“முஹர்ரம்”
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.
“சொற் பொருள்”
முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் “தக்பீர் தஹ்ரீம்” என்றும் , உம்ரா,ஹஜ்ஜ’க்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் “இஹ்ராம்” என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை- விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் “ஹரம்”-புனித எல்லை- என்றும்,”மஸ்ஜிதுல்ஹராம்”- புனிதமான பள்ளி வாசல்- என்றும் சொல்லப்படுகிறது.)
“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.
ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.
குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.
இந்த மாதத்தில் தான் “ஆஷூரா” என்னும் நாள் வருகிறது. இந்த ‘ஆஷூரா’ என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது “பத்தாவது நாள்” என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் “திஷ்ரி” மாதமும் அரபிகளின் “முஹர்ரம்” மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.
யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , ” அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.
அது மட்டுமன்றி “வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்றும் கூறினார்கள். { ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.
இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று, முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.
இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)
என்பது நபிமொழி. எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, 'யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே' என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், 'அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.
தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல)
தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல)
முஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).
இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.
முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.
இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை,
முழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.
இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, 'யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்' என்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.
அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,
'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)
'முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)
'முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)
'முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2088)
ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.
வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.
Source;
http://albaqavi.com
http://www.islamiyadawa.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக