Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, அக்டோபர் 23

வருகுது ஷார்ட்டி ரன்னர்ஸ்!


வருகுது ஷார்ட்டி ரன்னர்ஸ்!

சென்னையில் உள்ள கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற சில வங்கி​களின் ஏ.டி.எம். மெஷின்களில் கடந்த சில நாட்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு பயங்கர அதிர்ச்சி! அவர்களின் வங்கிக் கணக்குகளில் கொத்துக் கொத்தாகப் பணம் காணாமல் போயிருப் பதைப் பார்த்துத் திடுக்கிட்டனர். உடனே பதறியபடி வங்கிகளுக்கு ஓடினர். வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் படையெடுத்தனர். 

சென்னையில் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மற்றும் கிரடிட் கார்டு மோசடிகளை விசாரிப்பதகு என்றே, துணைக் கமிஷனர் ராதிகா தலைமையில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு (போன்: 2345 2317) செயல்படுகிறது. இதன் உதவி கமிஷனர் ஜான் ரோஸிடம் பேசினோம்.

''கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில்  35 லட்சம் வரை கொள்ளை போனதாக சுமார் 65 புகார்கள் பதிவாகி உள்ளன. அதேபோல், இந்த மாதம் 19-ம் தேதி வரையில் சுமார் 50-க்கும் அதிகமானவர்கள், ரூ. 2 கோடி வரை கொள்ளை போனதாக புகார் செய்திருக்கிறார்கள்.

கிரடிட் மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்​பவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ளும் அறிவுரை எச்சரிக்கை இதுதான். 'ஏ.டி.எம். கார்டுகளின் பின் நம்பரை அடிக்கடி மாற்றி புது எண்ணைப் பதிவு செய்யுங்கள். ஏனென்றால், பழைய எண்ணை கொள்ளையர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்தத் தகவல் மூலம் வெளிநாடுகளில் இருந்து உங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அதனால் புதிய எண்ணுக்கு மாறுங்கள்'.

இந்த கொள்ளைகளின் சூத்திரதாரியான ஷார்ட்டி (எ) உமேஷ் என்ற இலங்கைக்காரரை அக்டோபர் முதல் வாரத்திலேயே கைது செய்துவிட்டோம். ஆனால், அதற்குப் பின்னரும் பணத்தைப் பறிகொடுத்ததாக பலரும் புகார் செய்யவே, தீவிரமாக விசாரணையில் இறங்கினோம்.

அப்போதுதான், இந்த ஷார்ட்டி இங்குள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை நூதனமுறையில் திருடி, வெளிநாடுகளில் பிரபல கும்பல்​களிடம் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்தத் தகவல்களை விலைக்கு வாங்கிய கும்பல்தான், வெளிநாடுகளில் இருந்து இங்குள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் புகுந்து களவாடி வருகிறார்களோ?’ என்று சந்தேகப்படுகிறோம்!'' என்றவரிடம், ''எப்படி இந்த மோசடி நடக்கிறது?'' எனக் கேட்டோம்.

''ஸ்கிம்மர் என்கிற கருவி  25 ஆயிரத்துக்கு சீனாவில் கிடைக்கிறது. மெல்லிய ஸ்டிக்கர் மாதிரி இருக்கும். இதை ஏ.டி.எம். மையங்களில் கார்டு நுழைக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாதபடி பொருத்தி விடுவார்கள். நாம் பணம் எடுக்க கார்டை நுழைக்கும்போது அது, ஸ்கிம்மரைத் தாண்டித்தான் மிஷினுக்குள் போகும். அப்போது கார்டு நம்பர், பின் நம்பர் உள்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிடும். அந்த ஸ்கிம்மரை வெளியே எடுத்து, 'என்கோடர்' என்கிற சி.டி. ரைட்டர் மாதிரியான மெஷினுடன் இணைத்து அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொள்வார்கள்.

பிறகென்ன, போலி கார்டுகள் தயாரித்து ஏ.டி.எம். மெஷின்களில் பணத்தைக் களவாடி விடுவார்கள். இதைத்தவிர, கீ ஹோல் கேமராவை ஏ.டி.எம். வளாகத்தில் எங்காவது மேலே பொருத்தி, அதன் மூலமும் பின் நம்பரைத் தெரிந்து கொள்வார்கள்...'' என்றார்.


''ஷார்ட்டி என்ற குற்றவாளியை எப்படிப் பிடித்தீர்கள்?''

''எங்களுக்கு வந்த புகார்களில் எந்த நேரத்தில் பணம் களவாடப்படுகிறது என்பதை கவனித்தோம்.ஷார்ட்டி கும்பல் இரவு 11 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை ஏ.டி.எம். மையத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தையும், மறுநாள் கணக்கில் அதாவது இரவு 12 மணிக்கு மேல் அதே மையத்தில் காத்திருந்து, மேலும் பணம் எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தோம். இதுதான் முதல் க்ளூ. அந்த நேரத்தில் ... அந்த ஏ.டி.எம். மைய வளாகத்தில் இருந்து சென்ற செல்போன் எண்களைக் கிராஸ் செக் செய்தபோது, குறிப்பிட்ட எண் சிக்கியது. அதுதான், ஷார்ட்டியின் செல்போன். இவன் ஏற்கெனவே எங்களிடம் இரண்டு முறை கிரடிட் கார்டு மோசடியில் சிக்கியவன். அந்த வகையில், இவனது ஜாதகமே இருந்தது. கோவிலம்பாக்கம் ஏரியாவில் வாடகைக்கு வீடு எடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்தான். அவனது வீட்டை நாங்கள் நள்ளிரவு முற்றுகையிட்டபோது, கூட்டாளி களுடன் சிக்கினான். ஷார்ட்டி தயார் செய்த போலி டெபிட் கார்டுகளை வைத்து, 'ரன்னர்ஸ்' என்று அழைக்கப்படும் அவனது கூட்டாளிகளான திவ்யன், உதயகுமார், ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாகப் போய் ஏ.டி.எம். மையங் களில் பணத்தைத் திருடி வருவார்களாம். நாங்கள் ஷார்ட்டி வீட்டில் மூன்று சொகுசு கார்கள், 5 லேப் டாப்கள், விலை உயர்ந்த 10 ஐ-போன்கள், ஸ்கிம்மர் மற்றும் என்கோடர் கருவிகளைக் கைப்பற்றினோம். அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்து இருக்கிறோம். இப்போது வெளிநாட்டில் இருந்து திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வழியை ஆராய்ந்து வருகிறோம். அவ்வப்போது பின் நம்பரை மாற்றி னால் மட்டுமே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக் கொள்ள முடியும்'' என்றார்.

மின் அஞ்சல்: தமிழ் முஸ்லிம் நண்பர்கள் குழுமம்.