Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, மார்ச் 25

கண் பார்வை

கண் பார்வை

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது.

இந்த நிலையில், பிறந்த குழந்தையின் கண்களின் அமைப்பு பற்றியும் அதன் கண்களில் ஏற்படும் கோளாறுகள் பற்றியும் பேசுவோம்.

பிறந்த குழந்தையின் கண்கள், சிறிதாகக் கோடு கிழித்தாற்போல் இருக்கும். ஆனால், குழந்தையின் கண்களின் வளர்ச்சி, உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட, வேகமாக இருக்கும். நான்கு வயதிற்குள் கிட்டத்தட்ட 80% வளர்ச்சி முடிவடைந்துவிடும்.

பிறந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் தூரப் பார்வை என்ற நிலையில் இருக்கும். கண்ணின் உருவ வளர்ச்சி ஏற்படும் போதுதான், அது இயல்பான நிலையை எட்டும்.

குழந்தைகளின் குறும்பான கரு வண்டு போன்ற கண்கள், நிறைய மேஜிக் வேலைகளையும் செய்யும். திடீரென்று மாறுகண் போல கண்களை உள்நோக்கிவைத்துக் காண்பிக்கும். ‘‘ஐயோ நம் குழந்தைக்கு மாறுகண் உள்ளதோ?’’ என்று பதறி தாய் பார்ப்பாள். ஆனால், அதற்குள் கண்களை நேராக்கி தாயைப் பார்த்து குறும்புச் சிரிப்பு ஒன்று சிரிக்கும். நாம் கண்டது கனவா? அல்லது நனவா? என்று தாய் தன் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்ப்பது போல, அடிக்கடி இது போல் நடக்கும்.

பெற்றோர் இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. குழந்தைகள் பிறந்து 6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை தங்களது கண்களை, மூக்கை நோக்கி கொண்டு செல்வது மிகவும் இயல்புதான். அது வளர வளர இது குறைந்து கொண்டே வந்து பின்னர் இயல்பாகி விடும்.

அதென்ன துணிப்பை போல கண்ணீர்ப் பை?

புதிதாகப் பிறந்துள்ள பட்டுக் குழந்தை அழுதால், 3 மாதங்கள் வரை சத்தம்தான் வரும் கண்ணீர் வராது.

இந்த ரோஜாக்குட்டியின் கண்களில் கண்ணீர் வந்தால் அநேகமாக இது கண்ணீர்ப்பை அடைப்பு இருந்தால் வரும். கண்ணீர்ப்பை என்பது மூக்கும் கண்ணும் சந்திக்கும் இடத்தில் இருக்கும்.

கண்ணீர்ப்பை அடைப்பு ஏற்படும்போது, குழந்தையின் கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்கும். சில நேரம் வடியும். கண்களில் பூளை தள்ளும். இமையெல்லாம் ஒட்டிக் கொள்ளும். ‘‘ஐயோ, என் பட்டுக்குட்டியின் கண்ணுக்கு என்னாச்சு?’’ என்று தாய் பதற்றம் அடைவாள். ஆனால், இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. உடனடியாக கண் மருத்துவரை அணுகினால், அவர் சில சொட்டு மருந்துகளைக் கொடுத்து, கண்ணீர்ப்பையை மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லித் தருவார். இதைச் செய்துகொண்டே இருந்தால், பாப்பா வளர வளர, 9 மாதத்திற்குள்ளாக சரியாகப் போய்விடும்.

ஒன்பது மாதத்திற்குப் பின்னரும் கண்களில் நீர் வடிந்தால் கண் மருத்துவரிடம் தூக்கிச் செல்ல வேண்டும். அவர் Probing என்ற சிறு முறையினால் அதைச் சரிசெய்து விடுவார்.

அதன்பிறகு பட்டு பாப்பா பளீரென்ற கண்களுடன் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.

பெற்றோர் இருவர் சொன்னார்கள். ‘‘ ‘குழந்தை வேணும் குழந்தை வேணும்னு கோயிலுக்குப் போனால் கோட்டானாய்ப் பிறக்கும்னு குழந்தைசாமி சொல்லுச்சாம்’ ’’ என்று. அவர்கள் மேலும், ‘‘டாக்டர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குப் போனோமோ இல்லியோ, உங்கள் கண் மருத்துவமனைக்குத் தவறாது வந்துகொண்டு இருக்கிறோம். முதலில் கண்ணீர்ப்பை அடைப்பை சரி செய்தீர்கள். இப்போது திடீரென்று கண்ணில் ஒரே சிவப்பு. என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்று அங்கலாய்த்தார்கள்.

தெளிந்த நீரோடைப் போல உள்ள பளிங்குக் கண்களில், சிவப்பு நிறத்தைப் பார்க்கும்போது, சிலீர் என்ற பயம் மனதிற்குள் தோன்ற... அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆயிரம் கதை சொல்வார்கள்.

‘‘அங்கு ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்கு கண் இப்படித்தான் இருந்தது. பார்வை போயே போச்சு’’ என்று பயமுறுத்துபவர்கள் ஏராளம். ஆனால், இது பயப்படும்படியாக இருக்காது. பிறந்து 3_4 மாதங்கள் ஆகும்போது, குட்டிப் பாப்பா, கை கால்களை அடித்துக் கொண்டு, நீந்தத் தொடங்கும். அப்படிச் செய்யும்போது, அதன் ரோஜாக் கைகளில் உள்ள மென்மையான நகம், கூர்மையான ஆயுதமாக மாறி, அதன் கண்களில் தானே குத்திக் கொள்ளும். பார்ப்பதற்குப் பயப்படும் அளவுக்கு கண் சிவந்து விடும். இதனால் ஒன்றும் ஆகாது. சொட்டு மருந்து போடப் போட, இந்த சிவப்பு கொஞ்சம், கொஞ்சமாக 15_20 நாட்களுக்குள்ளாக மாறி விடும். திரும்ப பளிங்கு வெள்ளைக் கண்களுடன் பொக்கை வாய் திறந்து பளீர்ச் சிரிப்புடன் ‘‘நல்லா பயமுறுத்திட்டேனா,’’ என்று வீட்டிலுள்ள எல்லாரையும் பார்த்துச் சிரிக்கும்.

நோய்த் தடுப்பூசி_கண் பரிசோதனை இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஒவ்வொரு குழந்தைக்கும், நோய்த் தடுப்பூசி (Immuniratuen) எதற்காகச் செய்கிறோம். நோய்த் தடுப்பிற்காகத் தானே. நன்றாக நோய் நொடியில்லாமல் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதைத் தூக்கி கொஞ்சி ‘‘டாக்டர் மாமா கிட்டே போய் சாக்லெட்டும், ஐஸ்கிரீமும் வாங்கிட்டுவரலாம்’’ என்று ஏமாற்றி கூட்டிக் கொண்டு போகிறோம். ‘‘நறுக்’’ என்று ஒரு ஊசியைப் போட்டுக் கொண்டு வருகிறோம். தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு, காய்ச்சல் அடிக்கிறது. ‘‘ஐயோ என் குழந்தைக்கு வலிக்கும். என் குழந்தைக்கு தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும். அழும். வேண்டவே வேண்டாம் தடுப்பூசி’’ என்று நாம் நினைத்தால், நம் குழந்தைகள் பலவிதமான விபரீதமான உயிர்ச்சேதம் விளைவிக்கும் நோய்களைச் சந்திக்க நேரிடும் அல்லவா.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதிற்குள் கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். அதாவது தடுப்பூசி போடும் அளவு அவசியமானதாகும். தடுப்பூசி போடாமல் நாம் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. அதே போல்தான் குழந்தைகள் கண் பரிசோதனையும், இன்றியமையாதது. ஒரு குழந்தையின் கண்கள் பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும், நோய் நொடி இல்லாததுபோல் தெரிந்தாலும் கூட 3_5 வயதிற்குள் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவோ பார்வை இழப்பை நாம் தடுக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் ‘‘மூன்றிலிருந்து 5 வயதிற்குள் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது தடுப்பூசி போடும் அளவு முக்கியமானதாகும்’’ என்று சொல்லி வருகிறோம். அதைத் தாரக மந்திரமாகச் சொல்லத் தொடங்கினோம். அதுவே இப்போது பெற்றோர் மனதிலும் ஆசிரியர்கள் மனதிலும் பதியுமளவிற்கு நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நிறைய எடுத்துள்ளோம்.

நம் செல்லக் குந்தைகளின் கண்களில் உள்ள குறைபாட்டை 5 வயதிற்குள் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும். தெளிவற்ற பார்வையிருந்தால் கண்ணாடி போட்டு, தெளிவான பார்வை கண்நரம்பில் விழுமாறு செய்ய வேண்டும்.

‘‘ இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். சரியான பருவத்தில் கண்நோய்களைச் சரி செய்யாமல் குழந்தையிலேயே கண்பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டீர்கள் என்று குழந்தைகளும் கேட்கக் கூடாது. பெற்றோரும் ‘‘என் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பொம்மை வாங்கிக் கொடுத்தேன் வெளி நாடெல்லாம் கூட்டிச் சென்றேன். வீடு கட்டிக் கொடுத்தேன் ஆனால் கண் பரிசோதனை செய்யத் தவறி விட்டேனே, நானே என் குழந்தையின் எதிர்காலத்தைக் கெடுத்துவிட்டேன்’’ என்று காலம் கடந்து வருத்தப்படக் கூடாது.

கண் மருத்துவமனைக்கு வரும் பெரியவர்களுடன், சில நேரம் குழந்தைகளும் வருவார்கள். ‘‘அம்மா, உங்கள் குழந்தைகளின் கண்களை பரிசோதனை செய்தாகிவிட்டதா?’’ என்று கூறியவுடன் ‘‘ஐயோ, டாக்டர் என் கண்மணியின் கண்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது’’ என்பார்கள். நாம் அனைவரும் ஒன்று மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையின் கண்களில் குறைபாடு ஒன்றுமில்லை என்பதை, முற்றிலும் முழுமையான கண் பரிசோதனைக்குப் பின்னர் ஒரு கண் மருத்துவரால் மட்டுமே சொல்ல முடியும்.

-- டாக்டர் ரமேஷ் மற்றும் டாக்டர் மீனா - திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை

தொகுப்பு : குமுதம் ஹெல்த்திலிருந்து

2 comments:

அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!

Jafarullah Ismail சொன்னது…

வ அலைக்கும் ஸலாம்.
நன்றி சகோதரா!விடுமுறை இனிதாய் இருந்ததா?