வேண்டாம் தற்பெருமை
பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது.
தான் என்ற அகங்காரம் இப்லீஸுக்கு வந்ததால், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)
இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அதில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவன் செய்யக் கூடிய கடுகளவு நன்மையானாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சிப்பான்.
இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் தன் ஆடை அழகாக இருப்பதையும் தனது காலணி அழகாக இருப்பதையும் விரும்புவது பெருமையாகுமா? என ஒரு மனிதர் கேட்டார்.
அதற்கு நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பெருமை என்பது உண்மையை மறைப்பதும் மக்களை கேவலமாகக் கருதுவதும் ஆகும். (நூல் : அஹ்மத் அறிவிப்பாளர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி) ஹதீஸ் எண் :6390
மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களின் நிலையைப் பற்றி கூறும் போது :
(உலகில்) பெருமையடித்தவர்கள் அனைவரும் மறுமை நாளில் (உடலமைப்பால்) சிற்றெறும்புகளைப் போன்று மனிதத் தோற்றங்களில் எழுப்பப்படுவர். அற்பமான அனைத்துப் பொருட்களின் காலடியிலும் அவர்கள் மிதிபடுவர். இறுதியில் பவ்லஸ் அல்லது பூலஸ் என்ற நரகச் சிறையில் நுழைவர். (அதில்) அவர்களை ஆகக் கொடிய நெருப்பு சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளிடமிருந்து வழிந்தோடும் வியர்வை, சீழ் மற்றும் இரத்தம் ஆகியவற்றை அவர்கள் புகட்டப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), பாடம் : ஈமான் நூல் : முஸ்லிம்.
நாம் வாழ்வில் அடுத்தவர்களை மதித்து வாழ்வது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். நம்மை விட அறிவால் செல்வத்தால், அந்தஸ்தால் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் கூட நமது அகங்காரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது.
அல்லாஹ் நமது வாழ்நாளில் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவும் உண்மையை மேலோங்கச் செய்பவர்களாகவும் அடுத்தவர்களை மதித்து நடக்கின்றவர்களாகவும் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்திப்போமாக!
0 comments:
கருத்துரையிடுக