Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஏப்ரல் 12

கோடை ஸ்பெஷல்: மாணவர்களே! இது உங்களுக்கு!


கோடை ஸ்பெஷல்: மாணவர்களே! இது உங்களுக்கு!

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்:

பெற்றோர்களிடம்!

உங்கள் பெற்றோர் உங்களின் பள்ளிக்கூட நாட்களில் வீட்டுக்குத் தேவையான எந்த வேலையையும் உங்களிடம் செய்யச் சொல்லியிருக்க மாட்டார்கள். “பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உங்களை விட்டிருப்பார்கள். இப்போது ஏதேனும் சில வேலைகளை உங்களிடம் ஒப்படைத்தால் முகம் சுளிக்காமல் செய்து கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அது மட்டும் அல்ல. நீங்கள் செய்து கொடுக்கும் வேலைகள் உங்கள் அனுபவமாக உங்களுக்கு பின்னர் உதவும்.

தொழுகை

உங்களை பள்ளிவாசலோடு இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலோசனை செய்து கொள்ளுங்கள். மற்ற மாணவர்களை பள்ளிவாசலுடன் இணைத்து வைப்பது குறித்து திட்டமிடுங்கள். உற்சாகத்துடன் களம் இறங்குங்கள். இதன் இன்பமே அலாதியானது. உங்கள் எதிர்காலத்தையே மாற்றி அமைத்திட வல்லது உங்களது இந்த முயற்சி. இது அனுபவம் சொல்லும் உண்மை. தினமும் காலையில் குர் ஆன் ஓதிடத் தவறாதீர்கள். தெரியாவிட்டால் கற்றுக் கொள்ள இந்தக் கோடை ஒரு வாய்ப்பு.

டீவி

டீவி என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று தான். ஆனால் அது “கெடுக்கப்பட்டு விட்ட” ஒரு சாதனமாகத் திகழ்கிறது. இது உங்கள் பொன்னான நேரத்தைச் சூரையாடி விடுகிறது. உங்கள் மனத்தைக் கெடுத்து விடுகிறது. கண் பார்வைக்கும் வேட்டு வைத்து விடுகிறது. எனவே அனுமதிக்கப் பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவைகளையும் எப்போது பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதற்கு உங்களுக்கு நீங்களே கட்டுப் பாடுகளை விதித்துக் கொள்ளுங்கள்.

நேரக் கட்டுப்பாடு

இயல்பாகவே கோடையில் விளையாடுவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் கூடி விடுவீர்கள். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். காலையில் விளையாடச் செல்கிறீர்களா? ளுஹர் தொழுகைக்கு பாங்கு சத்தம் கேட்டால், “டேய், வாங்கடா, தொழுகைக்குப் போவோம்” என்று நீங்கள் புறப்பட்டு விட்டால் மற்றவர்களும் உங்களோடு சேர்ந்து தொழுகைக்கு வந்து விடுவார்கள். அது போல மற்ற தொழுகைகளுக்கும் அப்படியே செய்யுங்கள். இரவு அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். இதனால் மற்ற வேளை தொழுகைகளை ஒழுங்காகத் தொழும் மாணவர்கள் கூட ஃபஜ்ர் தொழுகையை விட்டு விடுகிறார்கள்.

கோடை வாசத் தலங்கள்

நண்பர்களுடன் வெளியூர் செல்கிறீர்களா? தாராளமாகச் செல்லலாம். ஆனால் – எங்கு இருப்பினும் – தொழுகையை தவற விட்டு விடக் கூடாது. ளுஹர்- அஸர் இரண்டையும் சேர்த்துத் தொழுங்கள். மஃக்ரிப்-இஷாவையும் சேர்த்துத் தொழுங்கள். ஆனால் களா மட்டும் வேண்டவே வேண்டாம். எங்கே தங்கினாலும் “அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஃகலக்!” என்று ஓதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்தத் தீங்கும் வந்தடையாது. உங்கள் குழுவில் நல்ல நணபர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்ட மழக்கம் உள்ளவர்கள் அதில் இடம் பெற்றிருந்தால் பயணத்தைத் தவிர்த்திடப் பாருங்கள். இல்லையேல் – பயணத்தில் சற்று எச்சரிக்கை தேவை!.

சுய முன்னேற்றம்

கோடை என்பது பொழுது போக்குவதற்கு மட்டும்
அன்று. அதனை முறைப் படி பயன் படுத்திக் கொள்வதும் நன்றே. இந்த விடுமுறையில் உங்கள் ஆளுமைத் திறன் குறித்து கவனம் செலுத்திட ஒரு நல்ல வாய்ப்பு. உங்கள் தனிப்பட்ட திறமைகளைக் கண்டுபிடியுங்கள் (discover yourself). இதற்கு நீங்கள் சுய முன்னேற்ற நூல்களில் நல்லதொரு நூலை வாங்கிப் படிக்கலாம். நீங்கள் எப்படிப் பட்டவர்? பொருள்களை ஆய்வதில் உங்களுக்கு ஆர்வமா, கருத்துக்களை சிந்திப்பதில் உங்களுக்கு ஆர்வமா, அல்லது மனிதர்களுடன் பழகுவதில் உங்களுக்கு ஆர்வமா? இம்மூன்றில் எது உங்களுக்கு மிகைத்திருக்கிறது என்பதே உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும். ஆங்கில உரையாடல் திறனை வளர்த்துக் கொள்ளவும் கோடை ஒரு வாய்ப்பு. நாளிதழ்களை தினமும் படியுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

திறன் பயிற்சி

என்ன பட்டம் படித்தாலும் உங்களை தனியொரு உயரத்துக்கு இட்டுச் செல்வது உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளே! கார் ஓட்டுவது, நீச்சல், போன்ற திறன்களைக் கற்கலாம். தட்டச்சு, கம்ப்யூட்டர் மென்பொருள் (software)மற்றும் வன்பொருள் (hardware) – போன்றவற்றைக் கற்கலாம்.

எலக்ட்ரிகல் வயரிங், மோட்டார் பம்பு வேலை, ஆட்டோமொபைல் பழுது பார்த்தல், மொபைல் போன் பழுது பார்த்தல் என்று என்னென்னவெல்லாம் கற்க உங்களுக்குப் பிடிக்கிறதோ அவற்றுள் ஒன்றிரண்டை கற்க நேரம் ஒதுக்குங்கள். இவை பின்னர் உங்களுக்கு “தன் கையே தனக்குதவி” போல் பயன்படும்.

அல்லது பகுதி நேர வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் வேறு எவரும் கற்றுத் தராத, எங்கும் கற்றுக் கொள்ள இயலாத அனுபவங்களைக் கற்றுத்தரும்.

வெற்றியாளர்களை சந்தியுங்கள்

உங்கள் ஊரிலுள்ள அல்லது அருகிலுள்ள – வெற்றியாளர்களைச் சென்று சந்தியுங்கள். ஒரு குழுவாக அவர்களிடம் சென்று கலந்துரையாடுங்கள். அவர்களின் வெற்றி ரகசியத்தை அவர் வாயாலேயே கேட்டு அதில் நீங்கள் கற்க வேண்டியதைக் கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் இறையச்சம் மிக்க பெரியவர்களையும் சென்று சந்தியுங்கள். அவர்களிடம் உபதேசம் பெறுங்கள். இத்தகைய சந்திப்ப்பு உங்கள் இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ப்ளஸ் டூ மாணவர்களா நீங்கள்?

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் விடுமுறை உங்களுக்கு! என்ன செய்யப் போகிறீர்கள்? அடுத்து என்ன படிப்பதாக முடிவு செய்துள்ளீர்கள்? கல்லூரி மாணவர்களை சந்தித்து விபரம் சேகரியுங்கள். உங்கள் கல்லூரிப் படிப்பை முடிவு செய்வது நீங்களா அல்லது உங்கள் பெற்றோர்களா? ப்ளஸ் டூ வில் ஃப்ர்ஸ்ட் க்ரூப் எடுத்தவரா நீங்கள்? எவ்வளவு மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொறியியல் படிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? மருத்துவம் படிக்க விருப்பமா? கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்திடு முன்பு – முதலில் உங்களுக்கு இரண்டு கேள்விகள்: 1. நீங்கள் தேர்வு செய்திடும் கல்வியைப் படித்திட உங்களுக்குத் தேவையான (aptitude) திறமை இருக்கிறதா? 2. உங்களுக்கே அதில் ஆர்வம் (interest) இருக்கிறதா?

பெற்றோர் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக உங்களுக்கே ஆர்வம் இல்லாத படிப்பைத் தேர்வு செய்திட வேண்டாம். அழகான முறையில் பெற்றோர்களிடம் உங்கள் விருப்பமின்மையைச் சொல்லி விடுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான துறையில் சேர்வதற்கு கலந்து பேசி முடிவெடுங்கள்.

மதிப்பெண் குறைவாகத் தான் வருமா? கவலையை விடுங்கள்! லட்சக் கணக்கில் பணம் கட்டி பொறியியல்/ மருத்துவம் சேர்ந்து அங்கே “போராடிக்கொண்டிருப்பதை விட” ஏனைய துறைகள் குறித்து சிந்தியுங்கள். கல்வி கடல் போன்றது. அதில் உங்களுக்குப் பிடித்தமான “முத்து” ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இறுதியாக…

இந்த கோடைக் கால நேரத்தை வீணடித்து விடாதீர்கள். கெட்ட நண்பர்களை இனம் கண்டு ஒதுக்கி விடப் பாருங்கள், கெட்ட பேச்சுக்களைத் தவிர்த்திடுங்கள். கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

ஜஸாக்கல்லாஹ்; http://meemacademy.com/?p=61#more-61