Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஆகஸ்ட் 23

மன்னிப்பு . உங்களுக்கு பிடிக்காத வார்த்தையா..?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலை கழகத்தில் 
ஒரு ஆய்வு அது.

மனிதர்களின் மனதிற்கும் உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு .
.
ஆராய்ச்சிக்காக வழக்கம் போல் மனிதர்கள் பயன்படுத்தபட்டார்கள்
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழு
த்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.


இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஓகே வழக்கம் போல நம்ம விசயத்திற்கு வந்துவிடுவோம்....


மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் என்றால் அது கண்டிப்பா
நம்ம இஸ்லாத்தில் இருக்குமே ....
ஆம்!  இருக்கின்றது!!
நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.. பல தவறுகளை நாம் செய்கிறோம்.. பல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது. அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விளைவினால் உறவுகள் முறிந்து போகிறது. இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம்.
மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய விரிசலாக போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்ட அதனாலும் பிளவு ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)
சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகோபத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும் அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், "எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், "கோபம் கொள்ளாதீர்" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "எனக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் "நீர் கோபம் கொள்ளாதீர்!" என்றே பதில் தந்தார்கள். நூல்: புகாரி
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.
2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உாிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது." அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது? என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா? என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்."  (நூல்: அபூதாவூத்)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்." (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)
இந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.
சரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
இஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.
அதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே...
சரி மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
திருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறாின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)
"ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (42:37)
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
மூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா? சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
"இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குறிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்." (42:40)
பார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் "தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா?"
அல்லாஹ் கூறுகிறான்
"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்" (42:43)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது.
இதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை பார்ப்போம். "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்." அல் அதபுல் முஃப்ரத்: "இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
இன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : "என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?" இறைவன் கூறினான்: "எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குாியவர் ஆவார்." அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்" நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அல் அதபுல் முஃப்ரத்
மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா?
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்
சிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்". நூல்கள்: முஸ்லிம்
இப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா? அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.
அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும்" நூல்: அல் அதபுல் முஃப்ரத்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)
இதை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிாியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கும் அளவிலே இருந்தனர். இக்ரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
கொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத்தவிர! குறைஷிகளே! அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,
''மனிதர்களே! உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)
என்ற வசனத்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
கூடியிருந்த குறைஞகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்
''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மரியாதைக்குரிய சகோதரரின் மகன்''
என பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்''  என்று கூறினார்கள்.
சகோதரர்களே...! குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்
"இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)" (25:73)
மேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா?
தினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா?
ஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக

(இக்கட்டுரைக்கு உதவிய நன்றிகுரியவர்கள்  : விடுதலை நாளி தழ், மற்றும் சகோதரர் முகம்மது ஆரிப் சிங்கப்பூர் 
மற்றும் முஹம்மது ரசீன்  )