Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஜூலை 20

ஆண்களும் அடுப்பாங்கறையும்..



ஆண்களும் அடுப்பாங்கறையும்..

வெளிஉலகம் ஆண்களுடைது. வீடு பெண்களுக்கானது. வீட்டின் நிர்வாகம் - குறிப்பாக சமையலறை நிர்வாகப் பெண்களின் அதிகாரத்திற்குட்பட்டது. அங்கே அவர்களே முடிசூடாராணிகள்.

அந்த ராணிகளின் தயவால்தான் இங்கே அநேக ராஜாக்களின் கதை ஓடுகிறது. தாய் வழிச் சமூகத்தில் கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிப்பது வீட்டு நிர்வாகம் என்பதோடு சமயலறைப் பொறுப்பும் பெண்ணின் பொறுப்பாகிப் போனது.

ஆயகலை அறுபத்து நான்கிலும் சமையல் கலை மிக அத்யவசியமானது. ஒரு பெண்ணுக்கு கட்டாயம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமைக்கத் தெரியாத பெண்ணுக்கு எதிர்காலம்; அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்று சொல்லும் அளவுக்கு சமையல் கலை பெண்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்தது. அவள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாகிப் போனது.

ஆனால் இன்றைய நவீன உலகில் இது பெண்களுக்கான சுமையாக மட்டும் இல்லாமல் இதில் ஆண்களும் பங்கேற்ற தலைப்படுகிறார்கள். இதில் ஆண்களின் பங்கு என்பது சமையலுக்கான பொருட்கள் (அதாவது இறைச்சி மீன் காய்கறிகள்) வாங்குவதிலிருந்து தொடங்குகிறது. இதிலும் கூட பெண்களின் வழிகாட்டலோடுதான் அவர்கள் தொடங்குகிறார்கள்.

1. வெண்டைக்காய் முனையை உடைத்துபார்த்து அது முற்றலா? ஏன சோதிக்க வேண்டும்.

2. முருங்கைகாயை முறுக்கிப்பார்த்து அது இளசா என சோதித்துப் பார்க்க வேண்டும்.

3. நாட்டுத் தக்காளியா? ஆப்பிள் தக்காளியா?

4. நாட்டுக் கோழியா? கிரிராஜாவா?

5. இறைச்சி வாங்கும் போது கால்கறி சந்துக்கறி! இப்படிப் போகும் அது பெரும்பாலான ஆண்கள் நாளடைவில் இந்த பர்ச்சேஸ் தேர்வில் தேறி பெண்டாட்டியின் நன்மதிப்பை பெற்றுக் கொள்கிறார்கள்.

என்றாலும் சமயங்களில் இதில் ஏமாந்து விடும் போது ராணிகள் சகிப்பதில்லை. ராஜாக்களை வறுத்தெடுத்து விடுவார்கள்.

"எந்த இளிச்சவாயனவது வருவான்" என உங்களுக்காக காத்திருந்தான் போலிருக்கிறது. நீங்கள் போய் அகப்பட்டீர்கள். தலையில் கட்டிவிட்டான்" "எத்தனை தடவை படிச்சி... படிச்சி... சொல்றது நாட்டுக் கோழின்று இப்படி கிரிராஜா கோழியை வாங்கி வந்திருக்கீறீர்களே... எனக்கு வேண்டாம். உங்க உம்மா வீட்ல கொண்டு போடுங்கோ..."
"உம்மாவும் இதை திங்கமாட்டாப்ப..."
"அப்போ தங்கச்சிகிட்ட கொண்டு குடுங்கோ... அவள்தான் ஓசியில் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாளே...!
நமது ராஜாவுக்கு பர்ஸ் காலியானதோடு பல்சும் எகிறும்.

இப்படியாகத் தொடங்கும் ஆண்களின் பங்கேற்பு நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் சமையலில் நேரடியாக பங்கேற்கும் நிலை ஏற்படுவது எப்போது...? ஆண்கள் தொழில் வியாபாரம் செய்யவோ அல்லது அரபு நாடுகளுக்கும் செல்லும் போதோ வேறுவழியின்றி அகப்பை பிடிக்க நேர்கிறது.

அந்த காலத்தில் சென்னை பம்பாய் ஆந்திரா கல்கத்தா என பிழைப்பு தேடி போகும் நம்மவர்கள் கூடவே சமையலுக்கும் ஆட்களைத் தேடி பிடித்துக் கூட்டிச் செல்வார்கள்.

ஆனால் இப்போது சமையல்காரர்கள் எல்லாம் நான்கு இலச்சம் சம்பளம் கேட்பதால்... பலர் தன்கையே தனக்குதவி என்று ஆரம்பித்துவிட்டார்கள். பலர் புறப்படும் போதே திருமதிகளிடம் ரெசிப்பி எழுதி வாங்கிவிட்டுப் போகிறார்கள். ஸபரில் இருக்கும் போது மனைவியின் சமையலுக்கு ஏங்கினாலும் வேறு வழியில்லை. இரண்டொரு மாதங்களில் ஊர் வரும் போது நாக்கை சப்புக்கொட்டி அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொள்வார்கள்.

இதில் திரை கடலோடி திரவியம் தேட அரபு நாடுகளுக்கும் செல்வோரின் நிலைதான் பரிதாபமானது. சமையல் குறித்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கும் இவர்கள் தங்கும் கேம்ப்பில் பல நாட்டவர்கள் இந்தியாவின் பல மாநிலத்தவர்கள் ஒரு சேரத் தங்கியிருந்தாலும் சமையல் என வரும் போது இனம் இனத்தோடு வெள்ளாடு தண்ணியோடு என்பது போல இனவாரியாக மொழிவாரியாக சேர்ந்து கொள்வார்கள். தமிழருக்கும் மலையாளிக்கும் உணவு விஷயத்தில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பதால் இவர்கள் சேர்ந்து சமைப்பதை பல இடங்களில் காணலாம்.

ஸ்ரீலங்காவின் சிங்களர் தவிர்த்த தமிழ் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தவர்களும் நம்மோடு கூட்டுச் சேர்வதுண்டு. இவர்கள் தமிழர்கள்தான் என்றாலும் இவர்களின் உணவுமுறை நம்மிலிருந்து பெரிதும் வேறுப்பட்டது. அதிகமாகக் காரம் சேர்ப்பார்கள். மாட்டிறைச்சிதான் இவர்களின் பிரதான உணவு. மாதம் 30 நாட்களும் மாட்டிறைச்சிதான் சமைக்க வேண்டும் என்பார்கள்.

சமையல் செய்ய சுழற்சி முறையில் இவர்கள் முறை வரும்போது நாங்கள் பெப்சிடப்பா வோடுதான் சாப்பிட அமர்வோம். ஒரு கவனம் சோறு ஒரு சிலர் பெப்சி என்றுதான் சாப்பிடமுடியும். இல்லையெனில் காரம் மூறை வரை எகிறிவிடும்.

இவர்களுக்கு (ஸ்ரீலங்கா) நாங்கள் ரகசியமாக 80x20 என்று பெயர் வைத்திருந்தோம். அதாவது 80மூ காரம் 20மூ ஆயில் என்பது இதன் பொருள். அவர்களது காரம் சில சமயம் அவர்களுக்கே தாங்க முடியாமல் போகும் போது சர்க்கரை பால் மாவு போன்ற பொருட்களை சற்றும் தயக்கமின்றி குழம்பில் சேர்த்துவிடுவார்கள். காரமுமின்றி இனிப்பும் இன்றி ஒரு வித புதிய சுவையில் அந்த பதார்த்தம் இருக்கும். சாப்பாடு மட்டும் முன்னேயும் போகாது பின்னேயும் போகாது.

நாம் இறைச்சிக்கு இஞ்சிபூண்டு தயிர்விட்டு தாழிப்பதை பேரதிசயமாக பார்பப்பார்கள். அதன் மணம் நாசியில் ஏறும் போது 'சூப்பர்" என்பார்கள். நான் ரியாதில் பாண்டா சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் போது அங்கே கம்பெனி சாப்பாடுதான். இந்தியர்களும் பங்களா தேஷிகளும் தான் அங்கு அதிகம் பணியில் உள்ளனர்.

எனவே 2நாள் இந்தியச் சமையல் 2 நாள் பங்களா தேஷ் சமையல் என்றிருக்கும். (இந்திய சமையல் பெரும்பாலும் மலையாளிகள் சமைப்பார்கள்) இதில் என்ன வேடிக்கை என்றால் மலையாளிகள் ரசம் வைக்க மாட்டார்கள். ஆனால் பங்களாதேஷிகள் இந்தியர்களுக்காக ரசம் வைப்பார்கள். சாப்பாடு வாங்க தட்டோடு கவுண்டருக்குப் போகும் போது "பாய்சாப் ரசம் வேற" என்பார்கள். அவர்கள் வைக்கும் ரசமும் ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும்.

பங்களாதேஷிகளின் சமையலில் கண்டிப்பாக அவர்கள் நாட்டு மீன் ஒன்றிருக்கும் பெரிய பெரிய துண்டாக கட்டை மாதிரி இருக்கும் கறுப்பாகவும் இருக்கும் வாயில் வைக்க விளங்காது. அதை பார்க்கும் போதே ஒரு மாதிரி குமட்டும். என்ன செய்வது? அவர்களின் "ரச" அன்புக்காக அந்த மீனiயும் வாங்கிக் விடுவோம்.

அவர்கள் பார்க்காத போது டஸ்ட்பின்னில் போட்டு விடுவோம். இன்னுமொன்றும் இதில் இருக்கிறது. இன்றைக்கு அந்த மர கட்டை மீனை இன்று வேண்டாம் என்றால் நாளை பொரித்த சிக்கன் துண்டுகள் சரியாக தட்டில் விழாது. எங்குமே சமையல்காரனோடு பகை வைத்துக் கொள்ளக்கூடாது.

இவைகளும் கூட ஆண் சமையல்தான் வீட்டில் கைப்பக்குவமாக பெண்கள் சமைத்தாலும் கல்யாணவிருந்து பெரிய பெரிய ஹோட்டாக்கள் கட்சி மாநாடுகள் நிலா சோறுகள் போன்றவைகளில் ஆண்களே சமைக்கிறார்கள். இவைகள் ஆண் சமையலையே வேண்டி நிற்கின்றன.

அரிசிக்குக் கூட Kitchen King என்றுதான் பெயர் வைக்கிறார்களே தவிர kitchen Queen என்று எந்த பெயரும் இருப்பதாகத் தெரியவில்லை. "அறுசுவை அரசு" என்று பட்டமெல்லாம் கூட ஆண்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. அறுசுவை அரசிகள் குறித்து யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

எவ்வளவு பெரிய 'அரசாக' இருந்தாலும் ஏதாவது ஒரு 'அரசி'யிடம் தான் அடிப்படை பாடம் கற்றிருக்க வேண்டும். சாலப்பரிந்தூட்டுவதும்; தாயல்லவா...!

என்ன அறுசுவை விருந்து எனினும் 2 நாட்களுக்கு மேல அவைகளை சாப்பிட முடிவதில்லை..தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு வந்து விடும். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்பது உவமான சொல்.
ஆனால் மனைவியின் சமையலை தாயின் சமையலையோ நாம் அந்தக் கணக்கில் சேர்க்க முடியாது சேர்க்கவும் கூடாது

அரபு நாடுகளில் சமைத்துப் பழகுபவர்களில் சிலர் ஊரில் ஹோட்டல் வைத்து பிழைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர். சிலர் வீட்டில் பெண்டாட்டிக்கு நல்ல உதவியாக இருக்கின்றனர்.

அடுப்பாங்கரை வேலையை ஆண்கள் பார்த்தால் அவனை பொன்னையன் (முன்னாள் மந்திரி அல்ல) என்று கேவலமாக விமர்சிக்கும் வழக்கம் மெல்ல மெல்ல மாறி அடுப்படியில் உதவும் ஆபத்பாந்தவனாக கணவனை மதிக்கும் மனைவிமார்கள் உருவாகி விட்ட காலம் இது. ஒரு உதவி என்று ஒரு சமயம் சமையல் வீட்டினுள் புகுந்து வேலை செய்தால். அதையே சாக்காக வைத்து 'இன்னாங்கோ அந்த வெங்காயத்தை கொஞ்சம் நறுக்கித் தாங்கோ..."

"அந்த இஞ்சி பூண்டை கொஞ்சம் மிக்சியில் போட்டு அரைத்துத் தந்தால் என்ன கொறஞ்சா போவீங்கள் ..." என்றறெல்லாம் உதார்விடும் புண்ணியவதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் உம்மா சோறாகினா குழந்தைகள் சாப்பிடுவதில்லை. வாப்பா சமைத்தால் மட்டுமே வாண்டுகள் சாப்பிடும் இது எப்படி இருக்கிறது? அப்படியானால் Kitchen King என்ற பெயர் பொருத்தம்தான் என்கிறீர்களா...?

ஏம்ப்பா... சர்வர்
இது தான் ஸ்பெஷல் தோசையா?
இதில் அப்படி என்ன ஸ்பெஷல் !"

"இது இன்னிக்கு போட்டது சார்!"

ஆக்கம்: கே.எஸ்.முஹம்மத் ஷுஐப்

2 comments:

bandhu சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சமையல் கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டிய கலை. மிக தாமதமாக நான் இதை கற்றுக்கொண்டேன்.

Jafarullah Ismail சொன்னது…

சகோ. bandhu.

”சமையல் கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டிய கலை.”
ஆமாம் சகோதரா! சாப்பிட தெரிந்த அனைவருக்கும் சமைக்கவும் தெரிய வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.