Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஆகஸ்ட் 31

கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!


கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்
“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.
நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா. அநேகமாக இன்றைய தினசரிகள் பல பெரும்பான்மை இப்படித்தான் வெளியிட்டிருக்கின்றன.
முதல் பக்க கசாப் செய்திக்கு மேலே வேளாங்கண்ணி கொடியேற்று விழாவை போட்டிருப்பதன் மூலம் தினமலர் தனது சர்வமத நேயத்தை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ஆனால் அது பொய் என்பதற்கு அது முன்னிலைப்படுத்தாமல் விட்ட ஒரு செய்தி உண்டு. கசாப்புக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிய தினமலர் குஜராத் கலவரம் குறித்த நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் காலரை பக்க செய்தியாக பத்தோடு ஒன்றாக வெளியிட்டிருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”. கசாப் செய்தி பாணியில் வெளியிடுவதாக இருந்தால், “97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு” என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்? கசாப் மீதான தீர்ப்புக்கு முழு இந்தியாவுமே வரவேற்பதாக காட்டிய தினமலர் இந்த செய்தியில் தீர்ப்பை வரவேற்பதாக யாருடைய கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் தினமலருக்கே கூட இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்?
கசாப்புக்கு தூக்குக்கயிறு போட்ட படத்தை போட்ட தினமலர் இங்கு குடும்பப் பெண் போன்ற அடக்கத்துடன் சோகமாக நடக்கும் கோட்னானி படத்தை வெளியிட்டிருக்கிறது. நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட ஒருவரது படம் கூடவா தினமலரிடம் இல்லை? மற்றபடி இந்த தீர்ப்பினால் பா.ஜ.க, மோடிக்கு பின்னடைவாகவெல்லாம் தினமலர் நினைக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியில் அந்த இதழின் கருத்தாக ஒன்றுமில்லை.
இணையத்தில் தினமலரின் தலைப்பு என்ன தெரியுமா? ” பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போகிறார்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர் !“ இதே போன்று பாபு பஜ்ரங்கிக்கும் தலைப்பு கொடுப்பார்களா? பொதுவில் கசாப்பு கடை யார் வைத்திருப்பார்கள்? தினமலரின் கொண்டாட்டத்தை இதை விட சிறப்பாக எந்த தலைப்பும் கொடுத்துவிடாது.
தூக்குக் கயிற்றில் தொங்கும் கசாப்பின் படத்தோடு “கசாப் தூக்கு தண்டனை உறுதி” என்று தலைப்புச் செய்தியாக தினமணியும் வெளியிட்டிருக்கிறது. இங்கும் வழக்கு கடந்து வந்த பாதை, தீர்ப்பை வரவேற்ற தலைவர்களின் கருத்து எல்லாம் உண்டு. ஆனாலும் தினமணி ‘நடுநிலை’ பத்திரிகையாக காட்டிக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் பக்கத்தின் கீழேயே நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு குறித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.
“கரசேவகர்கள்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் என்று ‘வரலாற்றை’ கவனமாக ஆரம்பிக்கிறது தினமணி. வி.இ.பரிஷத் நடத்திய பந்தில் ஒரு கும்பல் நடத்திய வன்முறையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக எச்சரிக்கையாக தெரிவிக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று இரு காங்கிரசு தலைவர்கள் கூறியதை வெளியிட்டிருக்கும் தினமணி, பா.ஜ.கவிற்கு இது பின்னடைவாக இருக்குமென்று கருதப்படுவதாக கூறுகிறது. யார் அப்படி பின்னடைவு என்று கருதுகிறார்கள்? நிச்சயம் தினமணி இல்லை என்பதால்தான் அந்த படுகிறது எனும் அனாமதேய முகம்.
இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தச் செய்திக்கு தினமணி போட்டிருக்கும் படம் என்ன தெரியுமா? “நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தன் மகளைக் கண்டு கண்கலங்குகிறார்” என்ற வரிகளுடன் ஒரு படம். போலீசு வாகனக் கம்பி வலைக்குள்ளே அழுதுகொண்டிருக்கும் தந்தை; கம்பியை எட்டிப்பிடித்தபடி அப்பாவைப் பார்த்துக் கலங்கும் ஒரு சிறுமி. நரோடா பாட்டியாவில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்ட கொடுமையை மறக்கச் செய்ய இந்த படம் ஒன்றே போதும்.
பார்ப்பவர்கள் அந்த சிறுமியின் கதறலில் இந்து தர்மத்திற்காக சிறைக்குச் செல்லும் அந்த ‘தியாகி’யை நினைத்து வருந்துவது உறுதி.
பஜ்ரங் தள் தலைவரலான பாபு பஜ்ரங்கி சிறைக்குச் செல்லும் போது தனது கட்டை விரலை உயர்த்தி இறுமாப்புடன் செல்கிறார். இன்னும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், முக்கியமாக தேசத்தின் மனசாட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களின் காவி ஆதரவு….. எல்லாம் இருக்கையில் அவர் ஏன் வருந்த வேண்டும்?
கசாப்புக்கு தண்டனை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம். தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?
நன்றி : வினவு தளம் .


1 comments:

தமிழ் உலகம் சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.