Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஜனவரி 18

இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!

இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!


ஊதாரித்தனம் என்றால் என்ன? அதை வரையறுக்க முடியுமா? அந்த குணம் நம்மிடம் இருந்தால் அதிலிருந்து வெளியே வருவது எப்படி? விளக்குகிறார் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்டின் இயக்குநரும் பிரபல நிதி ஆலோசகருமான சொக்கலிங்கம் பழனியப்பன்.

”ஊதாரித்தனம் பலரிடமும் பல வகையிலும் இருக்கிறது. தனிநபர் ஆகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும், இல்லை நாடுகள் ஆகட்டும்… அனைத்து இடங்களிலும் இது இருக்கிறது. அத்தியாவசியமான தேவைகளை அடைய நினைப்பது ஆசை. அவசியமோ, இல்லையோ, கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி அனுபவிப்பது ஊதாரித்தனம். வருமானம் குறைவாக இருக்கும்

ஒருவருக்கு அவரால் சமாளிக் கக்கூடிய அளவில் விலை குறைவாக உள்ள இரு சக்கர வாகனமே போதும். சும்மா பந்தா காட்டுவதற்காக பல்ஸர் மாதிரியான விலை உயர்ந்த வண்டியை கடனில் வாங்குவதுதான் ஊதாரித்தனம்.

இந்த குணம் இடம், நபர், காலத்தைப் பொறுத்து மாறுபடுவதால் நம்மால் யாரையும் ஊதாரி என்று எளிதில் சொல்லிவிட முடிவதில்லை. அப்படியே சொன்னாலும், அதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புக் கொண்டுவிடுவதில்லை.


சிறுவயது முதலே நம் குழந்தை களிடம் இந்தக் குணம் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. இதற்கு முதலில் பெற்றோர்கள் பொறுப்போடு செலவு செய்பவர்களாக இருக்க வேண்டும். விலை பார்க்காமல் துணிமணிகளை வாங்கும் பெற்றோர்களைப் பார்த்து வளரும் மகனுக்கோ, மகளுக்கோ அது இயல்பான விஷயமாக நினைக்கத் தோன்றி விடுகிறது. அவன் வளர்ந்து பெரிய வனாகி துணி எடுக்கும் போது தன் பெற்றோரைவிட அதிகமாகச் செலவு செய்யவே நினைப்பான்.எது தேவை, எது அநாவசியம் என்பதைக் குழந்தைப் பருவத்தி லேயே கற்றுக் கொடுத்துவிட்டால், நாளைக்கு அந்தக் குழந்தையின் பொருளாதார நிலை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

எந்தவிதமான ஊதாரித்தனமும் இல்லாமல், அத்தியாவசிய செலவு களை மட்டும் செய்பவர்கள் என்றுமே வெற்றிகரமான மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் சுயதிருப் திக்காகவோ அல்லது வெட்டி பந்தாவுக்காகவோ ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் ஆரம்பத்தில் வெற்றியாளர்கள் போலத் தோன்றினாலும், கடைசியில் தோல்வியையே தழுவுவார்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் ஊதாரித்தனமாக செலவு செய்வதை விட்டு, அவசியமானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவசியமானதிலும் ‘வேல்யூ ஃபார் மணி’ என்ற கூற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு கார் மற்றும் வீடு ஆகிய இரண்டுமே தேவை என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் தற்போது 8 லட்சம் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அவர் மாருதி ஆல்டோ காரை 3 லட்சத்துக்கு வாங்கிக் கொண்டு, மீதி 5 லட்சத்தை வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு மொத்தப் பணத்தையும் செலவழித்து, மாருதி எஸ்.எக்ஸ் 4-ஐ வாங்குவது ஊதாரித்தனம்தான்.

சில நேரங்களில் பெரிய செலவில் சில விஷயங்கள் நடக்கும். ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் அந்த விஷயங்கள் நடக்கும் பட்சத்தில் அதை ஊதாரித் தனம் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மிகப் பெரிய ஸ்டேடியம் ஒன்றை சென்னையில் அமைக்க நினைப்பதோ, அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதற் காக உலகிலேயே மிகப் பெரிய துறைமுகத்தை மும்பையிலோ, கொல்கத்தாவிலோ அமைக்க நினைப்பதோ ஊதாரித்தனமாகாது. ஆனால், நான்கு ஊருக்கு சோறு போட்டு, இல்லாத அமர்க்களமெல்லாம் செய்து திருமணத்தை நடத்துவது நிச்சயம் ஊதாரித்தனம்தான்.

ஊதாரித்தனமான செலவினால் சமுதாயத்திற்கு பயனில்லாமல் போவதோடு, பல தீய சக்திகளை சமுதாயத்தில் உருவாக்குவதற்கு ஒரு காரணியாகவும் அமைந்து விடுகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு போன்ற பலவற்றிற்கும் ஊதாரித்தனமான செலவு காரணமாக அமைந்து விடுகிறது.

சிலர் பணமில்லாத போதும் வாயையும் வயிற்றையும் கட்டி வாழ்கிறார்கள். ஆனால், ஓரளவு பணம் கிடைத்துவிட்டால் அதை விருப்பம் போல செலவு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். தொழி லதிபர் ஜே.ஆர்.டி. டாடாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தக் காலத்திலேயே பெரும் பணக்காரராக இருந்தார். ஆனால் தனது கடைசி மூச்சுவரை கம்பெனி யின் குவார்டர்ஸில்தான் வாழ்ந்தார். அவருக்கென்று தனி வீடு எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபட் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய அதே வீட்டில்தான் இன்றும் வசித்து வருகிறார். ஏற்கெனவே இருக்கும் வீடே போதும் என்கிற போது இன்னொரு பெரிய வீட்டுக்கு ஆசைப்படுவது ஊதாரித்தனம்தானே?

ஊதாரித்தனமாக செலவழிப்பது நமது பாரம்பரியமல்ல என்றாலும் இன்றைய இளைஞர்களிடம் இஷ்டம் போல செலவழிக்கும் பழக்கம் பெருகி வருவது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. சிறிய வயதிலேயே பெரும் பணம் அவர்களிடம் புழங்குவதால்தான் நினைத்ததை வாங்கி அனுபவிக்க நினைக்கின்றனர். ஆனால், பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏன் வாரிக் கொட்ட வேண்டும்? அவசியமான செலவுகளை மட்டும் செய்துவிட்டு, மிஞ்சி இருக்கும் பணத்தை பாதுகாப்பான, அதே நேரத்தில் பல மடங்கு பெருக்கித் தருகிற திட்டங்களில் போட்டு சேமிக்கலாமே! ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டும் என்கிற பழமொழியை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் மறக்கக்கூடாது.”

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/2011/01/17/isi/