Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, செப்டம்பர் 11

முதுகுவலி

இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.

சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால் இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.

முதுகுவலி ஏன் வருகிறது?

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.

நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.

இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

யார் யாருக்கு முதுகுவலி வரும்?

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை :

நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :

நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.

லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.