Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, பிப்ரவரி 25

முஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை

இலக்கு 2020 அல்ல 2050 !

பள்ளப்பட்டியில் ஆளூர் ஷாநவாஸ் எழுச்சியுரை!


ரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இயங்கி வரும் உஸ்வா நூலகத்தின் சார்பில், 'முஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை' என்றத் தலைப்பில்,
கடந்த 20 -11 -2010 அன்று மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மெளலவி.முபாரக் பாஷா உலவி அவர்களின் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லியாவுதீன் சேட் மற்றும் சமூக ஆர்வலர் அஸ்கர் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில், மெளலவி.முஹம்மது யூசுப் தாவூதி அறிமுக உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆவணப்பட இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது:

''இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணிக்கு இரத்த சாட்சியாக இந்த ஊர் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணின் மைந்தரான கலீலுர் ரஹ்மான் ஹசரத் அவர்கள் நேதாஜிக்கு மிக நெருக்கமானவராகவும், அணுக்கமானவராகவும் இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தியவர். மிகச் சிறந்தப் பத்திரிகையாளர். தனது எழுத்துக்களால் விடுதலை வேட்கையை விதைத்தவர். அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த மண்ணில் உங்களோடு உரையாடக் கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களின் நிலை நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது, நாளை எப்படி இருக்க வேண்டும் என்றத் தலைப்பின் கீழ் இங்கே நாம் திரண்டிருக்கிறோம். நேற்று என்பது நமக்கு இழப்புகளாலும், வலிகளாலும், வேதனைகளாலும் நிரம்பியது.எனவே நேற்று நமக்கானதல்ல. இன்று நாம் அந்த வலிகளிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் மீள எழுவதற்கான வழிகளைத் தேடாமல் ஏதேதோ வகையில் சிதறிக் கிடக்கிறோம். எனவே இன்றும் நமக்கானதல்ல. நாளையையாவது நமக்கானதாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். நாளையும் நமக்கானதாக இல்லை என்றாகி விட்டால் இந்த சமுதாயத்தை எவராலும் பாதுகாக்க முடியாது.

நேற்றும் இன்றும் நம்மை இறைவன் பாதுகாத்தான். நாளையும் நம்மை நிச்சயம் அவன்தான் பாதுகாப்பான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவன் சில வழிமுறைகளை நம்மிடம் தேடச் சொல்லியிருக்கிறான். அதை நாம் தேடியிருக்கிறோமா என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி. இறைவன் நமக்கான உணவை நாம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்து விட்டான். அப்படியிருந்தும் நாம் ஏன் உணவைத் தேடி பயணிக்கின்றோம்; ஏன் தொழில் செய்கின்றோம் என்றால் நாம் தேடுகின்றோம்.
அது போலத்தான் நமது பாதுகாப்புக்கு இறைவன் இருக்கிறான் என்றாலும், அந்தப் பாதுகாப்பை தேடிக் கொள்கிற இடத்தில், பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்தக் கடமையும் பொறுப்பும் நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை நாம் இனியும் நிறைவேற்றத் தவறினால் பாதுகாப்பற்றவர்களாக மாறி, நிராயுதபாணிகளாக தெருவில் நிற்போம்.

இன்றைக்கு தொழில் துறையில் நாம் வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்து வருகின்றோம். அதில் வீறு கொண்டு எழுந்து வருகின்றோம்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகின்றோம். புலம்பெயர்ந்து வணிகம் செய்கின்றோம். இப்படியெல்லாம் நாம் தேடி வைக்கிற அந்த செல்வத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நாம் தேடி வைத்திருக்கிறோமா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிற கோவையில் நமது செல்வங்கள் குறி வைத்து சூறையாடப் பட்டதை நாம் பார்த்தோம். நம்மால் அதை பாதுகாக்க முடிந்ததா? ஆயிரம் கோடிக்கு மேலான அந்த இழப்பை நம்மால் தடுக்க முடிந்ததா? நாம் மிகுந்த கடினப்பட்டு, பல்லாண்டு காலம் உழைத்து தேடிவைத்திருக்கும் செல்வத்தை, சில நூறு பேர் திரண்டு சூறையாடுவார்கள் என்றால் அதை தடுப்பதற்கும், நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நாம் தயாராக வேண்டாமா?

காலையில் கடையைத் திறந்து, இரவில் கல்லாவை எண்ணி, பின்னிரவில் உறங்கச் சென்று, மீண்டும் மறுநாள் கடையைத் திறந்து, கல்லாவை எண்ணி, உறங்கச் சென்று என்று, நாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்தால், நமக்கான பாதுகாப்பு எங்கிருந்து வரும்? சுற்றி நடக்கிற அரசியலை உள்வாங்காமல்; நமக்கு எதிரான சதிகளை உணராமல்; நம்மை வஞ்சிக்கும் சக்திகளை அடையாளம் காணாமல் நமது பாதுகாப்பை நாம் எப்படி உறுதி செய்துகொள்ள முடியும்?

அரசியலில், அதிகாரத்தில், ஊடகத்தில், கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் என இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிற கட்டமைப்புகளில் நமது நிலை என்ன? இன்றைக்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ஒரு காய்கறி வாங்குவதிலிருந்து ஒரு சட்டத்தை உருவாக்கி வழங்குவது வரை அதில் அரசியல் இருக்கிறது. இன்றைக்கு கத்திரிக்காயில் பி.டி கத்திரிக்காய் என்றொரு கத்திரிக்காய் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அது அரசியல். அது ஒரு சர்வதேச பொருளாதாரத்தைச் சொல்லுகிற கத்திரிக்காயாக இருக்கிறது. அதற்குள்ளே அமெரிக்காவின் கை இருக்கிறது. அதற்குள்ளே உலகமயமாக்கல் இருக்கிறது. ஆக ஒரு கத்தரிக்காய்தான். ஆனால், அதற்குள்ளே எத்தனை விதமான அரசியல் இருக்கிறது. இந்த அரசியலை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால் நம்மால் இந்த உலகத்தோடு போட்டி போட முடியாது.

நம்மைச் சுற்றி நடக்கும் இந்த அரசியலில் நமது நிலை என்ன? நாம் வாழுகிற தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள அரசியலில் நமது பலம் என்ன? நம்முடைய அரசியல் அதிகாரத்தை நாம் பெற்றிருக்கிறோமா? அதிகாரத்தின் வாசனையையாவது நாம் நுகர்ந்து பார்த்திருக்கிறோமா? அந்த அரசியலை கைப்பற்றுவதற்கான முறையான திட்டங்கள் எதையாவது உருவாக்கி வைத்திருக்கிறோமா? எதுவுமே இல்லை.

'பெரிய கட்சிகள் நம்மை ஏமாற்றி விட்டன' என்று புலம்புவதையே நாம் அரசியலாக செய்துகொண்டிருக்கிறோம். ஒரு கட்சி ஏமாற்றி விட்டது என்று சொல்லி இன்னொரு கட்சியை நம்பிக் கொண்டிருக்கிறோம். கோபாலபுரத்திற்கும் போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறிச் சென்று சீட்டுக் கேட்கும் நிலையில் இருக்கிறோம். சீட்டுக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை கண்ணியமாகப் பெறுகிற இடத்தில் நாம் ஏன் இல்லை என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழக முஸ்லிம் அரசியலின் தோற்றுவாயாக விளங்கிய காயிதே மில்லத், அவரது அரசியல் வாழ்வில் ஒரு நாளும் பெரிய கட்சிகளிடம் போய் சீட்டுக்காக கையேந்தி நின்றதில்லை. ஆனால், அவரது குரோம்பேட்டை வீட்டிற்கு அண்ணா வந்தார், கலைஞர் வந்தார், எம்ஜிஆர் வந்தார். நேரு, இந்திரா, ராஜாஜி, காமராஜர் என அத்தனை பேரும் வந்தார்கள். அந்த கண்ணியத்தை இன்றைக்கு நாம் ஏன் இழந்தோம்?

காயிதே மில்லத் ஒரு நாளும் 'என் பின்னால் என் சமுதாயம் நிற்கிறது' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டதே இல்லை. ஆனால் அவர் பின்னால் சமுதாயம் நிற்கிறது என்பதை மற்ற கட்சிகளும், தலைவர்களும் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால் தான் அவரைத் தேடி வந்தார்கள். இன்றைக்கு சமுதாயம் தன் பின்னால் நிற்பதாக நம் கட்சிகள் தம்பட்டம் அடிக்கின்றன. ஆனாலும் சமுதாயம் அவர்கள் பின்னால் இல்லை என்பதை பெரிய கட்சிகள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளன. அதனால் தான் 'ஒன்றை எடுத்துக்கொள், என் சின்னத்தில் நில்' என்று குரலை உயர்த்துகின்றன. நாம் அவர்களைத் தேடிச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

காயிதே மில்லத்தை மறுவாசிப்பு செய்ய வேண்டிய நேரம் இது. காயிதே மில்லத்தின் வரலாற்றை முழுமையாகப் படித்தால், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற முஸ்லிம் இயக்கங்களின் அரசியலை நோக்கி ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் கேள்வி எழுப்புவான். அந்த ஆளுமை அவ்வளவு அபாரமான அரசியலை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

பிரிவினைக்குப் பின் இந்த நாடு இரண்டு கூறாகப் பிளவு பட்ட பிறகு, முஸ்லிம்களும், முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்று விட்ட நிலையில், முஸ்லிம் லீக் என்பதே பாகிஸ்தானின் கட்சி என்றாகி விட்ட சூழலில், முஸ்லிம் லீக்கின் பெயரை உச்சரித்தாலே தேச விரோதியாக இந்தியாவில் பார்க்கப்பட்ட காலத்தில், முஸ்லிம்கள் என்றாலே
பிரிவினைக்கு காரணமானவர்கள்; இந்த நாட்டைக் கூறுபோட்டவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட நேரத்தில், 'இந்தியாவில் எஞ்சியிருக்கிற இந்திய முஸ்லிம்களுக்கு நான் தலைமை ஏற்பேன்; அதுவும் அந்த முஸ்லிம் லீக்கின் பெயரிலேயே ஏற்பேன்' என்று சூளுரைத்துக் களம் கண்டாரே காயிதே மில்லத். எவ்வளவு பெரிய துணிவு அது. இன்றைக்கு அப்படிப்பட்ட நெருக்கடி நமக்கு இருக்கிறதா? பிரிவினையின் போது காயிதே மில்லத்திற்கு இருந்த நெருக்கடி இன்றைக்கு இருக்கிற இஸ்லாமியத் தலைவர்களுக்கு இருக்கிறதா? பிரிவினையின் போது இருந்த வலியும் வேதனையும் இன்றைக்கு நமக்கு இருக்கிறதா?

இன்றைக்கு நம்மைக் கூப்பிட்டு தொகுதி பேரம் பேசுவதற்கும், கூட்டணி வைப்பதற்கும் எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம்களின் ஒட்டு வங்கி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், அன்றைக்கு அப்படி இல்லை. அன்றைக்கு முஸ்லிம்கள் என்றால்; முஸ்லிம் லீக் என்றால் ஒதுங்கி நிற்கக் கூடிய ஒரு சூழல். அப்படிப் பட்ட நேரத்தில் எப்படி இந்த சமுதாயத்திற்கு அவர் தலைமை ஏற்றார் என்பதைக் கொஞ்சம் நீங்கள் மீளாய்வு செய்து பாருங்கள்.

நெருக்கடிகள் இருந்தும் அவரால் நேர்த்தியாக அரசியல் செய்ய முடிந்தது. நெருக்கடிகளே இல்லாத போதும் நம்மால் அரசியல் செய்ய முடியவில்லையே ஏன்? என்ற கேள்வியை இன்றைக்கு நமது தலைவர்களை நோக்கி நாம் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். கேள்வி கேட்கும் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனதால் தான், இன்றைக்கு எந்தத் திட்டமும் இல்லாமல், எந்தத் தொலை நோக்கும் இல்லாமல் அவரவர் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். தலைமைக்கானப் பண்போ, தலைமைத்துவத்துக்கான கூறுகளோ இல்லாதவர்கள் எல்லாம் தலைமை ஏற்கத் துணிந்து விட்டார்கள்.

காயிதே மில்லத்தைப் போன்ற ஒரு ஆளுமை அவருக்குப் பின் உருவாகாமல் போனதனால் தான் இன்றைக்கு முஸ்லிம் லீக்கே பத்துக்கு மேல் இருக்கிறது. இன்றைக்கு அரசியல் சமூகத் தளத்தில் இயங்குகிற எத்தனை இளைஞர்களுக்கு காயிதே மில்லத்தின் வரலாறு தெரியும். ஏன் தெரியவில்லை, யார் மறைத்தார்கள் அந்த வரலாற்றை? நமது தலைவர்கள் ஏன் நமக்கு காயிதே மில்லத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லவில்லை?

சொன்னால் அது அவர்களுக்கு நெருக்கடி. 'காயிதே மில்லத்தை போல் தான் இல்லை, காயிதே மில்லத்திடம் இருந்த திறமை தன்னிடத்தில் இல்லை. ஆகவே காயிதே மில்லத்தை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப் படுத்தினால்; இந்த இளைஞன் அவரைத் தெரிந்து கொண்டால்; அவரைப் போன்று நம்மிடமும் எதிர்பார்ப்பான். எனவே அதற்கு வழிவைக்கக் கூடாது; காயிதே மில்லத்தின் வரலாறைக் குழி தோண்டிப் புதைத்து விடு' என்கிற ஒற்றை அரசியல் தான்; ஒற்றை சுயநலக் காரணத்தால் தான் அந்த வரலாற்றையே இன்றைய தலைமுறையின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள்.

நமக்கான குரலாக ஒலித்த காயிதே மில்லத்தையும் நாம் படிக்கவில்லை; நமது குரல்வளையை அறுத்த ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றையும் நாம் படிக்கவில்லை.நேற்றைய வரலாற்றைப் படிக்காமல் நாளைய வரலாற்றை நம்மால் படைக்க முடியாது. காயிதே மில்லத்தை நாம் கற்றுக்கொள்வதன் மூலம் தான், அவர் நிகழ்த்திக் காட்டியது போன்ற ஒரு அரசியல் வரலாற்றை நம்மாலும் படைக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்ஸை நாம் அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் எச்சரிக்கையோடு இனி நாம் இயங்க முடியும்.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையைப் பற்றி இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். பாபர் மஸ்ஜித் பிரச்சனை இன்றைக்கு பாபர் மஸ்ஜித் பிரச்சனையாகப் பார்க்கப் படுகிறதா? அது ராமர் கோயில் பிரச்சனையாகி விட்டது. பள்ளிவாசல் முதலில் சர்ச்சைக்குரிய கட்டிடமானது. பின்னர் அது ராம ஜென்ம பூமியானது..இப்போது ராமர் கோவிலாகவே மாற்றப்பட்டு விட்டது. இப்போது எல்லா பத்திரிகைகளும் ராமர் கோவில் பிரச்சனை என்றே எழுதுகின்றன. இங்கேதான் ஆர்.எஸ்.எஸ் தனது கூர்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையை நாம் பாபர் மஸ்ஜித் பிரச்சனையாக அணுகவில்லை. நமது இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸைப் போல திட்டமிட்டு இயங்கவில்லை. இன்றைக்கு தீர்ப்பு வந்த பிறகு தனியார் சட்ட வாரியம் லக்னோவில் கூடி, 'பாபர் மஸ்ஜித் பிரச்சனையை நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையில் முஸ்லிம்கள் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்' என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். என்ன ஒரு வேகம் பார்த்தீர்களா? பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. இடிக்கப்பட்டே 18 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது தான் நாம் கூடி கருத்தரங்கு நடத்த தீர்மானம் போடுகிறோம். என்ன கொடுமை இது.

அவர்கள் ராமர் கோவில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகளுக்கு தேவையான தயாரிப்புகளை செய்து முடித்து விட்டார்கள்; எங்கும் எதிலும் ராமர் என்ற அளவுக்கு பரப்புரையை முடித்து விட்டார்கள்; தீர்ப்பை தமக்குச் சாதகமாக வாங்கிவிட்டார்கள். நாம் வழக்கு நடத்தியதை தவிர உருப்படியாக வேறு என்ன செய்தோம். வழக்கு நடத்துவது என்பது ஒரு பெட்டிக் கடைக்காரனின் எதிர்வினை. அவன் கடையை பக்கத்துக் கடைக்காரன் அபகரித்தால் அதை மீட்க அவன் போராடுவான். வழக்கு நடத்துவான். ஆக ஒரு பெட்டிக் கடைக்காரனின் எதிர்வினையைப் போல குறுகிவிட்டது ஒரு மிகப்பெரிய சமூகத்தின் எதிர் வினை.

இப்படி நாம் இருந்தால், இந்துத்துவ சக்திகள் வெற்றி பெறுவார்களா அல்லது நாம் வெற்றி பெறுவோமா?
அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றும், நம்மை தோற்கடித்து விட்டார்கள் என்றும் ஓலமிடுகிற நாம், அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்கிற கோணத்தில் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
அப்படி நாம் சிந்தித்திருந்தால் நமது பள்ளிவாசல் பறிபோயிருக்காது. இன்றைக்குத் தீர்ப்பும் இப்படி வந்திருக்காது.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த போது, பிரபலமான ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று துக்ளக் சோவிடம் பேட்டி கண்டது. தீர்ப்பு உங்களுக்கு திருப்தியா என்ற கேள்விக்கு 'ஆம், திருப்தி' என்றார் அவர். அப்படியென்றால், 'பிரச்சனை இத்தோடு முடிந்து விடுமா அல்லது காசி மதுரா என்று நீளுமா' என்ற அடுத்த கேள்விக்கு, 'அது இந்து மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது' என்றார் அவர். அப்படியென்றால் என்ன அர்த்தம். அடுத்தடுத்த பள்ளிவாசல்களுக்கும் கடப்பாறைகளோடு வருவோம் என்று அர்த்தம். ருசி கண்ட பூனை விடாது என்பது போல இப்போது அவர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள். ஆனால் நாம் எந்த வியூகமும் இல்லாமல் கையறு நிலையில் இருக்கிறோம்.

2010 இல் இப்படியொரு தீர்ப்பை வாங்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் நிகழ்த்திய இடையறாத போராட்டத்தை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். அதை முறியடிப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்க நமது தலைவர்கள் தவறி விட்டனர். 1942 களிலேயே இந்துத்துவப் பள்ளிக் கூடங்களைத் திறந்து, அதில் ராமரின் புராணத்தைப் பாடத் திட்டமாக்கி, அதைப் படித்து உள்வாங்கியவர்களை அதிகாரத்தில் அமர வைத்து, அதன் மூலம் தனது இலக்கை அடைந்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இவ்வாறு அறிவார்ந்த ரீதியில் திட்டமிடவும், வெற்றி பெறவும் தன் தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தானே ஹெட்கேவார்; அவன் தலைவனா, நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் தலைவர்களா?

1925 இல் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு அடித்தளம் போட்டார். அப்படி அவர் தொடங்கும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளில், தான் இந்தியாவின் பிரதமராகி விட வேண்டுமென்றோ; மகாராஷ்டிராவின் முதல்வராகி விட வேண்டுமென்றோ; வாரியத்துக்கு தலைவராகி விட வேண்டுமென்றோ; வார்டு கவுன்சிலராகி விட வேண்டுமென்றோ அவர் திட்டமிடவில்லை. அவருக்கு ஒரு நூறாண்டு கால கனவு இருந்தது; ஒரு இலக்கு இருந்தது. 1925 இல் அவர் விதை போட்டார்; திட்டமிட்டார்; உழைத்தார்; அடுத்த தலைமுறைக்கு செயல்முறைகளைக் கற்றுக் கொடுத்தார்; 1997 இல் அவரது தலைமுறையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

ஹெட்கேவாரைப் போல தன் தலைமுறைக்காக சிந்திக்கிற ஒரு தலைவனையாவது நம்மில் இப்போது பார்க்க முடிகிறதா? நம் தலைவர்கள் எல்லோரும் அவர்களின் உழைப்பை அவர்களே அறுவடை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகாரத்தை சுவைக்க அவசரப் படுகிறார்கள். குறைவான உழைப்பைத் தந்து விட்டு, நிறைவானப் பயனைப் பெற நினைக்கிறார்கள். 'கிங்'காக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்; ஹெட்காவாரைப் போல 'கிங் மேக்கராக' இருக்க நம்மில் ஒருவர்கூட இல்லை.

நாம் இயல்பிலேயே வணிக சமூகமாக இருப்பதால் சமூகத்தின் எல்லா அசைவுகளையும் வணிக ரீதியிலேயே அணுகும் மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. காலையில் கடையைத் திறந்தால் இரவில் கல்லாவை எண்ணும் அந்த மனோபாவம் தான் நமக்கு அரசியலிலும் வருகிறது. இந்த மாதம் கட்சி தொடங்கினால் அடுத்த மாதம் அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நாம் அவசரப் படுகிறோம். கட்சியை நிர்மாணித்த தலைவர்களே தேர்தலில் நிற்கிறார்கள்; கட்சியின் தலைமைப் பொறுப்பையும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். எப்படியாவது அவசர அவசரமாக நாம் அடையாளம் பெற்று விட வேண்டும் என்ற முனைப்புதான் இங்கே அதிகம் இருக்கிறது. இந்த பொறுமையின்மையும், இந்த நிதானமின்மையும் தான் நமக்கு பல வீழ்ச்சிகளைத் தந்து கொண்டிருக்கிறது.

அரசியலில் இந்த நிலை என்றால், அரசியலைத் தீர்மானிக்கிற சக்தி மிக்க ஊடகத்தில் நமது நிலை என்ன?
அண்மையில் நான் ஒரு ஜோக் படித்தேன். 'முன்பெல்லாம் கையில் நிதி இருந்தால் சினிமா தயாரிப்பாளர் ஆகலாம்; இப்போதெல்லாம் பெயரில் நிதி இருந்தால் சினிமா தயாரிப்பாளர் ஆகி விடலாம்' என்றிருந்தது அந்த ஜோக். இது வெறும் ஜோக் அல்ல. இதன் பின்னணியில் இருக்கும் ஒரு நுட்பமான அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கலைஞர் குடும்பத்தைச் சார்ந்த கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அருள்நிதி, அறிவுநிதி என அவரது வாரிசுகளின் கையில் சினிமாவும் ஊடகமும் சிக்கியிருப்பதை அந்த ஜோக் எடுத்துச் சொல்கிறது.

கலைஞர் இன்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார் என்றால், அது எப்படி சாமானியனான அவருக்கு சாத்தியமானது? ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதற்கான வாக்குகளைப் போடுகின்ற மக்களை கைப்பற்ற வேண்டும். மக்களைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கான கருவியாக இருக்கிற சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி என அத்தனையையும் கைப்பற்ற வேண்டும். அப்படி கைப்பற்றும் போது அரசியலை எளிதாகக் கைப்பற்றி விடலாம். இந்த நுட்பத்தை கலைஞர் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டதனால் தான், பெரியாரின் பாசறையில் அரசியல் பாடம் படித்துக் கொண்டிருக்கும் போதே அண்ணாவைப் பின்பற்றி நாடகங்களில் நடித்தார். சினிமாவுக்கு வசனம் எழுதினார். தனது கருத்துக்களை வெகுமக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு அந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எல்லாத் தரப்பு மக்களிடமும் எளிதாகச் சென்றடைவதற்கான வழிகளைக் கையாண்டார். அவரது அந்தப் பயணத்தின் நீட்சிதான் இன்றைக்கு மொத்த ஊடகத்தையும் அவரது குடும்பத்தின் கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

பராசக்திக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதிய காலத்திலிருந்து திரைப்படத்திற்கும், ஊடகத்திற்குமான அவரது தொடர்பினுடைய நீட்சி, இன்றைக்கு கலாநிதி, தயாநிதி, உதயநிதி என்று பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் கலைஞர், ஓடினாலும் ஓடா விட்டாலும் சளைக்காமல் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏனெறால் இந்த பலம் பொருந்திய ஊடகம் நம் கையில் இருக்கிற வரைதான் ஆட்சி அதிகாரம் நம் கையிலிருக்கும் என்ற நுட்பத்தை அவர் புரிந்து வைத்திருப்பதனால், தொடர்ந்து அதில் தன்னை தக்க வைத்துக் கொள்கிறார்.

இத்தகைய ஊடகத்தில் இன்றைக்கு நமது நிலை என்ன? நம்மிடம் தொலைக்காட்சி இருக்கிறதா; பத்திரிகை இருக்கிறதா; வானொலி இருக்கிறதா; சினிமாவை நல்ல கருத்துக்களைச் சொல்லும் களமாக நாம் பயன் படுத்துகிறோமா? இன்றைக்கு ஈரானியர்கள் தங்களின் போராட்டத்திற்கான கருவியாக சினிமாவை மாற்றி இருக்கிறார்கள். அதன் மூலம் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும், பெர்லினிலும், இலங்கையிலும், மும்பையிலும், கேரளாவிலும் என ஈரானிய சினிமா இன்று உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற உலகப் பட விழாவில் ஈரானிய சினிமாக்கள் திரையிடப்பட்டன. எங்கோ இருக்கிற ஈரானியர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும் இங்கே இருக்கிற கேரள மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வழியமைத்தது சினிமா. இது தான் அந்த ஊடகத்திற்கேயான தனிப்பெரும் பலம். அந்த சினிமாவை நமக்கான கருவியாக மாற்றுவது பற்றி இதுவரை நாம் சிந்திக்கவில்லை.

தினமலர் பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன் நபிகளாரைப் பற்றி ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டது. நபிகளாரைப் பற்றி சித்திரம் வரையக் கூடாது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் தினமலர் அவ்வாறு செய்தது என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் தெரிந்தே நம்மை சீண்டுகிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கையில் ஊடக அதிகாரம் இருப்பதனால் அவர்கள் அப்படி செயல்படுகிறார்கள். நம் கையில் ஊடகம் இல்லாததனால் நம்மால் தினமலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவே முடிகிறது. அவர்களை அவர்களின் வழியிலேயே எதிர்கொள்வதற்கு நம்மிடம் ஊடக அதிகாரம் இல்லை.

இன்றைக்கு தினத் தந்தி என்கிற மிகப்பெரிய ஊடகம் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?
தினகரன்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தினமணி- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தினமலர்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தமிழோசை- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? ஆங்கில இதழ்களான ஹிந்துவும், எக்ஸ்பிரஸ்ஸும், டைம்ஸ் ஆப் இந்தியாவும்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? இந்தியா டுடேவும், விகடனும், குமுதமும் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? இவற்றில் ஏதாவது ஒன்று நம் சமூகத்தின் கையில் இருக்கிறதா?

காலையில் விழித்தவுடன் மூன்று ரூபாயைக் கொடுத்து நாம் வாங்கிப் படிக்கிற பத்திரிகைகளில் என்னென்ன வருகிறதோ, அவற்றை அப்படியே உண்மை என்று நம்புகின்றோம். அந்த அளவுக்கு நம்மிடம் கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வலிமை பெற்ற ஊடகமான பத்திரிகைகளின் முதலாளிகள் யார்; அவர்கள் என்ன சிந்தனை உடையவர்கள்; அவர்களின் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் நமக்கு ஏதாவது தெரியுமா? அவர்களைப் போல நாமும் நமது சிந்தனைகளை விதைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊடகத்தை உருவாக்குவது பற்றி என்றைக்காவது யோசித்தோமா?

இன்றைக்கு தமிழ் நாட்டு முஸ்லிம்களில் பணக்காரர்களே இல்லையா? எல்லோருமே பீடி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறோமா? ஒரு பலம் வாய்ந்த நாளிதழை நடத்துவதற்கு கூட நமக்கு வலிமை இல்லையா? ஒரு உருப்படியான தொலைக்காட்சி நடத்தும் அளவுக்கு கூட நம்மிடம் பணம் இல்லையா? இருக்கிறது; நம்மிடம் பணம் இருக்கிறது; பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே அப்படி பலரும் ஒன்று கூடி பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நம்மால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்றால், நமக்கு ஊடக அலுவலகத்தை தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஊடகத்தை நடத்தும் ஊடகவியலாளர்களை நாம் உருவாக்கவில்லை. ஊடக அலுவலகத்திற்குத் தேவையான தளவாடங்களைத் திரட்டினோமே தவிர, ஊடக அறிவுமிக்க தலைமுறையைத் திரட்டவில்லை. நம்மிடம் ஆளுமைகள் இல்லாததால்; ஆளுமைகளை நாம் உருவாக்காததால்; உருவான சிலரையும் சரியாக அடையாளம் காணாததால் தான் நம்மால் தொலைக்காட்சி நடத்தவோ, பத்திரிகை தொடங்கவோ முடியவில்லை.

ஆளுமைகளை உருவாக்காமல் நிராயுதபாணிகளாக நாம் களத்திற்குப் போவதனால் தான், நாம் மற்றவர்களால் எளிதில் தோற்கடிக்கப் படுகிறோம். நிராயுதபாணிகளாக தேர்தல் களத்திற்குப் போனதனால் தான், கலைஞர் நம்மவர்களைப் பார்த்து 'உனக்கு சீட் இல்லை' என்றார்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், கமலஹாசன் உன்னைப்போல் ஒருவன் என்று படம் எடுத்து, அதில் முஸ்லிம்களை கொடூரமாக சித்தரித்து விட்டு எந்தக் கவலையும் இல்லாமல் இன்றைக்கு அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், தினமலர் நபிகளாரைப் பற்றி கார்டூன் போடுகிறது; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான் அலகாபாத் நீதிபதிகள், சட்டம் படித்த நீதிபதிகள், சட்டத்தை எல்லாம் குப்பையில் எறிந்து விட்டு தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்கள்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், இவர்களையெல்லாம் பாதுகாக்கிற, இவர்களையெல்லாம் ஊக்கப்படுத்துகிற, இவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கிற வேலையை நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கமே செய்துகொண்டிருக்கிறது.

ஆகவே, நாம் என்றைக்கு நம்முடைய கையில் ஆயுதத்தை எடுக்கிறோமோ; நாம் என்றைக்கு நமது குரலை உயர்த்திப் பேச தொடங்குகிறோமோ; எப்போது நமது பிள்ளைகளுக்கு, சுற்றி நடக்கும் விசயங்களைக் கற்றுக் கொடுத்து, சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் அவர்களை தயார் படுத்துகிறோமோ, அன்றைக்குத்தான் நமக்கான விடியல் பிறக்கும்.

இந்த ஊரில் நாற்பதாயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால், குறைந்தது நான்காயிரம் பேரையாவது அறிவு பெற்றவர்களாக உருவாக்க வேண்டும். அறிவு என்றால் வெறும் கல்வி அறிவல்ல. அதை நாற்பதாயிரம் பேருக்கும் நாம் கொடுத்தாக வேண்டும். நான் சொல்வது அரசியல் அறிவு; ஊடக அறிவு; கலை இலக்கிய பண்பாட்டு அறிவு; இவையெல்லாம் சேர்ந்த தொலைநோக்கு அறிவு. அப்படி நாம் உருவாக்குவதின் மூலம் தான் நமது இலக்கை நாம் அடைய முடியும்.

2016 லும் 2020 லும் நாம் அறுவடை செய்துவிட வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். 2050 இல் இந்தப் பள்ளப்பட்டி முஸ்லிம்கள் பலம் வாய்ந்த முஸ்லிம்களாக, எவராலும் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாத முஸ்லிம்களாக, அறிவின் உச்சியில் ஒளி வீசும் முஸ்லிம்களாக மாறுவதற்கு திட்டமிடுங்கள்; உழையுங்கள். இதையே ஊர் தோறும், கிராமம் தோறும் பின்பற்றி கடைபிடித்தால், தமிழக முஸ்லிம்கள் 2050 இல் மறுமலர்ச்சி பெறுவார்கள். ஆர்.எஸ்.எஸ் அப்படித்தான் தொலைநோக்கோடு இயங்கி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாம் நமது வழிபாட்டு அம்சங்களுக்காக ஊர் தோறும் உறுதியான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். தொழுகை நடத்துவதற்கும், மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் பள்ளிவாசலையும், மதரசாவையும் எல்லா ஊரிலும் உருவாக்கி வைத்துள்ளோம். சென்னையில் போய் தான் தொழ வேண்டும் என்ற நிலையில் எந்த ஊரும் இல்லை. பெரு நகரங்களில் போய்தான் வழிபாடு செய்யமுடியும் என்ற நிலையில் இன்றைக்கு எந்த முஸ்லிம் கிராமமும் இல்லை. அவரவர் வாழ்கிற பகுதியிலேயே நமது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் உறுதியான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். அவற்றை எப்படி ஒரு ஜமாஅத் நிர்வாகம் செய்கிறதோ அதே ஜமாஅத் இனி ஒரு பள்ளிக் கூடத்தையும் நிர்வாகம் செய்ய வேண்டும்; ஒரு கல்லூரியையும்; ஒரு கணினி மைய்யத்தையும்; ஒரு நூலகத்தையும்; ஒரு தொழில் பயிற்சி மையத்தையும் நிர்வாகம் செய்ய வேண்டும்.

மார்க்க ரீதியாக நாம் காட்டுகிற முனைப்பிலும் ஆர்வத்திலும் ஒரு சிறு பங்கையாவது அரசியல், சமூகப் பாதுகாப்புக்கான வழிகளிலும் நாம் காட்ட வேண்டும். அத்தகைய மக்களாக இறைவன் நம்மை ஆக்கி வைப்பானாக என்று பிராத்தித்து முடிக்கிறேன். நன்றி.

மெயில் அனுப்பியவர்: சகோதரர் ஸாதிக் பின் இஸ்மாயில்