12 நாள் குழந்தைக்கு அபூர்வ அறுவை சிகிட்சை: மருத்துவர்கள் சாதனை!
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு நெஞ்செலும்பு பிரிந்திருந்த நிலையில், மதுரை மருத்துவர்கள் அபூர்வ அறுவை சிகிட்சை செய்து குழந்தையைக் காப்பாற்றினர்.
மதுரை செல்லூர் பகுதியைஹ்ச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் தலைப் பிரசவத்திற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு மதுரை ராஜாஜி அரச மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், அந்தக் குழந்தை நலமாக இருக்கிறதா என்று குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கண்காணிப்பது வழக்கம். அது போன்று வேளாங்கண்ணியின் பெண் குழந்தையும் கண்காணிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் நெஞ்சுக் கூடு பகுதி மிகவும் பள்ளமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டனர். உடனே, ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் நெஞ்சுக் கூடு பகுதியில் உள்ள விலா எலும்பு ஒன்றாக சேரும் இடத்தில் உள்ள "ஸர்ணம்" என்ற எலும்பு வளர்ச்சி அடையாமல் பிரிந்து இருப்பதைக் கண்டனர்.
இதனால் குழந்தை அழும் போதும் இதயம் துடிக்கும் போதும் வெளியே துருத்திக் கொண்டு வந்தது. இதை உடனே அறுவை செய்து சரிசெய்யாவிட்டால் குழந்தைக்குப் பின்னர் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கருதினர்.
இது குறித்து குழந்தையின் தாயிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை நலப்பிரிவு அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் அதியமான் தலைமையில், நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் பாலநாயகம் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, 12 நாட்கள் கழித்து அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிட்சை முடிவில் குழந்தைக்கு நெஞ்சு எலும்பு பகுதி சேர்க்கப்பட்டது. குழந்தை இப்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நலமாக உள்ளது.
இந்த அபூர்வ அறுவை சிகிட்சை குறித்து மருத்துவர் அதியமான் கூறியதாவது:
"இது போன்ற பிறவி குறைபாடு 50 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும். குழந்தையின் நெஞ்சுக்கூடு பகுதியில் உள்ள விலா எலும்புகளை ஒன்றாக இணைக்கும் எலும்பு நடுவில் இருக்கும். இந்த நடு எலும்பு சரியாக வளர்ச்சி அடையாததால் விலா எலும்புகள் விலகிக் கொண்டன. இதனால் இருதயம் விலா எலும்பில் இருந்து துருத்திக் கொண்டு குழந்தை அழும் போது வெளியே வருவது போன்று காணப்பட்டது.
இருதயத்திற்குப் பாதுகாப்பைத் தருவதே இந்த விலா எலும்பு தான். அது விலகிக் கொண்டால், குழந்தை பெரிதாகி வளர்ந்த பிறகு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிறிய கல்லோ, ஊசியோ குத்தினால் கூட அது இருதயத்தைப் பாதிக்கும்.
எனவேதான் நெஞ்ச எலும்பைச் சேர்க்க அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. இதனைச் சிறிது காலத்திற்குப் பிறகு செய்தால் எலும்பின் வளர்ச்சி பெரிதாகி அறுவை செய்வது சற்று கடினமாக இருக்கும். எனவே தான் குழந்தைக்கு இப்போதே அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. இதன் மூலம் எலும்பும் விரைவில் சேர்ந்து, பின்னால் அந்தக் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போது அந்தக் குழந்தை நன்றாக உள்ளது.
குழந்தைக்கு இது போன்ற பிறவிக் குறைபாடுகள் ஏற்பட காரணம் கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகள், கால்சியம் நிறைந்த வில்லைகளைச் சாப்பிடாமல் இருப்பதுதான். எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் அறிவுரையின்படி மருந்து மாத்திரைகள், உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மதுரை பெரிய மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் இது போன்று பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவில் அறுவை சிகிட்சை செய்து சரிசெய்து உள்ளோம். எனவே தாய்மார்கள் இது போன்று குறைபாடு உள்ள குழந்தைகளை எதுவும் செய்து விடாமல், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பெரிய மருத்துவமனைக்கு அழைத்து வரலாம். எங்கள் பிரிவில் ஒவ்வொரு வாரமும் 150 குழந்தைகளுக்கு அறுவை சிகிட்சை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு 12 நாள் குழந்தைக்கு நெஞ்சு எலும்பைச் சேர்க்கும் அறுவை சிகிட்சையினை முதல் முறையாக இப்போது தான் செய்து உள்ளோம்."
இவ்வாறு டாக்டர் அதியமான் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிட்சை குழுவில் குழந்தைகள் நலப்பிரிவு தலைமை மருத்துவர் ரகுநந்தன், மருத்துவர்கள் ஹேமந்த்குமார், ரவிக்குமார், கருப்பச்சாமி, முதுகலை பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சீனிவாசன், கற்பகவிநாயகம் ஆகியோர் இருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக