Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஏப்ரல் 1

ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்

ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!


பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.


கேட்டால் 'எல்லாம் ஒரு ஜாலிக்குதானே...? ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..!' என்பார்கள். ஆனால், தான்மட்டும் மற்றவர்களிடம் அன்றைய தினம் இப்படி ஏமாறும்போது 'ஆ.. நாம் ஏமாறுவதால் முட்டாளாக்கப்படுகிறோமே, அடுத்த முறை ஏமாறக்கூடாது' என்று உஷாராக இருப்பார்கள். ஆக, மற்றவர்களிடம் நாம் ஏமாறும்போது மட்டும் அதை நம் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

"April Fool's Day" என்று சொல்லப்படும் இந்த‌ 'முட்டாள்கள் தினம்'தொடங்கியதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் கூறப்பட்டாலும் இதை தொடங்கி வைத்தவர்கள் ஃபிரான்ஸ் நாட்டு சீதேவிகள்தான்! அப்படியே இது ஐரோப்பா முழுவதும் பரவி, பிறகு அமெரிக்கா, மற்ற நாடுகள் என்று பரவிவிட்டது. ஃபிரான்ஸில் இந்த நாளை "Poisson d’avril" (ஏப்ரல் மீன்) என்று சொல்வார்கள். காகித மீன் செய்து, யாரை கேலி செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் கவனிக்காமல் இருக்கும்போது முதுகில் ஒட்டிவிட்டு எல்லோருமாக கூடி, அவர்களை "ஏப்ரல் மீன்" என்று அழைத்து கேலி செய்வார்கள்.


கடிதத்தின் கவரின் மேல் "அவசரம்" என்று எழுதி, உள்ளே "இன்று ஏப்ரல் ஃபூல் தினம். முட்டாள்! அது வேறு யாருமில்லை, நீதான்" என்று எழுதி அனுப்புவார்கள். கல்வியும் அறிவும் முன்னேறிய இன்றைய உலகில் இதுபோன்ற பிற்போக்கு சிந்தனைக் கொண்ட கொண்டாட்டங்களைக் கூட சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்கின்ற‌ அவல நிலையைதான் நாம் காணமுடிகிறது. இந்த ஏப்ரல் ஃபூல் கொண்டாட்டத்தினால் நாம் அடையும் லாபம் என்ன? அர்த்தமில்லாத அற்ப சந்தோஷத்தை தவிர எதுவுமில்லை!

அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் முட்டாள்களின் தினமான இந்த‌ ஏப்ரல் ஃபூல் நோய் பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், ஒரே தெருக் குழந்தைகள், அண்டை வீட்டர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் பரவியுள்ளது. நம்ம ஊர் பக்கமெல்லாம் அதிர்ச்சி வைத்தியம்தான் அன்று. நீட்டாக ட்ரஸ் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வருபவர்கள் மீது இங்க் தெளிப்பது ஒருபுறம் என்றால் 'அய்யோ.. உன் கால்கிட்ட‌ தேள் வருது', 'உன் இன்னொரு காதின் கம்மல் எங்கே?', 'நம்ம அரசலாற்றில் பஸ் கவிழ்ந்து விட்டது தெரியுமா?' 'பக்கத்து தெருவுல குடிசை பத்திக்கிச்சு, ஓடுங்க‌'- இப்படியான அதிர்ச்சி தரும் செய்திகளைப் பொய்யாக‌ சொல்லும்போது ஓங்கி ஒரு அறை விடலாமா என்றுதான் தோன்றும். இன்னும் விட்டால் சுனாமியையும், பூகம்பத்தையும்கூட இவர்கள் விளையாட்டாய் சொல்லி ஏமாற்றத் தயங்க‌ மாட்டார்கள்!

தன் மகனைக் கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு பயணம் அனுப்பிய கணவன் இல்லாத, மகனின் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பியுள்ள‌ ஒரு தாயிடம் 'இன்னும் ஒரு வாரத்தில் உன் மகன் ஒன்வேயில் வரப் போகிறானாம்' என்று சொல்லி, ஏப்ரல் 1 க்காக சொன்ன பொய் அது என்று தெரிந்த பிறகும் அந்த தாய் நீண்ட நாட்கள் நெஞ்சு வலியாலும், பிறகு பிரஷ்ஷராலும் கஷ்டப்பட்ட அநியாயமும், நெருங்கியவர்கள் இறந்துவிட்டதாக ஏப்ரல் ஃபூல் அன்று பொய் ஃபோன் போட்டு ஏமாற்றியதில் மயக்கமாகி விழுந்து, எமெர்ஜென்ஸிக்கு தூக்கிப் போன‌ கொடுமையும்கூட நடந்துள்ளது இந்த ஏப்ரல் 1 ல். ஹ்ம்... என்ன சொல்ல இவர்களை!

பொய் சொல்லும் இத்தகைய‌ கலாச்சாரத்தையும், ஏமாற்றுவதையும், ஏளனம் செய்வதையும் இஸ்லாம் கொஞ்சமும் அனுமதிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார்; இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி); நூல்:புகாரி(6094)

அறிந்துக் கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக்குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

அபூபக்ரா(ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே, அறிவியுங்கள்!" என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்" என்று கூறினார்கள். சாய்ந்துக் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)" என்று திரும்பத் திரும்பக் கூறினார்கள்.
நூற்கள்: புகாரி (5976), முஸ்லிம் (126)


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
நூற்கள்: முஸ்லிம் (147), திர்மிதீ (1236)

அருமை சகோதர, சகோதரிகளே! 'அன்றைய‌ ஜாலியான‌ பொழுதுக்காக‌ ஏப்ரல் ஃபூலில் அப்படி செய்வ‌தால் என்ன வந்துவிடப் போகின்றது?' 'வருஷத்தில் ஒருநாள் அதுபோன்று கேலி, கிண்டல் பண்ணி ஜாலி அனுபவிப்பது ஒரு சந்தோஷம்தானே?' என்று நினைப்பவர்கள் இப்படியொரு ஜாலி தேவைதானா? சரிதானா? என்று நிதானமாக சிந்தித்துக் கொள்ளுங்கள். ஆனால் விளையாட்டுக்கும், ஜாலிக்கும் என்று நாம் காரணங்களைக் கூறிக்கொண்டாலும் சரி, அடுத்தவர்களை ஏமாற்ற முனையும்போது தன்னை திறமையான‌வர்களாகவும், புத்திசாலியாகவும் கற்பனைச் செய்துக் கொண்டு தன்னிடம் ஏமாறியவ‌ர்களை ஏளனமாக கேலி செய்தாலும் சரி, ஒவ்வொரு மனிதனின் தன்மானத்திற்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கச் சொல்லும் இஸ்லாத்தை, அறிவார்ந்த செயல்களுக்கு மாற்றமான அத்தனை மூடப் பழக்கங்க‌ளையும் தூக்கி வீசுமாறு அறிவுறுத்தும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் இந்த ஏப்ரல் ஃபூலில் ஈடுபடக்கூடாது.

எனவே ஏப்ரல் ஃபூல் என்னும் பெயரில் பொய் சொல்வது, பொய்ச் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, ஏளனம்/கேலி செய்வது, ஏமாற்றுவது, ஏமாந்தவர்கள் முட்டாள் என்று இழிவாகக் கருதுவது போன்ற இழி செயல்களில் ஈடுபடாமல், நாம் ஒவ்வொருவரும் இஸ்லாம் கூறும் அறிவுரைகளின் தனித்துவத்தை கட்டிக்காத்து, இஸ்லாம் என்பது நாகரிகமாக‌ வாழவைக்கும் ஒரு வழிகாட்டி(மார்க்கம்) என்பதை இவ்வுலகுக்கு எடுத்துச் சொல்லும் நன்மக்களாக வாழ்வோமாக!

நன்றி.சகோதரி அஸ்மா