வகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்
-அமீர் அப்பாஸ்
இது நம்பிக்கைகளின் தேசம். கடலுக்கு அடியில் இராமரின் பாலம் இருப்பதாக நம்பலாம். அதை மறுத்தால் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடும். நாடாளுமன்றம் அனுமன் பிறந்த இடம். ஆகவே, அதை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்டும் என கோரிக்கை எழலாம். அனுமன் தாவிச் செல்லும் வகையை சேர்ந்தவன். அந்த இடத்தில் நாடாளுமன்றம் கட்டியதால் தான், குரங்குகளைப் போல கட்சி விட்டு கட்சி தாவும் குணம் அரசியல்வாதிகளுக்கு உருவானது என்கிற ஆதாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம். இடிக்க விட்டு வேடிக்கை பார்த்து, பின்பொரு நாளில் இரண்டு பங்கை கோயில் நிலமாக தீர்ப்பு வழங்கலாம்.
எவ்வித ஆதாரமும் இன்றி, பெரும்பான்மை மக்களின் மனநிறைவுக்காக அப்சல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கலாம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்குமான நீதி, எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை. வழக்கு நடத்த வசதியற்றவர்கள், அதிகாரத்துடன் போராட முடியாதவர்கள், மரண தண்டனை வரைக்கும் இழுத்து செல்லப்படுகிறார்கள். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜு, 'இஸ்லாமியர்கள் விசயத்தில் காவல் துறையும், ஊடகங்களும் நடந்து முறை அநீதியானது' என்று குறிப்பிடுகிறார்.
அவரின் கருத்துப்படி, கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், பெங்களுரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களை காவல்துறையால் கண்டறிய முடியவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் மின்னஞ்சல் வருகிறது; சில குறுந்தகவல்கள் வருகிறது. அவசர அவசரமாக குற்றவாளிகள் என சிலரை அறிவிக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், கையில் கிடைக்கும் முஸ்லிம்கள் மீது காவல் துறை பொய்வழக்குப் போடுகிறது. தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில், நம் நாட்டின் காவல் துறைக்கு போதிய அளவு தேர்ச்சியும் திறமையும் இல்லாத காரணத்தால், தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்கிறார்.
இப்படியான தேசத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தால் சிறுபான்மை மக்களின் நிலை என்ன? ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு நொறுக்கப்படும்? இதை கருத்தில் வைத்து மத்திய அரசு, ஒரு சட்டமுன்வடிவை அறிமுகம் செய்கிறது. அது தான் வகுப்புக் கலவர தடுப்பு மசோதா. இதை வழக்கம் போலவே பாரதிய ஜனதாக் கட்சியும், அக்கட்சி ஆளுகிற மாநில முதல்வர்களும் எதிர்த்து கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதே சமயம் தமிழகத்தில் இருந்து ஒரு குரல், பாரதிய ஜனதா கட்சியின் குரலைப் போலவே ஒலிக்கிறது. அது ஜெயலலிதாவின் குரல்.
உன் நண்பன் யாரென்று சொல்? உன்னை யாரென்று சொல்கிறேன் என்கிற பொன்மொழிக்கு மிகவும் பொருத்தமானவர் ஜெயலலிதா. சோ.ராமசாமி துவங்கி நரேந்திர மோடி வரை, நட்பு பாராட்டும் பேரன்பில் இருந்தே, அவரை நாம் புரிந்து கொள்ளலாம். திராவிட இயக்கத்தின் பெயரை வைத்துக் கொண்டே இந்துத்துவத்தின் ஆட்சியை அவரால் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது. இதை எதிர்க்க வேண்டிய மற்ற திராவிடக் கட்சிகளின் நிலை யோக்கியமாக இல்லையென்பது வருந்தத்தக்கது.
வகுப்பு கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்க்க ஜெயலலிதா கண்டுபிடித்த காரணம் விசித்திரமானது. மாநிலங்களுக்கான அதிகாரம் பறிபோய் விடும் என்கிறார். மாநில சுயாட்சி குறித்த கருத்தை எப்போதும் முன்வைக்காத அதிமுக திடீரெனப் பேசுவது பலத்த சந்தேகங்களை விதைக்கிறது. வகுப்புக் கலவரங்களை விசாரிக்கும் விஞ்சிய அதிகாரம், தேசிய அதிகார அமைப்பிற்கு வழங்கப் படக் கூடாது என்கிறார். இழவு வீட்டில், தனக்கான முதல் மரியாதையை எதிர்பார்த்து, படுகொலையை மறைக்க பாடுபடுகிறார்.
இதற்கான சட்ட முன்வடிவின் பிரிவு 13-இல்.. பொது அமைதியைக் காக்க, புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதை தடுக்க தவறுவது கடமை தவறுவதாக கருதப்படும். அதன்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆணையிடும் பொறுப்பில் இருக்கும் அதிகாரி, தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கையை ஜெயலலிதா கடுமையாக எதிர்க்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை எப்படி நடத்தினார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இச்சட்டத்தின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை மட்டும் நீக்கி விடுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. முற்றிலுமாக நிராகரித்து, குப்பைத் தொட்டியில் போட சொல்கிறார். இச்சட்டம் அறிமுக நிலையிலேயே தூக்கி எறியப் பட வேண்டும் என்கிறார்.பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே, நீதியின் பக்கம் நிற்பதாக இருக்கக் கூடும்.
பண்டித ஜவஹர்லால் நேரு குறிப்பிட்ட சொற்கள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெரும்பான்மை சமூகம், வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டால், அதை தேச பக்தியாகப் பார்ப்பதும், அதையே சிறுபான்மைச் சமூகம் திருப்பித் தாக்கினால், தீவிரவாதம் என்பதும், சமூகத்தின் மிகவும் ஆபத்தான மனப்போக்கைக் காட்டுகிறது. நேருவின் வார்த்தைகளை அரை நூற்றாண்டு கழிந்த பின்னும் நம்மால் மாற்ற முடியவில்லை.
சமய நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்து மக்களுக்கு இத்தகைய அநீதியில் உடன்பாடு இல்லை. ஆனால், அவர்களின் பெயராலேயே இத்தகைய மேலாதிக்கம், அதிகாரத்தின் துணையோடு தொடர்ந்து நிகழ்கிறது. பெரியாரின் வாழ்நாள் உழைப்பில் உதித்த திராவிட இயக்கம், அண்ணாவின் ஆட்சியோடு தன் நேர்மையை முடித்து கொண்டது. அவருக்குப் பின்னால் ஊழல்வாதிகளிடம் சிக்கியது. இப்போது மதவாத சக்திகளின் முகமூடியாகத் தொடர்கிறது.
அரசியல் அறியாமையின் பெருவெற்றியாக திகழும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசுகிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபமாக அவரோடு முரண்பட்டு, அறிக்கை எழுதித் தருவதில்லை என்று நம்பத் தகுந்தவர்கள் சொல்கிறார்கள். கொள்கையற்ற கோமாளிகளின் கூட்டம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வாக்காளர்களின் அறியாமையும், வறுமையும் காரணமாக உள்ளது. பேய்க்குப் பயந்து பிசாசுக்கு வாக்களிக்கும் நிலை தொடர்கிறது. பெரியாரின் கைத்தடி காணாமல் போய் விட்டது. மாயைகளுக்குப் பின்னால் மக்களும், தலைவர்களும் மாறி மாறிப் பயணிக்கிறார்கள்.
இதற்கான வேகத்தடையை உருவாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம். வரலாற்றுக் கடமையும் கூட
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)
நன்றி: http://www.keetru.com
0 comments:
கருத்துரையிடுக