Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஆகஸ்ட் 15

இனியாவது விழித்து கொள்வோமா?

இனியாவது விழித்து கொள்வோமா?


வருடத்திற்கு ஒரு ரமளான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒருபெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது. இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புபவர்கள் நிறைய பேர் நம்மிலே உள்ளார்கள்.

இதற்குக் காரணம் என்னவெனில் ரமளானின் முக்கியத்துவம் தெரியவில்லை. ரமழானில் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

ஆம் சகோதரர்களே! ரமளானில் நாம் ஜெயிக்க வேண்டாமா?

ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டிச் செல்லும் புனிதமிக்க ரமளானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமளானில் நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

பொதுவாக நாம் ஒவ்வொரு வருட ரமளானிலும் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் கடந்த ரமளானின் தினங்களில் செய்தோம் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஸஹர் உணவை நேர காலத்தோடு உண்டுவிட்டு அவசர அவசரமாக சென்று படுத்துறங்குகிறோம்/அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் சுப்ஹுத் தொழுகை? அதன் கதி அதோ கதிதான்.

பகலில் லுஹர் தொழுகைக்கு முன் எழுந்து, அதன் பின்னர் நம்முடைய மற்ற காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறோம். பெரும்பாலும் லுஹர், அசர், மஃரிப், இஷாவுடன் சேர்த்து இரவுத் தொழுகை என்று மற்ற தொழுகைகளை எப்படியோ தொழுது விடுகிறோம்.
அதிலும் சிலருக்கு லுஹர் தொழுகை உண்டு. அதன் பின் ஒரு தூக்கம் போட்டால் அசர் இல்லை. நோன்பு திறப்பதற்குத் தான் கண் விழிப்பார்கள்.

இஷா தொழுகையுடன் சேர்த்து இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தூக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலானவர்களின் நிலை அதுவன்று.

ரமளான் காலம் என்றால் இரவு முழுவதும் கூத்தும் கும்மாளமும் நிறைந்திருக்கும். கேரம் போர்டு, கிளித்தட்டு, இன்ன பிற தேவையற்ற வீண் கேளிக்கைகளில் இந்த புனிதமிக்க இரவை கழித்துக் கொண்டிருப்பார்கள் பிறகு பகல் முழுவதும் ஊரே அடங்கிப் போகும் அளவுக்கு தூக்கத்தில் மூழ்கியிருக்கும்.

இன்னும் சிலரின் பகல் நேர - இரவு நேர வேலையாக - பொழுது போக்கும் காரியமாக தொலைக்காட்சி பார்த்தல், சீட்டு விளையாடுதல், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் கூடி தேவையில்லாத வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே...

ரமளான் மாதம் என்பது நமது வாழ்வை சரியாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சிக் களமாகும். அந்தப் பயிற்சிக் களத்தை சரியாக நாம் பயன்படுத்த முனைய வேண்டும்.

அந்த அடிப்படையில் தொழுகையை சரியாகப் பேணுவதற்கு நாம் நம்மை பழக்கிக் கொள்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவது இந்த ரமளானுடைய காலம். சரியான நேரத்தில் ஜமாத்துடன் சேர்ந்து நாம் தொழுவதால் நமது வாழ்வை சரியாக வழப்படுத்திக் கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும்.

திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனிதமிக்க மாதமாக இந்த ரமளான் மாதம் இருக்கிறது. இம்மாதத்தில் அதிகமதிகம் நாம் குர்ஆனை ஓத வேண்டும். இதனால் நமது வீடுகளில் திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக நமது பிள்ளைகளும் அதைப் பார்த்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு “ஜுஸ்வு” ஓதினால் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்த நன்மையை நாம் பெற்றுவிட முடியும்.

கிடைக்கும் நேரங்களில் நமது உறவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய செய்திகளை எத்தி வைப்பதற்கு முனைய வேண்டும். அது காலை நேரமாக இருக்கலாம். அல்லது இரவுத் தொழுகைக்குப் பின் கண்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை விடுத்து அந் நேரத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மார்க்கத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை, நன்மையான காரியங்களை நாம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் அதன்படி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வோம்.

நண்பர்களுடன் மார்க்க விஷயங்களை மட்டும் பேச பழகிக்கொள்ள இந்த மாதத்தை தேர்தெடுக்கலாம்.

லைலத்துல் கத்ரு என்னும் புனித மிக்க இரவு நம்மை அடைய இருக்கிறது. அந்த இரவில் இறை பேற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்  சில பள்ளிகளில் இஃதிகாஃப் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும். வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 ஆவது செய்தி ஆதாரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் நாமும் அந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்து நன்மைகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.. இந்த புனித மிக்க ரமளான் இன்னும் ஓரிரூ வாரங்களில் நம்மை விட்டு பிரியப்போகிறது. அடுத்து வரும் காலங்களில் நாம் எங்கிருப்போம் என்று நம்மால் கூற இயலாது. எனவே இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் நல்ல பல அமல்கள் செய்து இறைப் பொருத்தத்துடன் வாழ எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மை ஆக்கி அருள் புரிய துஆ செய்ய வேண்டுகிறேன்.
http://adiraixpress.blogspot.com

2 comments:

அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

முத்துக்கள் தொகுப்பு.

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல் உதவிகளை தந்திடுவானாக ஆமின்.

மு.ஜபருல்லாஹ் சொன்னது…

வ அலைக்கும் ஸலாம் சகோ.அய்யூப்,
தங்களது கருத்திற்கும் அன்பான துஆவிற்கும் மிக்க நன்றி.