குரான் எரிப்பு வேண்டாம்: ஒபாமா
சர்ச்சையை தோற்றுவித்தவர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிறித்தவ திருச்சபையின் பாதிரியார் எதிர்வரும் சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்திருப்பதற்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
புளோரிடாவில் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய தேவாலயத்தில் தீக்குச்சி எதுவும் உரசப்படுவதற்கு முன்பே, இந்த சர்ச்சை சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
பாகிஸ்தானில் அந்நாட்டு அதிபரின் அலுவலகத்திலிருந்து விடுக் கப்பட்ட அறிக்கை, குரான் எரிப்பு வெறுக்கத்தக்க செயல் என்றும் உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்த வல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தோனேஷிய அதிபரும் அமெரிக்க அதிபரை இதில் தலையிடுமாறு கோரியிருக்கிறார். அமெரிக்க அதிகாரிகள் இதில் தலையிடவேண்டும் என்று இந்திய அரசும் கோரியிருக்கிறது. அதேசமயம் குரான் எரிப்புச்சம்பவம் நடந்தால் அந்த காட்சிகளை ஒலிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கும் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.
உலகு தழுவிய முஸ்லீம் சமூகத்திடம் நெருங்கிச்செல்வதற்காக ஒபாமா நிர்வாகம் எடுத்த நிதானமிக்க முன்னெடுப்புக்களை இந்த சர்ச்சையானது ஒன்றுமில்லாமல் செய்துவிடும் ஆபத்திருக்கிறது.
குரான் எரிப்பை தான் சுத்தமாக விரும்பவில்லை என்பதை ஒபாமா ஏற்கனவே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டார் என்பதுதான் இதில் இருக்கும் விசித்திரமான முரண்பாடு. அமெரிக்காவில் இருக்கும் பிரதான மதஅமைப்பின் பிரதிநிதிகளும் இதற்கான தமது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்துவிட்டார்கள்.
ஆனால் பிற்காலத்தில் செயற்படுத்தப்படும் ஒரு நடவடிக்கைக்கு எதிரான அருவெறுப்பு மட்டுமே அதை தடுப்பதற்கு போதுமானதல்ல.
அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சுதந்திரம் தொடர்பான நடைமுறைகளும், மதநிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையில் நிலவும் பிரிவினைகளும், அந்த குறிப்பிட்ட சர்ச்சின் பாதிரியார் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை தவிர அமெரிக்க நடுவணரசால் பெரிதாக எதையும் செய்துவிடவும் முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இதுதவிர இந்த குறிப்பிட்ட விவகாரம், அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபிரிவுகளில் நிலவும் மையப்படுத்தப்படாத கட்டமைப்பு முறையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு திருச்சபையும், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சுதந்திரமானவையாக செயற்படும் தன்மை கொண்டது.
ஒரு குறிப்பிட்டவகையில் மட்டுமே செயற்படவேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட மத தலைமை எதுவும் இங்கே கிடையாது.
இந்தப்பிரச்சினைக்கு ஒரே ஒரு வகையில் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதாவது புளோரிடாவில் இருக்கும் கெய்ன்ஸ்வில்லி நகர உள்ளாட்சி நிர்வாகம் தனது பல்வேறு சட்டங்களில் ஏதேனும் சிலவற்றை இந்த செயல் மீறுவதாக கூறி குரான் எரிப்பை தடுக்க முயலலாம்.
அப்படி நடந்தால் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலுக்கு உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட வித்தியாசமான குறுகிய தீர்வாக அது அமையக்கூடும்.
.
வியாழன், செப்டம்பர் 9
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக