தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
நோன்பின் பெறுமதி தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தஹஜ்ஜீத்தில் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.
இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.
இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்துகண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்விஷம் என்று சொல்லுங்கள்.
எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும்
இளைஞர்களேஅந்த இரவு நேர மரத்திலிருப்பது தெம்பிலி அல்ல
உங்கள் ஒழுக்கங்கள்- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல- அதை கொளுத்த வேண்டும்
என்ற மடமையை கொளுத்துங்கள்.
நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள் தூய்மையாகவே
இருந்துவிட்டு போகட்டும்.
நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.
தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும் மயானத்தில் அல்ல
காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.
நோன்பு மரம்,
இந்த மரம்
மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை
தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு
பெட்ரோல் ஊற்றும்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல
(மூலம் இலங்கையிலிருந்து வெளி வந்த கவிதை (ஆடியோ )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக