Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜூலை 2

அறிவியல் இனி வாழ்விற்கே ! அழிவதற்கல்ல !!

உலகுக்குத் தீமை பயக்கும் அணுமின் நிலையங்களை இனி அமைப்பதில்லை என ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் 2022-க்குள் மூடிவிடவும் ஜெர்மனி முடிவு எடுத்துள்ளது.வளர்ந்த, தொழில் வளர்ச்சி அடைந்த  நாடுகளில் இத்தகைய முன்னுதாரண முடிவினை மேற்கொண்ட முதல் நாடு ஜெர்மனியாகும்.
கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜெர்மனியில் ஏஞ்செலா மெர்கெல் பிரதமராக இருக்கிறார்.



இவரது தலைமையில் இப் பிரச்னை தொடர்பான கூட்டம் 7 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மெர்கெல் பேசியபோது : "எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார்.
இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் கூறியதாவது :
"இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும்" என்றார்.
அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது.  இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செர்னோபில் அணு உலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் சம்பவம் நடந்ததும், ஜெர்மனியில் 1980-க்கு முன் நிறுவப்பட்ட 7 பழைமையான அணுமின் நிலையங்களின் செயல்பாட்டை 4 நாள்களுக்கு அரசு நிறுத்திவைத்தது. நாட்டின் 40 சதவீத மின் தேவையை இந்த 7 அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஜெர்மனியின் இந்த முன்னுதாரணத்தினை மற்ற நாடுகளும் பின்பற்றினால் பாதுகாப்பான, பசுமையான எதிர்காலம் இந்த பூவுலகிற்கு சாத்தியப்படும்.