Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஜனவரி 26

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.

வெளிநாட்டு வங்கிகளில் யார், யார் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியது. மத்திய அரசு இதை ஏற்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர மத்திய அரசு எத்தகைய உத்திகளைப் பின்பற்ற உள்ளது என்பது தொடர்பான கொள்கை விளக்கத்தை வெளியிட நிதி அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.

சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.

அதேநேரம், இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம் இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான், மேலும் விவரங்களைப் பெற முடியும், என்றார்.

Source: sambala87(சூரியன்) http://site4any.wordpress.com