இஸ்லாமும் விஞ்ஞானமும்
-மௌலவி முஹம்மது இப்ராஹீம் சாதிக்
நாம் வாழும் நவீன யுகம் அறிவியல் ஆராய்ச்சிகள், விஞ்ஞான கண்டு பிடிப்புகள், புதிய அறிவியல் கோட்பாடுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அறிவியல் கருத்துகள் மலர்ந்து மணங்கமழும் யுகம். ஆனால் எத்தனையோ அறிவியல் கருத்துக்கள் வந்த வேகத்தில் மறைந்து போகின்றன. நிரூபிக்கப்பட்ட சில உண்மைகள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
இஸ்லாம் மனித சமுதாயத்தை சீர்படுத்த நேரிய வழியை மட்டும் காட்ட வில்லை, மனிதனின் அறிவை பெருக்கும் விதத்தில் அறிவியல் பேருண்மைகளையும் வெளிப்படுத்துகிறது.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டு நிறைவடைவதற்குள் இவ்வையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இஸ்லாத்தின் தூதுச் செய்தி பரவிச் சென்று உயர்ந்த நாகரீகத்தையும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தித் தந்தது.
முழு உலகிற்கும் நாகரீகத்தை தந்து அறிவின் அணையாத தீபத்தை ஏற்றி வைத்தது ஸ்பெயின் என்று இன்று அழைக்கப்படக்கூடிய அன்றைய முஸ்லிம் அந்தலூசியா.
ஈராக்கில் ஐந்து நூற்றாண்டுகள் நிலை கொண்டிருந்த அப்பாஸிய சாம்ராஜ்ஜியம் அறிவு மறுமலர்ச்சிக்கும், எழுச்சிக்கும் வித்திட்டது என்றால் இஸ்லாம் காட்டிய அறிவுப் பாதையில் நடந்து சென்றதால் தான் என்பதில் ஐயமில்லை. இறைவனால் அருளப்பட்ட ஒரு மார்க்கம் அறிவாண்மையில், தீர்க்கக்கலையில் மிகைத்து நின்றால் மட்டுமே மக்கள் அதனை ஏற்றுக் கொள்வர்.
புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்ற மேதையுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறு கூறுவார். (Science without Religion is Lame, Religion without Science is Blind) மதம் இல்லாத அறிவியல் முடமானது, அறிவியல் இல்லாத மதம் குருடானது.
தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain – Receptors)
உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூளையில் உள்ளதாக ஆரம்ப காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப கால கண்டுபிடிப்புகள் வலிஉள்வாங்கிகள் (Pain – Receptors) தோலில் இருப்பதாக கூறுகின்றன.
வலிஉள்வாங்கிள் (Pain – Receptors) தோலில் அமைந்திருப்பதால் தான் ஒரு மனிதன் வலியை உணர்கின்றான் என்பதை நிரூபித்துள்ளன. இந்த வலி உள்வாங்கிகள் இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றார். நோயாளி வலியை உணர்ந்தால் மருத்துவர் மகிழ்ச்சி அடைவார். இதற்கு காரணம், தீக்காயங்கள் மேலோட்டமானவை தான் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் பழுதுறாமல் நல்ல நிலையில் உள்ளன என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு மாறாக, நோயாளி வலியை உணரவில்லை என்றால், தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதையும் வலி உள்வாங்கிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மனிதனின் தோலில் வலி உள்வாங்கிகள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிகாட்டுகின்றது.
‘யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லாத (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (முழுமையாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்’. (சூரா அன்னிஸா : 56)
தாய்லாந்தில் உள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் (Chieng Main University) உடற்கூறு துறையின் (Dept. of Anatomy) தலைவராக இருக்கும் பேராசிரியர் தகாடட் தெஜாஸன், தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டார்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் பேருண்மையை திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்ட பேராசிரியர் தெஜாஸன் பெரும் வியப்படைந்தார். இந்த இறைவசனம் அவர் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சவூதியின் தலைநகர் ரியாத்தில் திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அறிவியல் அத்தாட்சிகள் (Scientific Signs of Quran and Sunnah) எனும் தலைப்பில் நடைபெற்ற எட்டாவது சவூதி மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாஸன் இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் முன் பகிரங்கமாக முழங்கினார்.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’.
0 comments:
கருத்துரையிடுக