Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், டிசம்பர் 13

பட்டு உருவாக்கப்பட்டது எப்போது?

நாங்கெல்லாம் சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப் பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வருவதை பார்க்கும்போது.... உங்களுக்கு என்ன தோன்றும்?

பட்டு இழைகளாக மாறிய பட்டுப்பூச்சிகளுக்கு இரக்கப்படுவதா? யாரோ செஞ்ச பாவத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்? என்று கேட்காமல் கேட்கும் பெண்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குவதா? சரி... இது நமக்கு வேண்டாம்.

இந்தப் பட்டு உருவானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை முதன் முதலாக கண்டறிந்த நிகழ்ச்சியே சுவையானது.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு நாம் இப்போது போவோமா...?

அந்த அழகான சீன நாட்டு அரசி அரண்மனைத் தோட்டத்தில் இருந்தபடி கிண்ணத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாள். தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல். அந்தப் பச்சைக்கு மத்தியில், செல்லமாய் தட்டிவிட்ட தென்றல் காற்று மீது பொய் கோபம் கொண்டு ஆடி அசைகிறது ஒரு முசுக்கட்டை செடி.

இயற்கையின் அழகை ஏகத்துக்கும் பருகிய அரசியின் கண்கள் இந்த முசுக்கட்டை செடி மீது படர்ந்த அடுத்த கணம், ஏதோ அவளுக்குள் ஓர் உள்ளுணர்வு எழ... அந்தச் செடியையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள், ரசிக்கிறாள்.

அந்த செடியின் இலை மீது, பார்த்தாலே உவ்வே... என்ற உணர்வினைச் சட்டென்று ஏற்படுத்தும் புழு ஒன்று நெளிந்து கொண்டிருக்கிறது. அரசிக்கு, அந்த புழுவைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிய தனது பார்வையை கூர்மையாக்கிக் கொண்டாள்.

அப்போது, அவளது அழகான சிறிய உதட்டை அவ்வப்போது முத்தமிட்டு கீழ், மேலாக இறங்கிக் கொண்டிருந்த தேநீர் கப் இடம் மாறி இருந்தது. அரைகுறையாக தேநீர் பருகி முடித்தவளின் முகத்தின் திடீர் ஆச்சரிய ரேகைகள் ஓடத் தொடங்கின.

எப்படி இந்த புழுவால் இப்படியெல்லாம் முடிகிறது என்று யோசித்தாள். ஆம்... அந்த முசுக்கட்டை புழு அழகிய இழைகளால் ஒரு கூடு கட்டிக்கொண்டிருந்தது. அந்த சின்னஞ்சிறிய கூடு அரசிக்கு பிடித்துப் போய்விட, ஆர்வ மிகுதியில் அந்த புழுவை நெருங்கினாள்.

அது கஷ்டப்பட்டுக் கட்டி இருந்த கூட்டை, தனது அழகிய கரங்களால் அழகாகவே கிள்ளி எடுத்தாள். தனது முகத்திற்கு நேரே தூக்கிப் பார்த்தவளின் கண்களில், அந்த புழு பற்றிய ஆராய்ச்சி மட்டும் முடிந்ததாக தெரியவில்லை.

திடீரென்று என்ன நினைத்தாளோ, தான் மிச்சம் வைத்திருந்த, லேசாக ஆவி பறந்து கொண்டிருந்த தேநீர் கிண்ணத்திற்குள் அந்த புழு கட்டிய கூட்டைப் போட்டு விட்டாள். தேநீர் கிண்ணத்தில், தண்ணீரில் உயிருக்கு போராடுபவன் போல் மிதந்து மிதந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் புழுவின் கூட்டைப் பார்க்க அரசியின் முகத்தில் மீண்டும் திடீர் மாற்றம்.

தேநீருக்குள் கிடந்த புழு கூட்டை வெளியே எடுத்துப் போட தயக்கம் காட்டிய அவளது கைகள், நீண்டு கொண்டிருந்த புழு கூட்டின் ஒரு பகுதியை மட்டும் பிடித்து இழுத்தன. என்ன ஆச்சரியம்... ஏதோ பளபளக்கும் நூல் வந்தது.

ஒரு புழுவின் கூட்டுக்குள் பளபளக்கும் இப்படி ஒரு பொருள் எப்படி வந்தது என்று தனது இளம் மூளையைக் கசக்கினாள் அரசி. தனது ஆடையில், இதே பளபளப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்ற பகல் கனவும் அப்போது அவளுக்குள் திடீரென்று உதயமாகி உசுப்பேற்றியது.

தனது ஆசைக் கணவனான அரசனிடம் தனது மேலான இந்த விருப்பத்தை சொன்னாள். அரசி சொன்னால் முடியாது என்று சொல்வானா அரசன்? உடனே உத்தரவு பறந்தது. "புழு கூட்டில் இருந்து பளபள நூலைக் கொண்டு ஆடை நெய்ய வேண்டும். நாளையே அந்த ஆடை, என் ராணியின் மேனியை அலங்கரிக்க வேண்டும்" என்று கம்பீரத்தோடு சொன்னான் அவன்.

ஆடை நெய்பவன் அரசனிடம் பயந்து, பயந்து அந்தக் கேள்வியை கேட்டான். "மன்னா... இந்த ஒரு நூலை வைத்து தாங்கள் விரும்பும் அலங்கார ஆடையை நெய்ய முடியாது. இது போன்று பல நூல்கள் வேண்டும்" என்றான் அவன்.

அப்போதுதான் அரசனுக்கும் உண்மை புரிந்தது. அரசி, முசுக்கட்டை செடியில் கண்டுபிடித்த புழு கூடுகளை எங்கிருந்தாலும் கொண்டு வாருங்கள் என்று தனது பணியாளர்களுக்கு அடுத்த கட்டளையை அவசரமாக பிறப்பித்தான். பணியாளர்கள் நாடு முழுவதும் முசுக்கட்டை செடிகளை தேடி ஓடினார்கள். அவற்றை எல்லாம் வெட்டியெடுத்து சேகரித்தார்கள்.

அந்த செடிகளில் கூடு கட்டியிருந்த புழுக்களின் கூடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து, அதில் இருந்த நூல்களை வெளியே எடுத்தனர். அவற்றைக் கொண்டு ஆடைகளை நெய்தனர். எதிர்பார்த்ததை விட இன்னும் அதிகமாய் பளபளத்தது அந்த ஆடை.
அந்த பளபள ஆடையை, இந்த உலகில் முதன் முதலில் அணிந்து அழகு பார்த்த அந்த அரசியின் பெயர் சி-லிங்-ஷி. கி.மு.2600ல் சீனாவை ஆட்சி செய்த ஹவாங்-டி என்ற மன்னனின் மனைவி தான் அவள்.

அரசி முதன் முதலாக அணிந்து அழகு பார்த்த இந்த ஆடைக்கு என்ன பெயரிடலாம் என்று யோசித்த மன்னன் ஹவாங்-டி, அதற்கு ஷி என்று அரசியின் பெயரையே சூட்டினான்.

சீன மொழியில் ஷி என்றால் பட்டு என்று பொருள்.

பட்டுவை முதன் முதலாக உலகிற்கு அறிமுகம் செய்த சீனர்கள், அந்தப் பார்முலாவை தங்களுக்குள் சிதம்பர ரகசியமாகவே வைத்திருந்தனர். வேறு யாருக்கும் தெரியவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான், அந்தத் தொழில் நுட்பம் கொரியா வழியாக ஜப்பானை அடைந்தது. ஜப்பானை இந்த தொழில் சென்றடைந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்.

முதன் முதலில் பட்டு சீனாவில் தான் உருவானது என்று பண்டைய காலம் முதலே கூறப்பட்டு வருகிறது. அத நேரத்தில், நம் இந்தியாவில் சீனாவுக்கு முன்பே பட்டு வந்து விட்டது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

சமஸ்கிருத இலக்கியத்தில் கி.மு. 4 ஆயிரமாவது ஆண்டிலேயே இந்தியாவில் பட்டுத் தொழில் நடைபெற்றதாக கூறப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். என்ன தான் இருந்தாலும், பட்டின் கண்டுபிடிப்பு இந்த மனித சமுதாயத்துக்கு கிடைத்த பெரிய பரிசுதானே..?




நன்றி; சகோதரி புதைனா.லப்பைக்குடிகாடு.காம்