Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, நவம்பர் 19

பக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி!

بســــم الله الـر حـمـن الرحـــيــم

இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை நம்பச்சொல்கிறது.
ஆனால் அல்லாஹ்வை நம்புவதற்கு கட்டுக் கதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, அவனை நம்பிக்கை கொள்ள சொல்கிறது.

அதுபோல் முஹம்மது[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதராக நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.
அதற்கும் கட்டுகதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அறிந்து, அதைக்கொண்டு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.

இத்தகைய பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் சிலர் பக்தியின் பெயரால் சில நேரங்களில் செய்யும் கூத்துக்கள், இஸ்லாத்தையும் மூட நம்பிக்கையுடைய மார்க்கமாக மாற்றார்கள் எண்ணுவதற்கு வழிகோலுகிறது. ஒரு மரத்திலோ, காய்கறியிலோ, கல்லிலோ, முள்ளிலோ, கால்நடையிலோ அல்லது வேறு எதிலாவது அல்லாஹ் எனும் எழுத்து உண்மையில் தோன்றினாலும் அப்பொருளுக்கு எந்த புனிதமுமில்லை. அதனுடைய இயற்கையான மதிப்பை விட அப்பொருளுக்கு கூடுதல் மதிப்புமில்லை. அதுபோலவே ஒரு பொருளில் முஹம்மது என்ற அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பெயர் உண்மையில் தோன்றினாலும், அப்பொருளும் அதன் இயற்க்கை தன்மையை விட கூடுதல் புனிதம் பெற்றுவிடாது.

இஸ்லாமிய நிலைப்பாடு இவ்வாறிருக்க, தியாகத்திருநாளை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக டெல்லியில் ஆடு விற்பனை நடந்துள்ளது. அந்த விற்பனை செய்யும் இடத்தில் ஒரு ஆட்டின் மீது, 'அல்லாஹ்' என்ற எழுத்தும், 786 என்ற எண்னும் இருந்ததாம். எனவே அந்த ஆட்டின் விலை நான்கரை லட்சம் என ஆட்டின் உரிமையாளர் தீர்மானித்துள்ளார். அதுபோல் அவரது மற்றொரு ஆட்டின் மீது 'முஹம்மது' என்ற பெயர் இருந்ததாம் . எனவே அந்த ஆட்டின் விலை இரண்டரை லட்சம் என அவர் தீர்மானித்துள்ளார். இவ்விரு ஆடுகளையும் வாங்க கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த இரு ஆடுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது.

அதிகபட்சம் பத்தாயிரம் மதிப்புள்ள ஆடுகள் லட்சங்களில் விற்கப்பட்டதற்கு காரணம் மூடநம்பிக்கை என்ற ஒன்றன்றி வேறு காரணம் உண்டா? அல்லாஹ் என்றோ-முஹம்மது என்றோ எழுதப்பட்டிருப்பதால் அந்த பிராணி ஆடு என்ற நிலையிலிருந்து வேறு புனித நிலைக்கு மாறிவிடுமா என்ன? சரி இவ்வளவு பக்தி சிரத்தையோடு லட்சங்களை கொட்டி வாங்கியவர்கள் அந்த ஆட்டை என்ன செய்யப் போகிறார்கள்? குர்பானி கொடுப்பார்கள். அந்த ஆட்டின் மீது அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளதால் அல்லாஹ்வையே குர்பானி கொடுத்ததாக அர்த்தமா? [அஸ்தஃபிருல்லாஹ்].

சரி! அந்த ஆட்டை குர்பானி கொடுக்காமல் வளர்த்தால் கூட சில ஆண்டுகளில் செத்து விடுமே? ஆடு செத்து விட்டால் அல்லாஹ் செத்து விட்டான்[அஸ்தஃபிருல்லாஹ்]. என்று அர்த்தமா?

சிந்தியுங்கள் முஸ்லிம்களே! ஒரு பொருள் அதன் இயற்கை வடிவத்திலிருந்து ஒரு போதும் மாறாது. புனிதமாகாது. ஒரு பொருளை அவ்வாறு புனிதமானதாக கருத வேண்டுமெனில், அதற்கு அல்லாஹ்வோ-அவனது தூதரோ கூறிய சான்றுகள் வேண்டும். எனவே கண்டதையும் கற்பனையால் புனிதமாக்கும் சிலரைப் போல் முஸ்லிம்களும் ஆகவேண்டாம் என்றும், அல்லாஹ்வின் மார்க்கத்தை கேலிக்குள்ளாக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும்.

மெயில்: முகவை அப்பாஸ்