Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், மார்ச் 24

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..


இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான
விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா
அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான்.
“வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும்,
பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு,
தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும்
தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே
கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள்.
பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து
கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து
வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள்
கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும்.

இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண
நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல
விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே
கேவலப்படுத்திக்கிற மாதிரியான செயல் தான்.

அந்தக் காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து
கொடுத்து விடுவது வழக்கமாயிருதுச்சு. பால்ய விவாகங்கள் அதிகமாக
இருந்த காலம் அது. தகவல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால
அவங்க வீட்டுப் பொண்ணு, வயசுக்கு வந்துட்டா, `எங்கள் வீட்டில் பெண்
திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்'
என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள் நடத்தப் பட்டன. ஆனால்
இன்றைய சூழலில் பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய
தொலைநோக்குப் பார்வை விரிவடைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது
இத்தகைய விழாக்கள் தேவையற்ற ஒன்று தான்.

முந்தைய நாள் வரைக்கும் அந்தக் குழந்தை சராசரியா சந்தோசமா
விளையாடிகிட்டு இருக்கும். வயதுக்கு வந்ததும் ஏன் தான் இப்படி
பாடாய்ப் படுத்துறாங்களோ தெரியல. அந்தச் சின்னப் பொண்ணுக்கு
ஒரு சேலைய கட்டிவிட்டு, கழுத்துல மாலையப் போட்டு Chair’ல
உட்கார வச்சு கண்காட்சிப் பொருளா ஆக்கிட்றாங்க. “மகா ஜனங்களே..
எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி,
அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும்
சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ..

தனக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அந்தப்
பொண்ணுக்குப் பக்குவம் இருக்காது. ஏதோ திருவிழால காணாமப்
போன குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கும்.
பத்திரிக்கை அடிச்சு பந்தல் போட்டு மைக்செட்டெல்லாம் வச்சு
பெரிய விழாவாகக் கொண்டாடி மொய் என்ற பேரில் வசூல் செய்யும்
முட்டாள்தனம் இன்னமும் நடக்குது.

என்னதான் கலாச்சாரம், வழிவழியாக வந்த பழக்கம்னு சொன்னாலும்
ஒரு சின்னப் பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து வேடிக்கை காட்டுவது
முட்டாள்தனம் தான். நன்கு படித்தவர்கள், பக்குவமடைந்தவர்கள் கூட
இது மாதிரியான விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர்.
இந்தப் பாழாய்ப்போன சமூகம் இவர்களை இப்படியே பழக்கி வைத்துவிட்டது.
இதுபோன்ற விசேஷங்களைத் தங்களுடைய பகட்டுகளைக் காட்டுவதற்கெனவே
நடத்தும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான
கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.


நன்றி: http://padikkaadhinga.blogspot.com/2011/03/blog-post_22.html