Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், அக்டோபர் 25

மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!



மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!

ரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.

மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.



அறுவைசிகிச்சை அரங்குடன் கூடிய இந்த மருத்துவமனையில் மாதம் 45 முதல் 50 அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. அடுத்துத் தீவிரச் சிகிச்சைப் பிரிவும் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் களஞ்சியம் அமைப்பின் 18 வட்டாரத் தலைவர்கள்தான், இந்த மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர்கள். அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படிதான் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனையை அடுத்த ஐந்து ஆண்டுகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பது இவர்கள் கனவு.

இந்தத் திட்டம் எப்படிச் சாத்தியமானது? மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் ராஜபாண்டியனிடம் கேட்டோம். 'இந்த மருத்துவமனை ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. தானம் அறக்கட்டளையின் சுகாதாரத் திட்டத்தின் படிப்படியான வளர்ச்சிதான் இந்த மருத்துவமனை. மதுரையைத் தலைமையிடமாகக்கொண்ட தானம் அறக்கட்டளை, கிராமப்புறப் பெண்கள், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 1989-ம் ஆண்டில் களஞ்சியம், வயலகம் போன்ற குழுக்களை ஏற்படுத்தியது. ஏழைகளைப் பொருளாதாரரீதியாக முன்னேற்றுவதற்காகத்தான், சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகை அதிகமாக இருந்ததால், அவர்களின் பணம் எல்லாம் வீணாகிக்கொண்டே இருந்தது. மருத்துவச் செலவை மட்டுப்படுத்தாமல் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தோம்.

இதைக் கருத்தில்கொண்டு, 1995-ல் தானம் அறக்கட்டளை சுகாதாரத் திட்டத்தை ஆரம்பித்தது. பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, பிரசவங்கள் அனைத்தையும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே நடத்தச் செய்வது என்பதைக் குறிக்கோளாக வைத்திருந்தோம். தாய், சேய் இருவரையும் பாதுகாக்கும் இந்தத் திட்டம் நன்றாக வெற்றியடைந்தது.


இதையடுத்து, மருத்துவ முகாம்கள் நடத்த ஆரம்பித்தோம். தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்து இந்த முகாம்களை நடத்தியதால், அதிகச் செலவு ஏற்பட்டது. நாமே ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தி இந்தப் பணிகளைச் செய்யலாமே என்று கருதி, 2000-ல் கடமலைக்குண்டு என்ற ஊரில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்றை ஆரம்பித்தோம். அது வெற்றியடைந்ததால், போடி, சின்னமனுர், பெரியகுளம் போன்ற ஊர்களிலும் ஆரம்ப சுகாதார மையங்களை ஏற்படுத்தினோம்.
அது வெளிநோயாளிகளுக்கு மட்டுமே பலன் கொடுத்தது. அதனால், அறுவைசிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உதவும் நோக்கத்தில் 'குடும்ப நலப் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கினோம். இதற்காக ஆபரேஷன் தியேட்டர் வசதியுடன் கூடிய 10 மருத்துவமனைகளைத் தேர்வுசெய்து, ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். இந்தந்தச் சிகிச்சைகளுக்கு இவ்வளவு தொகையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டு இருந்தது. நாளடைவில், சில மருத்துவமனைகள் லாப நோக்கத்தோடு, ஒப்பந்தத்தை மீறிக் கூடுதல் தொகை கேட்க ஆரம்பித்தன.


இதுபற்றி தேனி மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் செயல்பட்ட சுமார் 1500 குழுக்களும் ஒன்று கூடி விவாதித்தன. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அந்த ஆண்டிலேயே தேனியில் 10 படுக்கைகளுடன் கூடிய ஒரு மருத்துவமனை தொடங்கினோம். ஆரம்ப சிகிச்சைகளைத் தங்கள் பகுதியிலும், மேல் சிகிச்சைக்குத் தேனி மருத்துவமனைக்கும் வந்த மக்கள், காப்பீட்டுத் திட்டத்தின் பலனால் இலவச சிகிச்சை பெற்றார்கள். இந்த வெற்றிதான் மதுரை மருத்துவமனை தொடங்கும் உத்வேகத்தைக் கொடுத்தது' என்றார் நெகிழ்வுடன்.


தொடர்ந்து பேசிய மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி தில்லைமணி, 'மதுரையில் ஒரு சுகம் மருத்துவமனை ஏற்படுத்துவதற்காக, மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத் தொகை கொடுத்தார்கள். அதோடு சிலரின் நன்கொடைகளையும் பெற்று 2009-ல் மதுரையில் இந்த மருத்துவமனையைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் வெறும் 15 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, இப்போது 25 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. 'ஆர்த்தோ’, 'நியுரோ’ அறுவைசிகிச்சைகளை செய்யும் அளவுக்கு இங்கு வசதிகள் இருக்கின்றன. மக்களே உரிமையாளர்கள், மக்களே நிர்வாகம் செய்கிறார்கள். நல்ல மருத்துவர்களும், மருத்துவ சேவையும் இருக்கிற மருத்துவமனையாக இதை நடத்திவருகிறோம். இங்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதால், களஞ்சியம் உறுப்பினர் அல்லாத பொதுமக்களும் அதிக அளவில் வருகிறார்கள். தேனியிலும் சேலத்திலும் இதுபோன்ற சுகம் மருத்துவமனைகள் வெற்றிகரமாக செயல்படுகின்றன' என்றார் பெருமிதத்துடன்.
பாராட்டப்பட வேண்டிய விஷயம்!
-- 
e-mail from :   முதுவை ஹிதாயத் 

1 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சேவை செய்யும் மருத்துவமனை பற்றிய அறிமுகம்...
வாழ்த்துவோம்.