Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், டிசம்பர் 1

நீங்கள் அப்படி இல்லையே?

குழந்தைகளை அடிக்காதீர்கள்.  -நீடூர் S A மன்சூர் அலி
“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” – என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” – இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? – இது தந்தை.
தம்பி தயங்கியபடியே – அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”

“திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?” – என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!
“இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?” என்று அனுப்பி வைக்கிறார்.
 இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன?
 இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது – என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!
மாறாக – அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் “அடிக்கக் கூடாது” என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே – இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது – அக்க்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது. 
சான்றுக்கு – நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் அப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா – என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும்.   இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.
குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!
 ”உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை  நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும்  போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” (முஸ்லிம்)
ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள “அனுமதி” உள்ளது. அவ்வளவு தான்.
அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா?  நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார்.
அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!”
எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.
அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?
குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். க்ண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?
ஒரு முறை:
அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் “பொன்மொழிகள்” :
 - கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!
 - அடியாத மாடு படியாது!
 - அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!
 - அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!
இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:
 - கட்டுப் படுவார்கள் குழந்தைகள் – பய உண்ர்ச்சியினால் – அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!
 - ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் – அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.  
ஆனால் இன்னொரு முறை – மென்மையான முறை – சுன்னத்தான முறை:
 - அன்பு செலுத்தி (Love and Compassion)
 - அக்கரை காட்டி (Taking Care)
 - மரியாதை கொடுத்து (Respect)
 - நம்பிக்கையூட்டி (Trust)
 வழி காட்டினால் – கட்டுப் படுவார்கள் – ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று!
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் “சொல்லை” கவனிப்பதில்லை. மாறாக நமது “செயலை”த் தான் கவனிக்கிறது என்பதனை மற்ந்திடக் கூடாது.
குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.
குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்த்ரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (Consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ள்த்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.
இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!    
பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.
“குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!” (அஹ்மத்)
குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா?
குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற “தண்டனைகள்” குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை வ்ன்முறையாளர்களாக மாறுவது,   அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே – குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!
    
பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:
 ”(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர்    இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும்   கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம்    உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.” (குர் ஆன் 3:159)
இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
 - குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.
 - தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள். 
இவர்கள் தாம்.
நீங்கள் அப்படி இல்லையே?
நன்றி - நீடூர் ஆன்லைன் .காம்