Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 29

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, தென்னூருக்கு திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

கும்பகோணம் கோட்டத்தை உள்ளடக்கிய கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனங்களை பதிவு செய்யவும் தஞ்சையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று வந்தனர். இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், கடந்த 1968-ம் ஆண்டு கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டு வாகன ஆய்வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது.

கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலத்தில், வாகனப் பதிவு, விபத்து ஆய்வுச் சான்று, ஒட்டுநர் உரிமம், உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கன ரக வாகனம், வெளி மாநிலங்களுக்கு செல்ல பர்மிட் போன்றவைகளுக்காக, தஞ்சைக்குச் செல்லவேண்டி இருந்ததால், இந்த அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்ற அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 19.2.2009 அன்று இது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டங்களோடு, வலங்கைமான் வட்டம் சேர்க்கப்பட்டு பதிவு எண் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரிலிருந்து, கடந்த ஆண்டு திருவிடைமருதூர் சாலை விஜயலட்சுமி நகரில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் மீண்டும் தென்னூருக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அலுவலக இடமாற்றம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், திடீரென இந்த அலுவலகம், பட்டீசுவரத்தை அடுத்த தென்னூர் கிராமத்தில் கட்டப்பட்டு செயல்படாமல் இருந்த ஊராட்சி ஒன்றிய தொழில் பயிற்சிக்கூட அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. இதனால், அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

[தினமணி செய்தி]