Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, ஆகஸ்ட் 12

அரட்டைக்கு மட்டுமா ஃபேஸ்புக்?


அரட்டைக்கு மட்டுமா ஃபேஸ்புக்?
முகநூல் நண்பர்கள் சிலர் , சங்கம் அமைத்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
 சம்பவம் - 1
புதுவையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சர்மிளா. அவளது தந்தை சக்திவேலிடமிருந்து முகநூல் நண்பர் வசந்தகுமாருக்கு ஒரு கடிதம் வருகிறது. சர்மிளாவின் இதய அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் இதில் புதுவை முதலமைச்சர் நிதியிலிருந்து 1,40,000 கிடைத்துள்ளதாகவும் சில இடங்களில் கடன்வாங்கி அவரே 30,000 ரூபாய் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மீதமுள்ள பணம் சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகக் கூறியிருந்தார் சக்திவேல் (கடிதத்துடன் மருத்துவமனை ஆவணங்களையும் இணைத்திருந்தார்).
உடனே இதுகுறித்து தனது முகநூல் சுவரில் நிலைத்தகவல் எழுதினார் வசந்தகுமார். அடுத்த சிலதினங்களிலேயே மீதம் தேவையான பணத்தை முகநூல் நண்பர்கள் முகப்பேர் எம்எம்எம் மருத்துவமனை வங்கிக் கணக்கிலும் நேரிலும் சென்று கொடுத்தனர். வசந்தகுமார் மற்றும் முகநூல் நண்பர்களான கலாராணியும் அவரது கணவரும் நேரில் சென்று சிறுமியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டனர். இப்போது, சிறுமி சர்மிளா சிகிச்சை முடிந்து நலமாக இல்லம் திரும்பி விட்டார். அதோடு, முகநூல் நண்பர்கள் புதுச்சேரி சென்று முதல்வர். ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
 சம்பவம் - 2  
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு மில் தொழிலாளியின் ஒரே மகன் சிவசங்கர். தாயார் லதா குடும்பத்தலைவி. எட்டாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு 9ம் வகுப்பு செல்லும் கனவுகளோடு இருந்தவனுக்கு திடீரென்று கையில் வீக்கம். கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பதாகக் கூறி, உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு சோதனைகள் செய்த மருத்துவர்கள் குழு, ரத்தப் புற்றுநோய் தீவிரமடைந்து காணப்படுவதாகவும் பலமான வீரியமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்கட்ட சிகிச்சையின்போது, குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினர். அதிலும் குறிப்பாக ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (PLATTELET) மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து விட்டனர்.
சக முகநூல் நண்பர் கயல்விழி லட்சுமணன் மூலம் இதுகுறித்துத் தகவல் அறிந்த வசந்தகுமார் மருத்துவமனை விரைந்தார். சிறுவனைப்போய்ப் பார்த்தார். தைரியமளித்தார். முகநூலில் சிறுவனுக்கு ரத்தம் வேண்டும் என்பதை நிலைத்தகவலாகவும் எழுதினார். அதனைப் படித்த நண்பர்கள், ஒருமாத சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை அட்டவணை போட்டுக்கொண்டு தொடர்ந்து வழங்கினர்.
தவிர, வசதியில்லாத அந்தச் சிறுவனின் மற்ற மருத்துவச் செலவுகளுக்காகவும் முகநூல் மூலம் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு முகமே அறியாத பல நபர்கள் வந்து சிறுவனின் தாயார் லதாவிடம் பண உதவி அளித்தனர். இதன் மூலம் கிட்டதட்ட ஒன்றரை லட்ச ரூபாய் பண உதவி கிடைத்தது. தற்போது முதல்கட்ட சிகிச்சை முடிந்து ஓரளவு உடல்நிலை தேறியுள்ள சிவசங்கர் அடுத்தகட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கிறான்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் குறிப்பிடப்படும் வசந்தகுமார் யார்? அவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன உறவு?
வசந்தகுமார் ஒரு கணினி வரைகலைஞர் (Graphic Designer). தனது முகநூல் நண்பர்களுடன் இணைந்து, ‘முகநூல் நண்பர்கள் சங்கம்’ அமைத்து, பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவருகிறார். மேலே கண்ட இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் முகநூல் நண்பர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களே. இந்தச் சங்கத்தின் பொறுப்பாளரான வசந்தகுமார் பேசுகிறார்.
சங்கம் கண்ட முகநூல்
"அடிப்படையில் நான் ஓர் ஓவியன், விளம்பரப் பதாகைகள், விளம்பர போர்டுகள் போன்றவைகளை பத்தாண்டுகளுக்கு முன் கையாலேயே வரைந்து டிசைன் செய்துவந்தேன். விஞ்ஞான வளர்ச்சியால் நானும் கணினி கற்று அதே வேலையை கணினி மூலம் செய்ய ஆரம்பித்தேன். என் வேலை பெரும்பாலும் இணையத்தை சார்ந்திருந்ததால் ஓய்வு நேரம் கிடைக்கையில் விளையாட்டாக முகநூல் வர ஆரம்பித்தேன். கிராஃபிக் டிசைனராக நான் இருப்பதால் நண்பர்களின் பிறந்தநாள், மணநாள் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகள் டிசைன் செய்து அதனை நிலைத்தகவலாகப் போட்டேன். அதன் மூலம் நண்பர்கள் மகிழ்ந்தார்கள். நட்பு வட்டம் பெருகியது.
முதன் முதலில் நண்பர்களை வைத்து இணையம் மூலமாகவே பட்டிமன்றம் நடத்தி அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால் என் நட்பு வட்டம் மேலும் பெருகியது. அதன் விளைவாக பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை வெளியிடுவதோடு நில்லாமல் திடீர் குருதித் தேவைகளையும் நிலைத்தகவலில் அறிவிப்பு செய்து சில அறுவைச் சிகிச்சைகளுக்கு குருதி பெற்றுக் கொடுத்தோம். பின்னர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் ஆதரவற்றோர் ஆசிரமங்களில் உணவளிக்க விரும்பினர். அதை இங்கிருந்தே நாங்கள் செய்தோம். அவற்றையும் நிலைத்தகவலாகப் போட்டு மகிழ்ந்தோம்.
அந்நிலையில்தான் இதே செயலை ஏன் இன்னும் விரிவாக ஒரு பதிவு பெற்ற அமைப்பாக செய்யக் கூடாது என்று நினைத்தபோது எழுந்ததுதான் FFF. அதாவது, FACEBOOK FRIENDS FOUNDATION ˆ‡. இந்த அமைப்பை ஓர் அறக்கட்டளை போன்ற கட்டமைப்புடன் நிறுவி உள்ளோம். தவிர, அரசில் பதிவும் செய்திருக்கிறோம். தற்போது வரை எங்கள் சங்கத்தில் உலக அளவில் 170 உறுப்பினர்கள் உள்ளனர்.
கொள்கை ரீதியான முடிவுகளோ அல்லது பண பரிவர்த்தனைகளோ நான் தனி ஆளாக ஏதும் செய்திட இயலாத வண்ணம் சங்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் பெயரைக் கூட முகநூலில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் நண்பர்கள்தான். எங்கள் ஸ்லோகனான ‘நட்பு சொல்வோம் நற்பணி செய்வோம்’ என்கின்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்ததும் எங்கள் நண்பர்கள்தான்.
எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆரம்பம் முதலே ஆக்கமும் ஊக்கமும் அளித்து உற்சாகப்படுத்தி வரும் இருவரை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் சந்திராயன் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். முகநூல் மூலம் அவரும் பல சேவைகள் ஆற்றி வருகிறார். அந்த அனைத்து சேவைகளிலும் எங்களையும் இணைத்துக்கொண்டு எங்கள் சங்கத்துக்குப் பெருமை சேர்க்கிறார். அவரோடு இணைந்து இதுவரை உயர்கல்வி கற்க வழி இல்லாத ஏழை மாணவர்கள் பலருக்கு 1,50,000 ரூபாய் வரை முகநூல் மூலமே நன்கொடைகள் பெற்று உதவி அளித்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களை இன்று வரை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் மற்றொரு அன்பு நண்பர் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ். நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான சிறு சிறு நன்கொடைகளையும் வழங்கி உள்ளார். முக்கிய நிகழ்வுகளில் நேரடியாக வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்.
எங்களது கவனத்திற்கு வரும் விஷயங்களின் உண்மைத் தன்மையை முதலில் ஆராய்கிறோம். உதவி தேவைப்படுவது உண்மைதான் என்னும் பட்சத்தில் முகநூலில் நிலைத்தகவல் போடப்படும். அதைக் கண்ட நண்பர்கள், தானே முன்வந்து உதவிகள் அளிப்பார்கள். ஓர் ஊரில் ஒருவருக்கு உதவி தேவைப்படும் நிலையில் அந்த ஊருக்கு அருகிலுள்ள எங்கள் நண்பர்கள் சென்று அந்த உதவியைச் செய்து வருகிறோம். மதுரை, சேலம், காஞ்சிபுரம், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறோம்.
எங்களின் ஒரே தைரியம், ஆயிரக்கணக்கான முகநூல் தோழமைகளும் தோழமைகளின் தோழமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கைவிட மாட்டார்கள் என்பதுதான்" என்று கூறினார் வசந்தகுமார்.
பெ. கருணாகரன்

2 comments:

கோமதி அரசு சொன்னது…

‘முகநூல் நண்பர்கள் சங்கம்’ அமைத்து, பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவருகிறார். மேலே கண்ட இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் முகநூல் நண்பர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களே. இந்தச் சங்கத்தின் பொறுப்பாளரான வசந்தகுமார் //

திரு. வசந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விஞ்ஞானி திரு. அண்ணத்துரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Jafarullah Ismail சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி கோமதி அரசு.