Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, ஏப்ரல் 8

அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி..

அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி..

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை பதிகின்றேன்... பகிர்கின்றேன்....


அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.


நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.


மதீனாவை ஆண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற அவரின் தோழர் உமர் கத்தாப்(ரலி) அவர்கள், "தாங்கள் எங்கு செல்கிறீர்கள்..? உங்கள் முதுகில் என்ன மூட்டை..?" என்று வினவினார்கள்.


"உமரே..! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்" என்றார்.


‘ஏன்..? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும் போது, இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை" என்று உமர் ஆவேசமாக சொன்னார்.


அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், "உமரே..! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது..? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது..? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன்" என்றார்கள்.


"அப்படியானால் தாங்கள் அரசாங்க கஜானாவிலிருந்து வேலை செய்வதற்கான எந்தப் பயனையும் அனுபவிப்பதில்லையா..?" என்று உமர் வினவினார்கள்.


"நிச்சயமாக இல்லை. நபிகள் நாதர் அரசாங்க கஜானாவில் இருந்து தன் சுய தேவைக்காக எதனையும் பயன்படுத்துவதில்லை. தனக்கு மட்டுமல்ல, தன் வம்சாவழியினர் அனைவருக்குமே அதை "ஹராம்" என்று தடை செய்திருக்கிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தாத ஒரு வழிமுறையை எப்படி நான் கையாள்வேன்..?" என்றார் அபூபக்கர் (ரலி).


பின்னர், "இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல், தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே "பைத்துல்மால்" என்ற அரசுப் பணம் உள்ள போது அதை எப்படி தாங்கள் மறுக்க முடியும்..? நபிகள் நாதர் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம்" என்றார் உமர். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகினார்கள்.


விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா(ரலி) அவர்கள், "இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு "பைத்துல்மால்" என்ற அரசுப் பணம் ஆகும் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் மாதாமாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை" என்று தீர்ப்பு சொன்னார்கள். அதோடு ஒரு சிறு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.


அரசாளும் மன்னனாயிருந்தாலும், மதி நுட்பத்தால் ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்கிறார் என்றால், அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பது தான் நபித்தோழர்கள் கலீபாக்களாய் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது. அபூபக்கரும் அந்தத் தீர்ப்புக்கு தலைச்சாய்த்தார்.


சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அன்னாரின் மனைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர்(ரலி) அவர்களின் முன் வைத்தார்கள்.


"என்ன இது இனிப்பு..? யார் கொண்டு தந்தார்கள்" என்று வினவினார் அபூபக்கர்(ரலி) அவர்கள்.


"யாரும் தரவில்லை. நானேதான் தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்" என்றார் மனைவியார்.


"நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா..? எவ்வளவு என்று சொல்" என்று கடிந்து கொண்டார்கள் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள்.


அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். அளவிற்கு அதிகமாய்ப் பெற்ற தொகையில் செய்த இனிப்பையும் உண்ண மறுத்துவிட்டார்கள்.


நபித்தோழர்களின் இது போன்ற நன்னடத்தைகள் இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


அபூபக்கர் (ரலி) அவர்கள், தான் மரணிக்கும் தருவாயில் தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள், மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். அவர்களின் பின்னால் அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர்(ரலி) அவர்கள் "அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். இனி ஆட்சிக்கு வரும் எவரும் அவர் வகுத்த எளிமையை மீற முடியாது. இப்பொருட்கள் தவிர்த்து எதனையும் நான் பயன்படுத்தமாட்டேன்" என்றார்கள்.


ஜசகல்லாஹ் கைர் : எம். முஹம்மது யூசுப்

Reference By : www.mudukulathur.com


நன்றி:Cuddalore Muslim Friend.

1 comments:

Abdur RAHMAN சொன்னது…

அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்