Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 13

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்


இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.
அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1) 
ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.
சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..
கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.

புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.
மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌
 ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள்.
1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4) 
இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும். 
இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.    
இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌யி‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.  அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.
இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.
.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).
த‌ர‌வுக‌ள்:
1)http://www.youtube.com/watch?v=Wt0XNCk9hWI
2)http://gnani.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/
3) http://www.greenpeace.org/india/en/What-We-Do/Nuclear-Unsafe/Safety/Nuclear-accidents/Nuclear-accidents-in-India/Accidents-at-nuclear-power-plants/
4)http://www.dianuke.org/breaking-tritium-leak-nuclear-reactor-at-rawatbhata/
5)http://www.reuters.com/article/2011/10/20/us-japan-nuclear-noda-idUSTRE79J3W020111020
இக்கட்டுரை  தற்போதைய சூழலின் அவசியத்தால் கீற்று .காம் இணைய தளத்தில் வெளியானாதை அப்படியே இங்கே பகிர்ந்துள்ளேன் . சரியான நேரத்தில் சரியான பதிவை வெளியிட்ட
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21086
கீற்று தளத் தினற்கு நெஞ்சார்ந்த நன்றி

1 comments:

S. Robinson சொன்னது…

தமிழன் புதிய திரட்டி ( www.tamiln.org )