Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, அக்டோபர் 31

ஹிஜாபு சகுந்தலா நரசிம்ஹன்


ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறியதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!


சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!


- தமிழாக்கம்: அபூ ஸாலிஹா

திங்கள், 28 ஜூலை 2008 16:05

http://www.satyamargam.com

சனி, அக்டோபர் 30

கேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் பதிலடியாக மாறிய எஸ்.டி.பி.ஐயின் முன்னேற்றம்

கொச்சி,அக்.30:முவாற்றுப்புழா என்ற இடத்தில் நபி(ஸல்...) அவர்களை கேவலமாக விமர்சித்து வினாத்தாள் தயாரித்த நியூமென் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கைவெட்டிய வழக்குத் தொடர்புப்படுத்தி ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் மற்றும் சங்க்பரிவார்களும் நடத்திய பொய்ப் பிரச்சாரம், போலீஸ் நடத்திய முஸ்லிம் வேட்டை ஆகியவற்றிற்கு எதிராக கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர் கேரள வாக்காளர்கள்.

மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நபிகளாரை அவமதித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்தி அதிகமான முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடி, சிறையிலடைத்த எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்ற வார்டுகளில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் கைவெட்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அனஸ் வாழைக்குளம் ப்ளாக்கில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்கவோ, வாக்களிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 3992 வாக்குகளைப் பெற்று 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப் பெற்றார். அனஸ் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்த பல பஞ்சாயத்து வார்டுகளிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நபிகளாரை அவமதித்த வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர் ஜோசப் பணியாற்றிய நியூமென் கல்லூரி அமைந்துள்ள கீரிக்கோடு வார்டில் 310 வாக்குகளைப் பெற்று எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் ஆசிரியை சுபைதா வெற்றிப் பெற்றார். இவ்வார்டிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ யினால் ஈர்க்கப்படுவதை கவலையோடு காண்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை. பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் எஸ்.டி.பி.ஐயை ஒடுக்கிவிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது.

பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்களை விட எஸ்.டி.பி.ஐயின் அலுவலகங்கள் அதிகமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் பி.கோபிநாத்தின் திருப்புணித்துரா என்ற இடத்திலிலுள்ள வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர். கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி.பி.மைதீன் குஞ்சினை இவ்வழக்கில் குற்றவாளியாக இணைத்ததும் கட்சியின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கத்திலாகும்.

பகிரங்கமாகவே எர்ணாகுளம் நகரின் மத்தியில் பாலாரிவட்டம் போலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வியாபாரபவன் என்ற ஆடிட்டோரியத்தில் எஸ்.டி.பி.ஐ நடத்திய மத்திய மண்டல தலைவர்களின் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த போலீசார் நிகழ்ச்சியை அலங்கோலப்படுத்த முயன்றனர்.

எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பல இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் கூட வாக்குகளை அளிக்கச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகிய எதிர்மறையான கட்சிகள் ஒன்றினைந்த விசித்திர சம்பவங்களும் பல வார்டுகளில் அரங்கேறியது.

பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட முவாற்றுப்புழாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஜனகீய முன்னணி என்ற கட்சியின் முக்கிய பிரச்சார ஆயுதமே பேராசிரியரின் கைவெட்டு சம்பவமாகும்.
திருவனந்தபுரம்,அக்.30:கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து வார்டுகளில் இரண்டாவது இடத்தையும், 47 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட 114 வார்டுகளில் 63 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தது எஸ்.டி.பி.ஐ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்ட 22 வார்டுகளில் பன்னிரெண்டு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரு கூட்டணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக திகழ்ந்தது.

மாவட்ட பஞ்சாயத்திற்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ பெண் வேட்பாளர் நாஃபிலா 1362 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட ஐந்து ப்ளாக் டிவிசனில் நான்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க இடதுசாரி-வலதுசாரி முன்னணிகள் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து விசித்திரமான கூட்டணியை உருவாக்கியதால் எஸ்.டி.பி.ஐ தோல்வியுறக் காரணமானது என எஸ்.டி.பி.ஐ தலைவர் எ.இப்ராஹீம் குட்டி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க சி.பி.எம்-காங்கிரஸ், சி.பி.எம்-பா.ஜ.க, காங்கிரஸ்-பா.ஜ.க என்ற விசித்திரமான கூட்டணி உருவானது. எஸ்.டி.பி.ஐ தோற்கடிக்க ஜமாஅத்தே இஸ்லாமியும் பல இடங்களில் இதரக் கூட்டணிகளுடன் சேர்ந்ததாகவும் இப்ராஹீம் குட்டி தெரிவித்தார்.

கொல்லம், கண்ணூர், காஸர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நிர்ணாயக சக்தியாக விளங்கியுள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இஸ்லாமிய வங்கி முறை: மன்மோகன் சிங் பரிந்துரை

இஸ்லாமிய வங்கி முறை:ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

thanks to பாலைவனத் தூது

வெள்ளி, அக்டோபர் 29

முஸ்லிம் விரோத அரசு வங்கிகள் !

 [ இக்கட்டுரையை ஒவ்வொரு இஸ்லாமிய இணையதளத்திலும் வெளியிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஊட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. காலந் தாழ்த்தாமல், இதைப்பற்றி இஸ்லாமிய இயக்கங்கள் அரசுக்கு எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயம்.]
அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?
மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.
கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான்,முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை "அபாயகரமான பகுதிகள்" (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.
நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். "ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை" என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள்.
கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!
தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.
சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன.
 நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47% மும், கர்நாடகாவில் 46.2% மும், மேற்கு வங்கத்தில் 17.44% மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.
முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன.
மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.
நன்றி: புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
முஸ்லீம் விரோதப்போக்கில் பி.ஜே.பி. க்கு கொஞ்சமும் சளைத்ததல்ல மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்றுஇதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.


ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.


சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.


ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.


அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.


கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.


சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.


அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது


சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .


எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.


அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.


அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது


அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது


நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது


இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.


எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.


மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.


அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்


நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)அதிரைநிருபர் குழு [அஜிஜுதீன்] ,
எமது நன்றிகளும் பாராட்டுக்களும்!

வட்டியின் தீமைகள்

வட்டியின் தீமைகள்

இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர். வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல் குஆன் 2:275)

மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைக்கும் அளவிற்கு மிகக் கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தம் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், நாங்கள் செய்த முதலீடு, வட்டியின் மூலம் பெறுகிக் கொண்டே செல்கின்றது, அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கின்றனர்.

அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குஆன் 2:276)

அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும் வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

“வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பத்தப்பட்ட அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: -

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,

“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

இரட்டிப்பாகும் என்று நினைத்து வட்டி வாங்காதீர்கள்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குஆன் 3:130)

மற்றவர்களின் முதலீடுகளுடன் சேர்த்து வட்டிக்கு விடாதீர்கள்:-

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குஆன் 30:39)

எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள்:-

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” அல்குஆன் 2:278)

இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான “யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்” என்ற இறைவனின் வசனத்தை (2:275) பற்றி நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் முஸ்லிமான நம்மனைவரின் ஈமானையும் உறதிபடுத்தி, இத்தகைய கொடுமையான பாவத்திலிருந்து மீளச்செய்து மீண்டும் வட்டியின் திமைகளில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என பிராத்திப்போம். வல்ல நாயனான அல்லாஹ் அருள் புரிய போதுமானவன். ஆமின்.

Thanks to
http://suvanathendral.com

தொழிற்சங்கம் உதயம்

திருபுவனம் பேரூரில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சியின் தொழிற்சங்கமாக கார்,வேன் ஓட்டுனர்கள் சங்கம் துவங்கப்பட்டது
காலை பத்து முப்பதுக்கு நடைபெற்றன
கிளை  தலைவர் இஸ்மாயில் மற்றும் துணைத்தலைவர் முஹம்மத் அவர்களுடன் தொழிற்சங்க தலைவர் அப்துல் மாலிக் ,துணை தலைவர் சாதிக் ஆகியோர் சங்க பலகையை திறந்து வைத்தனர்
சின்ன கடைத்தெரு முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது குறிப்பிட தக்கது .
முன்னதாக திருமங்கலகுடியில் தொழிற்சங்கத்தை துவக்கி வைத்த மாவட்ட நிர்வாகிகள் திருபுவனதிலும் துவங்க காரணமாக இருந்தவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் சென்றனர்


.

33 பொக்கிஷங்கள்

33 பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது!


நன்றி:லப்பைக்குடிகாடு.காம்

படித்துவிட்டீர்களா?
மீண்டும் ஒருமுறை படியுங்களேன்.
ப்ளீஸ்

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்
கட்டுமானப் பணி : அதிகாரி ஆய்வு

தஞ்சை மாவட்டம், நீலத்தநல்லூரையும், அரியலூர் மாவட்டம், மதனத்தூரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 36.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

நீலத்தநல்லூரையும், மதனத்தூரையும் இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டித் தரவேண்டும் என சுமார் 50 ஆண்டுகளாக அரசுக்கு இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இப் பாலத்துக்கு அரசு அனுமதியளித்தது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 36.5 கோடியில் பால கட்டுமானப் பணிகள் தொடங்கின.

முதல் கட்டமாக பூமிக்கடியிலிருந்து 22 அடி உயரத்திற்கு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

55 தூண்கள் எழுப்ப திட்டமிடப்பட்டு, இதுவரை 28 தூண்கள் முழுமையாக தஞ்சை மாவட்ட எல்லையில் எழுப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில் பால கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) தலைமைப் பொறியாளர் ராஜாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி செய்தி

[அணைக்கரை கொள்ளிடம் பாலம் பழுதடைந்துவிட்டதால் கணரக வாகணங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது தாங்கள் அறிந்த செய்தி]

அமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்?

அமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம்.

இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வீண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

நன்றி: தமிழ்சாரல்

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, தென்னூருக்கு திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

கும்பகோணம் கோட்டத்தை உள்ளடக்கிய கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனங்களை பதிவு செய்யவும் தஞ்சையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று வந்தனர். இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், கடந்த 1968-ம் ஆண்டு கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டு வாகன ஆய்வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது.

கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலத்தில், வாகனப் பதிவு, விபத்து ஆய்வுச் சான்று, ஒட்டுநர் உரிமம், உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கன ரக வாகனம், வெளி மாநிலங்களுக்கு செல்ல பர்மிட் போன்றவைகளுக்காக, தஞ்சைக்குச் செல்லவேண்டி இருந்ததால், இந்த அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்ற அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 19.2.2009 அன்று இது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டங்களோடு, வலங்கைமான் வட்டம் சேர்க்கப்பட்டு பதிவு எண் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரிலிருந்து, கடந்த ஆண்டு திருவிடைமருதூர் சாலை விஜயலட்சுமி நகரில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் மீண்டும் தென்னூருக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அலுவலக இடமாற்றம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், திடீரென இந்த அலுவலகம், பட்டீசுவரத்தை அடுத்த தென்னூர் கிராமத்தில் கட்டப்பட்டு செயல்படாமல் இருந்த ஊராட்சி ஒன்றிய தொழில் பயிற்சிக்கூட அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. இதனால், அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

[தினமணி செய்தி]

வியாழன், அக்டோபர் 28

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால். தாய்பாலின் அதிசயங்கள்.


தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!

இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்!

மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது.
ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது.

குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது.

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன.

. தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது.

வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன.

போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது.

திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

நன்றி: இளையான்குடி குரல்

புதன், அக்டோபர் 27

நீரிழிவு நோயாளர்களும் ரமழான் நோன்பு பிடித்தலும்

நீரிழிவு நோயாளர்களும் ரமழான் நோன்பு பிடித்தலும்
ரமழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.

பகல் முழுவதும் நீர் கூட இருந்தாது ஆற்றப்படும் கடுமையான புனித நோன்பு இது. ஒரு மாதத்திற்கு இடைவிடாது தொடரப்படுவது.

அதே நேரம் ஏனையவர்களைப் போலவே இஸ்லாமியர்களிலும் நீரிழிவு நோயாளர்கள் பலர் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளர்களும் இந் நோன்பை மற்றவர்கள் போலவே கடைப்பிடிக்கிறார்கள்.

பாதிப்பு ஏற்படுமா?

இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்காக மொராக்கோ நாட்டில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ரமழான் 1422 ல் செய்யப்பட்டது. 48 வயது முதல் 60 வயதுவரையான 62 பெண்களும், 58 ஆண்களுமாக 120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களது நீரிழிவின் நிலையானது உணவுக் கட்டுப்பாட்டினாலும், நீரிழிவு மாத்திரைகளாலும் ஏற்கனவே கட்டுப்பாட்டில் இருந்தது.

அறிவுறுத்தல்கள்

நோன்பு ஆரம்பமாகும் போது அவர்களுக்கு ஆரோக்கிய உணவு முறை பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாத்திரைகளும் நோன்பு காலத்தின் உணவு நேரங்களுக்கு ஏற்றபடி நீண்ட நேரம் தொழிற்படும் மாத்திரைகளாக (gliclazide- modified release) மாற்றப்பட்டன.

நலநிலைக் கணிப்பீடு

நோன்பு ஆரம்பமாவதற்கு முன் தினமும், நோன்பின்போது 15ம் மற்றும் 29வது தினங்களிலும், நோன்பு முடிந்த பின் 15 நாளிலும் அவர்களது உடல்நிலை மற்றும், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களது ஆரோக்கிய நிலை பற்றிக் கணிப்பீடு செய்யப்பட்டது.


குருதி சீனியின் அளவு, கொலஸ்டரோல் அளவு, பிரஸர், ஆகியவை அளவிடப்பட்துடன், அவர்களது ஈரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயற்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.

நோன்பின் ஆரோக்கியமான மாற்றங்கள்

முடிவுகள் பரிசீலிக்கப்பட்ட போது அவர்கள் உட்கொண்ட உணவின் சக்திப் பெறுமானத்தில் அதிக மாற்றம் இருக்கவில்லை. அவர்களது எடை, உடற் திணிவு (Body mass index)>பிரஸர் ஆகியன சற்றுக் குறைந்திருந்தன. இவை நல்ல மாற்றங்களே.

உணவுக்கு முன்னும் பின்னருமான இரத்த சீனியின் அளவு (Fasting and post-prandial glucose) ஆகியன குறைந்திருந்தன. இரத்த இன்சுலின் அளவு சற்று அதிகரித்திருந்தது. ஈரல் செயற்பாட்டிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இவையும் நல்லாரோக்கியத்தையே குறிக்கின்றன.

ஏனைய மாற்றங்கள்

ஆயினும் யூரியா, யூரிக் அமிலம், புரத அளவு, (fluctuations in some lipid and hematological parameters, creatinine, urea, uric acid, total protein, bilirubin, and electrolytes) போன்ற சிலவற்றில் சற்று ஏற்றமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அவை எதுவுமே சாதாரண அளவுகளைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

' ஏற்கனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீரிழிவு மாத்திரைகள் உட்கொள்ளும் முறையில் மாற்றம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் ரம்ழான் நோன்பு பிடிப்பதில் ஆபத்து எதுவும் இல்லை' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முடிவாக

எனவே நீரிழிவு நோயாளர்கள் ரமழான் நோன்பின் போது உடற் பயிற்சிகள் செய்வது, உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கைக் கொள்வதுடன், மருந்து உட்கொள்வதில் மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்றங்களைச் செய்து கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

[அல்லாஹ்வின் ஞானத்திற்கும் அல்-குரானின் அறிவிற்கும் நிகரேதும் இல்லை.]


Source: Clinical and Experimental Hypertension, Volume 30, Number 5, July 2008 , pp. 339-357(19)

நன்றி:
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
ஹாய் நலமா?
நலவியல் இணைய இதழ்

மகிழ்வூட்டும் தொற்று நோய் புன்னகை!


மகிழ்வூட்டும் தொற்று நோய்


தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?

நோய்கள் என்பதுதானே!

தடிமன், காய்ச்சல், டைபொயிட், சயரோகம் எனச் சொல்லி மாளாது. எயிட்ஸ் என்றால் கதி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும்.

ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான்.

"ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை."

அது என்ன?

புன்னகை!

நீங்கள் புன்னகைத்தால் முழு உலகமுமே உங்களுடன் இணைந்து புன்னகைக்கும். முழு உலகமும் புன்னகைக்கும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை என்ற போதும் தொற்றும் என்பது உண்மையே.

அறிமுகமானவர்களுக்கு மட்டுமின்றி முற்றிலும் அந்நியமானவர்களுக்கு கூடத் தொற்றும் ஆற்றல் கொண்டதுதான் புன்னகை.

இவ்வாறு சொல்வது வெற்றுக் கற்பனைக் கருத்து அல்ல. ஆய்வு ரீதியாக நிறுவப்பட்டது. மிகப் பிரபலமான பிரமிங்ஹாம் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதிதான் இது. நம்பிக்கைக்குரிய BMJ மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் புன்னகை மற்றவர்களுக்குத் தொற்றுவது உண்மை. அதை நீங்கள் நிச்சயம் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுறுவதற்கு காரணம் என்ன?

நீங்கள்தான் காரணமா?

உங்கள் செய்கைகளும், எண்ணங்களும், பழக்கங்களும் மட்டும் உங்களை மகிழ்வுறுத்துகிறதா?
இல்லை உங்கள் உறவினரும் நண்பர்களும் காரணமாகலாம்.
அதுமட்டுமல்ல உங்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களும் காரணமாகலாம் என்கிறார்கள்.

சமூக ஒன்று கூடல்களிலும், பொது நிகழ்வுகளிலும் யாரைச் சுற்றிக் கூட்டம் கூடுகிறது. அவற்றின் மையப் புள்ளியாக இருப்பவர்கள் யார்?

மகிழ்ச்சியானவர்கள்தான்.

அவர்களைச் சுற்றியே மக்கள் மொய்க்கின்றனர். மகிழ்வு அனைவரையும் காந்தம் போல தொற்றிக் இழுக்கிறது. மகிழ்வுடன் இருப்பவர்களுக்கு மகிழ்வோடிருக்கும் ஏனையவர்களின் நட்புகள் நிறையக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான நண்பர்களும், சகோதர சகோதரிகள் அருகிருப்பதும் மேலும் விரைவாகப் பரவச் செய்யும். நண்பர்களுக்கு மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்களுக்கும் படு வேகமாகப் பரவக் கூடியது இது.

எனவே தொற்றுநோய்தானே?

மகிழ்ச்சியுள்ள கணவன் அல்லது மனைவி மகிழ்ச்சியைக் கடத்த உதவுவார்தான். ஆயினும் நண்பர்கள் அளவிற்கு துணைவரின் மகிழ்ச்சி வராது என்கிறது ஆய்வு.

ஆனால் எதிர்ப் பாலாரிடையே பரவுவது ஒரே பாலாரைவிடக் குறைவானது. அதாவது நண்பனுக்கு நண்பன், நண்பிக்கு நண்பி மேலாகும்.

சந்தோசமான ஒவ்வொரு நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 9 சதவிகிதத்தால் உயர்த்துகிறார்கள். எனவே ஒவ்வொரு நண்பன் அதிகரிக்கும் போதும் நீங்கள் அந்த நண்பர் குழுமத்தின் மத்தியில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் அலையலையாக மகிழ்வைப் பெற வாய்ப்புக் கிட்டும்.

ஒவ்வொரு அழுமூஞ்சி நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 7 சதவிகிதத்தால் குறைக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அத்தகைய நண்பர் இருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது என அவ் ஆய்வு பரிந்துரைக்கவில்லை.

துன்பம் பொதுவாக தனிமையையே நாடுகிறது. துன்பம் வரும்போது மற்றவர்களுடன் பேசப் பிடிக்காது. மற்றவர்களுடனான நெருக்கத்தைத் தவிர்க்க முனைகிறது. இதனால்தானோ என்னவோ மகிழ்ச்சி தொற்றுவது போல துன்பம் பரவுவது இல்லை.

மனிதர்களுக்கு மனமகிழ்வைத் தரும் மற்றொரு விடயம் பணம் சேர்வதாகும். அதனால்தானே மனிதர்கள் பணத்தின் பின் பேயாகப் பறக்கிறார்கள்.

ஆனால் அது தரும் மகிழ்ச்சியானது புன்னகைக்கும் நண்பனுடன் ஒப்பிடும்போது அற்பமானது.

ஆனால் இதை உணராதவர்களே அதிகம். பணத்திற்காக நட்புக்களையும் உறவுகளையும் தூக்கி எறிபவர்கள்தான் ஏராளம்.

'மகிழ்வுடன் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் அது உளநெருக்கீட்டை அதிகரிக்கச் செய்யும் ஹோர்மோன்கள் சுரப்பதைக் குறைக்கிறது' என அன்ரூ ஸ்டெப்டோ என்ற உளவியல் பேராசிரியர் கூறுகிறார். அவர் University College London யைச் சேர்ந்தவராவார்.

மகிழ்வுடன் இருப்பதற்குக் கிடைக்கும் போனஸ் இதுவெனலாம்.
மகிழ்வோடு இருங்கள். மகிழ்ச்சியோடு உள்ளவர்களின் நட்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி பரந்து விரிந்து பரவும்.

ஆனால் மற்றவர்களை அழிப்பதிலும், ஒடுக்குவதிலும், அடிமைப்படுத்துவதிலும் மகிழ்வுறுவது தவறென்று சொல்லவும் வேண்டுமா?

நன்றி: டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
ஹாய் நலமா இணையத்திலிருந்து

ஆள் பாதி ஆடை பாதி

ஆள் பாதி ஆடை பாதி

ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.

அள்ளி உண்ண நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் அதீத உடல் எடை, அதிக கலோரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமே அதிக உடல் எடையைக் குறைக்க முடியும். கலோரிகளின் கணக்கில் உணவே மருந்தாகும் விந்தை எப்படி எனக் காண்போமே.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் அதிகப்படியான கலோரிகளை உடலில் சேராமல் செய்ய முடியும். நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தாற் போல் இருக்கும். நம்பிக்கை வரவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.

நம் உடலில் சுரக்கும் குளூக்கான், இன்சுலின் என்ற இரு ஹார்மோன்களே, உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை உடல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.

கல்லீரலின் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்வது, இரத்தத்தில் உள்ள சக்கரையை மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகள் பயன்படுத்துவது ஆகியவை உடலில் சுரக்கும் குளூக்கான் ஹார்மோனால் தீர்மானிக்கப்படுகிறது. உடல் செல்களில் உள்ள கொழுப்பை சக்தியாக மாற்றுவதும் குளூக்கான்தான். இன்சுலின் நாம் உண்ணும் உணவின் சத்துகளை செல்களில் சேமிக்கச் செய்கிறது. தேவைக்கு அதிகமான சக்கரை அளவு இருப்பின் இன்சுலின் அதை குறைக்கச் சொல்லி கல்லீரலுக்கு செய்தி அனுப்பும்.

புரோட்டீன் நிறைந்த உணவை உண்கையில் குளூக்கான் சுரக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்கையில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நார்ச்சத்து இருக்கும் உணவை உண்கையில் இரண்டும் சுரக்கப்படுவதில்லை. கார்போஹைட்ரேட் மட்டும் உண்கையில் இன்சுலினுக்கும் குளூக்கானுக்கும் உள்ள விகிதம் அதிகமாகவும், புரோட்டீன் மட்டும் உண்கையில் விகிதம் குறைவாகவும் உள்ளது.

புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார் சத்து ஆகியவை சமமாக உள்ள உணவை உண்பதன் மூலம் குளூக்கான், இன்சுலின் விகிதம் சமமாக இருக்கும்படி செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். அனைத்து சத்துகளும் சமமாக உள்ள உணவின் மூலம் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, முறுக்கேறும் சதைப் பகுதிகளைப் பெறலாம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளுக்கேற்ப நமது உணவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அழகான உடல் தோற்றத்தைப் பெறலாம்.

1. தேங்காய் எண்ணெய் - பலரும் எண்ணுவது போல் தேங்காய் எண்ணையிலுள்ள கொழுப்புச் சத்து கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுவதில்லை.

2. சாமன் (Salmon) - இந்த வகை மீனிலுள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், குளூக்கான் மற்றும் இன்சுலின் விகிதத்தை சமமாக வைத்துக் கொள்ள உதவும்.
(குறிப்பு: இந்த மீன், தனது வாழ்நாளில் பல ஆயிரம் கி.மீ பயணித்து,ஆரம்ப இடத்திற்கே வந்து சேரும். கடல் நீரின் வாசனையை நுகர்வதின் மூலமாகவே, தான் பயணித்த பாதைகளை அறிந்து கொள்கிறது. கடல்களுக்கு மத்தியில் தடுப்புகள் இல்லாவிடில் வாசனை கலந்து ஒரே வாசனையாகிவிடும். அல்லாஹ் தனது திருமறையில் (சூரா அர்ரஹ்மான் ) கடல்களுக்கு மத்தியில் தடுப்பு ஏற்படுத்தி இருப்பதாக கூறுவதை , ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி நம்மை உணரச் செய்கிறது.)
3. முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்.

4. ஆஸ்பரகஸ் (Asparagus) - நார்ச்சத்து மிக்க இந்த உணவை நீங்கள் வெண்ணையுடன் சேர்த்து உண்ணலாம்.

5. முட்டைகோஸ் - சூப்புகளில் பயன்படுத்தப்படும் முட்டைகோஸ் மிகச் சிறந்த கொழுப்பைக் குறைக்கும் பொருள்.

6. கோழிக்கறி - சாலட் போன்றவற்றில் பயன்படுத்தும்போது சரிவிகிதமாகிறது.

7. பூண்டு - முடிந்த அளவிற்கு தினமும் உணவில் பூண்டைப் பயன்படுத்துவது நலம்.

8. பீன்ஸ் - நார்ச்சத்து மிக்க பீன்ஸால் குளூக்கானுக்கும் இன்சுலினுக்கும் உள்ள விகிதம் சரிசெய்யப்படுகிறது.

9. மீன் எண்ணை - வைட்டமின் A மற்றும் D நிறைந்த உணவு.

10. கீரைகள் - தினமும் ஒரு வகைக் கீரையை சாப்பிடுவது உடலுக்கு நலம் சேர்க்கும்.

11. வெண்ணைய் - புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெண்ணையை அளவாக பயன்படுத்தலாம். நாட்பட்ட வெண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.

12. முட்டை - புரோட்டீன், கார்போஹைரேட் போன்ற அனைத்துச் சத்துகளும் நிறைந்து.

அனுமதிக்கப்பட்ட மற்றும் தூய்மையான
(ஹலாலன் தய்யிபா) உணவுகளை உட்கொள்வோம்.

e-mail from brother Mohammad Shafi smdshafie@gmail.com

செவ்வாய், அக்டோபர் 26

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை உச்ச நீதி மன்றம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை உச்ச நீதி மன்றம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.

அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.
மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினார்.

நன்றி: இந்நேரம் . காம்

1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.

இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவு இரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'
சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்.
தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில் வியப்பென்ன இருக்கிறது? நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள். கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே 'விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப்படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே. ஜனவரி 1,2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம்.ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து
, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா! உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்படவேண்டாமா? ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் எம்.பி, ஒருவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தாரே ''கொடுங்கோலன் புஷ்
; ஹிட்லரைவிட மோசமானவன்'' என்று. அது அப்பட்டமான உண்மை என்று இப்பொழுதாவது உலகம் புரிந்து கொள்ளுமா? இனிமேல் மனித நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை இந்த வெள்ளை ஓநாய்களுக்கு உண்டா?இவர்களை மனித மிருகங்கள் என்று சொன்னால் கூட தவறு. ஏனெனில் தன் இனத்தையே எந்த மிருகமும் கூட்டங்கூட்டமாக கொன்று தீர்க்காது.  இரத்தக்காட்டேரிப் பிசாசுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்தானே! www.nidur.info