Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், மே 24

குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும் தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கற்றுக்கொள்ளும் திறன்

இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

சத்தமில்லாத மரணம்

இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து

இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில் தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.

குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அரவணைப்பு முக்கியம்

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

நன்றி:
http://kadayanallur.org

ஞாயிறு, மே 22

ரோஜாவின் மருத்துவ குணங்கள்

ரோஜாவின் மருத்துவ குணங்கள்

இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும்முக்கிய பங்கு வகிக்கிறது.

35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.

இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.

ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.

குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்.

பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

நன்றி: http://chittarkottai.com

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்!

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்!

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?

உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...

o பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

o ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

o குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

o ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

o உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

o ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

o பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

o பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள்.

பின் குறிப்பு: சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.

source: http://www.lankasritechnology.com/

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்


குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது.

குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது.

இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.

அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.

ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.

ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.

இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.

உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.

அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.

தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.

குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.

ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள்.
அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.

பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.

மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.

ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.

அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.

பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.

அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின், அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.

குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.

பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.

குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;

பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.

பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.

அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.

திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.

நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.

பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;

இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;

இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;

இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.

பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.

உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.

இது போன்ற வழிமுறைகளை சொல்லி அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆ செய்யுங்கள்.

அல்லாஹ் அருள்புரிவானாக!

நன்றி:எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)(இஸ்லாம் கல்வி)

வியாழன், மே 19

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!



சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் 15-05-2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.



ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் காட்சியளிக்கிறது. 12000 மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள். மன்னர் அப்துல்லாவும் ரெயிலில் அமர்ந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

40000 ஸ்கொயர் மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல்: கான்ஃபரன்ஸ் ஹால்: பரிசோதனைக் கூடம்: நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு: தகவல் தொழில் நுட்பம்: உயிரியியல் போன்றவற்றிற்க்கான தனித்தனி துறைகள் இயங்குகின்றன.


சவூதிக்கான பிரிட்டிஷ் தூதர் டாம் பிலிப்ஸ் பேசும்போது, 'இன்று ஒரு முக்கியமான நாள். சவூதி அரசு தனது மக்களை முழு கல்வி பெற்ற சமூகமாக மாற்றும் முயற்ச்சிக்கு எனது வழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் சவூதியும், இங்கிலாந்தும் கல்வி மேம்பாட்டில் இணைந்து செயல்படும். உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகமான இதன் வளர்ச்சி மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.' என்றார்.

மன்னர் அப்துல்லாஹ் பேசும் போது 'நமது நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பல்கலைக் கழகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சரிவர பயன்படுத்தி அனைவரும் கல்வியாளர்களாக மாற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

பெண் கல்வியை இஸ்லாம் வரவேற்கிறது. அதே சமயம் பெண்மைக்கு பங்கம் வராமல் பெண்மையின் பாதுகாப்போடு அவர்களின் கல்வித் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பல முயற்ச்சிகளில் ஒன்றாகத்தான் இந்த பெண்கள் பல்கலைக் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த உன்னத நோக்கத்தை இறைவன் மேலும் சிறப்புற செய்ய வேண்டும்.

'அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?' என்று முஹம்மதே கேட்பீராக! அறிவுடையோர்தாம் நல்லறிவு பெறுவார்கள்.

-குர்ஆன் 39:10

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!' என்று பிரார்த்திப்பீராக!'

-குர்ஆன் 20:114

2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். -புகாரி

7066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். -புகாரி

நன்றி: சகோ.சுவனப்பிரியன்
http://suvanappiriyan.blogspot.com/2011/05/blog-post_16.html

புதன், மே 18

வெற்றி பெறுவதற்கு...

வெற்றி பெறுவதற்கு...

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. அதிகாலையில் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங் கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங் கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட் டும்.
11. வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, ிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்த வரை குறைவாகவே இருக் கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளை யும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்களின் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்


கல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே,
கடந்த 15.01.2011 அன்று அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு இறுதி அமர்வில் கல்வி தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சகோதரர்CMN சலீம் அவர்கள் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். அதன் காணொளியை இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறோம். இந்த நேரத்தில் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம்.






தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

செவ்வாய், மே 17

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?


நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.

கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.

நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.

பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு

“ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன.

பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.

மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.

75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.

நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.

நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.

நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.

பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.

நன்றி: :http://kadayanallur.org/2011/01

தேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்...

தேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்...


நடந்து முடிந்திருக்கின்ற சட்டமன்ற தேர்தல், வரலாறு காணாத திருப்பமாக அமைந்து விட்டது. தி.மு.க.வின் அரசியல், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டுள்ளது. அரசியல் அதிகார மையமாக, கருணாநிதி குடும்பம் கிளை பரப்பிக் கிடந்ததை மக்கள் ஏற்கவில்லை.

அலைக்கற்றை ஊழல் மக்களுக்குப் புரியாது என்று நம்பியவர்கள், தங்கள் அரசியல் அறியாமையை உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி வழியாகவே இந்த ஊழலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா வேண்டும் என்று யாரும் வாக்களிக்கவில்லை. கலைஞர் அரசு வேண்டாம் என்று வாக்களித்திருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல்கொள்ளை, மீனவர்கள் படுகொலை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு துணை நின்றது, திரைப்படத் துறையில் குடும்ப ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது போன்றவை எல்லாம் இந்த சவப்பெட்டிக்கு ஆணியடித்திருக்கிறது.

இதற்கெல்லாம் மாற்றாக அமைய வேண்டிய விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தி.மு.க.விற்கு முட்டுக் கொடுத்து, தவறுகளுக்கு உடந்தையானதால் வீழ்த்தப்பட்டுள்ளன. சார்பு நிலை அரசியலால், தேர்தலுக்கு முன்பே வைகோ வீழ்த்தப் பட்டார். அதே சார்பு நிலை அரசியலால் திருமாவளவனும், மருத்துவர் ராமதாசும் உடன்கட்டை ஏற வேண்டிய அவலம் நிகழ்ந்து விட்டது.

தமிழகத்தில் இடதுசாரிகள் சவாரி, வழக்கம் போல வென்றிருக்கிறது. ஆனால், உலகமயமாக்கலை தழுவிப் போன குற்றத்திற்காக 34 ஆண்டுகள் வெற்றிக்கொடி கட்டிய மேற்கு வங்கம் பறி போயிருக்கிறது. கேரளமும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இவ்வளவு காலமும், சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னை காட்டிக் கொண்ட தி.மு.க. அதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவு நிலையை மாற்றி இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துறைமுகம், வாணியம்பாடியில் தி.மு.க. தோற்று இருக்கிறது. தனக்கு வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு இடங்களில் வென்றிருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. அ.தி.மு.க.வைப் போலவே கொள்கை ஏதுமின்றி, கருணாநிதி எதிர்ப்பு ஒன்றையே மையப்படுத்தி விஜயகாந்த் வென்று இருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சி, பலருக்கும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.

இது ஆரோக்கியமான அரசியல் போக்கா என ஆராய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தகுதியானவர் தானா என்ற கேள்விகள் முளைப்பது தவிர்க்க இயலாதது ஆகிறது. இந்த இடத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன் போன்ற தகுதியாளர்களால் நிரப்ப முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது?

கொள்கையும், ஆட்சி அதிகாரமும் வேறு வேறு திசைகளில் இயங்குவது ஏன்? தங்களுக்கான தலைவர்களை இன்னமும் தமிழன், திரைப்பட கொட்டகையில் தேடுவது ஏன்? இதை மாற்ற நம்மிடம் என்ன சாத்தியக் கூறுகள் உள்ளன? நம் சமகாலத்தில் வாழும் தோழர்.நல்லக்கண்ணு போன்ற மகத்தான மாமனிதர்களை அதிகாரம் சென்றடையாதது ஏன்?

கருணாநிதியிடம், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி சரணடையும் போக்கு எப்போது மாறும்? விலைவாசி உயர்வின் உண்மையான ஊற்றுக்கண் எது? இதை மக்கள் இயக்கமாக மாற்றாத குற்றம் யாருடையது? உலகமயமாக்கலின் தீமையை, பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பை அம்பலப்படுத்த வேண்டியவர்களின் கடமை நிறைவேறி விட்டதா? இயற்கையை சுரண்டிப் பிழைக்கும் கும்பலிடம் இருந்து நாட்டை யார் காப்பது?

மூன்றாவது அணியை கட்டமைக்காத குற்றம் யாருடையது? ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டுப் போடுவேன் என்கிற மக்களின் மனநிலையை மாற்ற வேண்டியது பொறுப்பை யார் ஏற்பது? இதற்கெல்லாம் விடை காண வேண்டிய பொறுப்பு நம் அனைவர் கடமையாகிறது.

நம்மை மீட்க தேவதூதர்கள் தீர்க்கதரிசிகள் வர மாட்டார்கள்.
நம் அரசியல் விடுதலையை நாமே வென்றாக வேண்டும்.

ஆக்கம்: சகோதரர்.அமீர் அப்பாஸ்
நன்றி:://www.keetru.com/

திங்கள், மே 16

கம்ப்யூட்டரில் பிஸியா? தொழுகையைத் தவற விடுகிறீர்களா?

கம்ப்யூட்டரில் பிஸியா? தொழுகையைத் தவற விடுகிறீர்களா?

கம்ப்யூட்டரில் பிஸியா? தொழுகையைத் தவற விடுகிறீர்களா? கவலையை விடுங்கள்!

கீழ்க்கண்ட Firefox Add-ons உங்களுடைய உதவிக்கு வருகிறது.

இதனை Download பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் பாங்கொலி ஒலித்திட, தொழுகைக்கு புறப்பட உங்களைத் தட்டி எழுப்பும்.