாக உண்ணுகிறீர்கள். அழகாக உண்ணுகிறீர்கள்;

மனைவியுடன் பேசுகிறீர்களா? அப்போதும் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனைவி பேச்சுக்கு “உம்” “உம்” போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். முழுமையாக மனைவி சொல்வதை காதில் வாங்குங்கள்; அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

மனைவியை நெருங்கும் நேரமா? அது குறித்து மட்டும் நினையுங்கள்;

இப்படி வாழ்வின் எல்லா – பெரிய சிறிய – கட்டங்களிலும் – நிகழ் காலத்தில் வாழ்ந்து பாருங்கள். அதுவே வாழ்க்கை!
இப்பயிற்சியை அலட்சியம் செய்வதால் என்ன ஏற்படுகிறது? அதாவது – “கடந்த கால-எதிர்கால” வாழ்க்கையாளர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கவலையோடு காணப் படுவார்கள்.

படபடப்போடு எதையும் செய்வார்கள்.

எந்த ஒன்றையும் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.

அவசரப் படுவார்கள். வேக வேகமாக நடப்பார்கள்.

யாரிடம் பேசும் போதும் கவனமாகக் கேட்க மாட்டார்கள்.

அவசர முடிவுகள் எடுப்பார்கள்; அந்த முடிவுகள் அவருக்கு நன்மை பயக்காது.

நண்பர்களை இழந்து விடுவார்கள்; பணியிடத்தில் திட்டு விழும்;

விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

வேண்டாம் நண்பர்களே! நிகழ் காலத்தில் வாழ முயற்சிப்போம். நிம்மதியாக வாழ்வோம்!!

நீடூர் மன்சூர் அ லி

-நீடூர் எஸ் ஏ மன்சூர் அலி

http://meemacademy.com/?p=414


1 comments:

Jafarullah Ismail சொன்னது…

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சமுத்ரா.