இந்து மதத்தில் பலதார மணம்
இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை "ஒருவனுக்கு ஒருத்தி" என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)
கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.
அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது .
ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட ( கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.
முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.
பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி "1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.
1953 ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.
யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்
பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக , பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:
1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).
2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).
3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).
4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).
5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக்' (TALMUDIC) பரிந்துரைக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது .
புதிய ஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது ?
பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் 'பலதார மணம் பற்றி மறுஆய்வு' என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: "ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதார மணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை.' Eugee oillman, Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches (New York: Ornis Nooks, 1975- p.140). மேலும், யூத சமூகத்தில் பலதார மணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற, ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) கீரேக்க-ரோம கலாச்சாரத்தை அனுசரித்தே பலதார மணத்தை சர்ச் தடை செய்தது என்ற உண்மையை பாதல் ஊஜீன் ஹில்மேன் நம் கவனத்திற்கு க் கொண்டு வருகிறார். நம்முடைய இக்காலத்தில், மற்றொரு திருமணம் செய்வது தடை செய்யப்படுவதற்கு ரோம பழக்கவழக்கமே முன்னுதாரணம் எனலாம்.
"பலதார மணம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சசைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். The Weekly Review, Aug. 1, 1987. ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றிக் கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்க சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ளும் முறையில், ஆதரவற்றுத் துன்பத்துக்குள்ளாகும் மனைவி, மக்களைக் கருத்தில் கொள்ளும் போது, பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது' எனத் தீர்மானித்துள்ளார்.
பைபிள் சில நேரங்களில் நிர்ப்பந்த பலதார மணத்திற்கு அனுமதிக்கிறது.
'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க)
பைபிளில் 'ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன .
யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது.
ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான 'தல்முதிக்' (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர், பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.
பலதார மணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது ?
உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவது திருக்குர்ஆன் மட்டும்தான்.
திருக்குர்ஆனின் மனைவியர் (அந்நிஸா ) என்னும் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனம் "... உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ , மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)." என்று சுட்டிக் காட்டுகின்றது.
மேலும் அதே அத்தியாயத்தின் 129 ஆம் வசனத்தில், "(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது..." என்று மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதியேயன்றி கட்டாயமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் 4:3 ல் "சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள் )" என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் "சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது" என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார மணத்திற்குத் தடையில்லாமல் இருந்தது . ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு இஸ்லாத்தில் ஓர் ஆண் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே திருமணம் செய் து கொள்ள முடியும் என்று வரம்பு கட்டியது. அதுவும் மனைவியரிடையே சமமான நீதி செலுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதி அளித்தது - அனுமதிதான்; கட்டாயமன்று.
ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரைக் கணவராக ஏற்றுக் கொள்வது அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என்ற இரண்டைத் தவிர மூன்றாவது வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் (இரண்டாம் தாரமான) முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - (பொதுச் சொத்தாக மாறுவதான) இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.
இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்த நிலை.
ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே சட்டப்படிச் செல்லுபடியாகின்ற பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமைதான் உருவாகும்.
ஒரு சட்டத்தை இயற்றினால் அது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும் அது இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. "இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது, ஏனெனில் அவை பழங்காலத்தவை" என்று கூறக்கூடியவர்கள், கூடா உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும்.
இஸ்லாத்தில் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதற்கு இன்னும் வேறு பல காரணங்கள் இருந்தாலும் - தங்களின் மானத்தை மட்டுமல்லாது - முக்கியமாகப் பெண்களின் மானத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்க்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்திற்கு சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தை செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது அவ்வளவு தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
Alhamdhuillah, Nice article...
கருத்துரையிடுக