Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, டிசம்பர் 31

அழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு!

அழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு!
CMNசலீம்,சமூகநீதிமுரசு


பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்திய நிலப்பரப்பிற்கு அறிமுகமாகிவிட்டது. இந்தியாவில் எண்ணற்ற மொழி பேசக்கூடிய மக்கள் வாழ்கிறார்கள். அதில் பல்வேறு மொழிகள் பாரம்பரியமும் பண்பாடும் இலக்கிய, இலக்கணச் செழுமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் பேசிய மொழி நமது தாய்மொழியான தமிழ் என்று உலகளாவிய ஆய்வாளர்களும் பல்வேறு வரலாற்று, தொல்லியல், மொழியியல், மானுடவியல் அறிஞர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மிகத்தொன்மையான மொழிகளில் சமஸ்கிருதமும் இடம் பெற்றுள்ளது. வேதங்களும், உபநிடதங்களும் நிறைந்து இந்திய மக்களில் ஒரு பிரிவின் இறைவழிபாட்டு மொழியாக இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இதுபோன்ற பல மொழிகளைச் சொல்லலாம். இஸ்லாம் அரபு மொழியில் அறிமுகமானாலும்கூட உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இஸ்லாம் அறிமுகமானபோது, அந்த அந்த பிராந்திய மொழிகளில் அல்குர்ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய தத்துவங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு அதன் வீரியமான கருத்துக்கள் மக்களின் உள்ளங்களில் ஊடுருவிச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இந்த வேலைகள் நடைபெறவில்லை. தொடக்கத்தில் கீழக்கரையில் அரபுத் தமிழ் எனும் இரு மொழி வடிவில் அல்குர்ஆன் வெளியானது. ஆயினும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் அல்குர்ஆனின் சில அத்தியாயங்கள் தமிழிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டன. 20-ஆம் நூற்றாண்டில்தான் அல்குர்ஆன் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டது. அதுவும் முஸ்லிம்களின் பெரும் எதிர்ப்புக்கிடையேதான் நடந்தது!

1400 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு ஆக்கப்பூர்வமான வேலை 14 நூற்றாண்டுகள் கழித்து நடைபெற்றுள்ளது. இது அழைப்புப் பணியில் முஸ்லிம்களின் அலட்சியம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையே இந்தத் தேக்கம் காட்டுகிறது. இத்தகைய அலட்சியத்திற்கு நாளை இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதே வேளை முஸ்லிம் அல்லாத மக்களுக்கு அல்குர்ஆனைக் கொடுக்கக்கூடாது என்று கூறும் “அறிவாளிகள்” சமுதாயத்தில் இன்னமும் உள்ளனர். மனித வாழ்வியல் வழிகாட்டி என்று இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களிடம் தான் முதலில் ஓதி காட்டினார்கள். முஸ்லிம் அல்லாத அரசர்களுக்கு அல்குர்ஆன் வசனங்கள் எழுதி அனுப்பினார்கள். ஆனால் இங்கே முஸ்லிம் அல்லாதவர்கள், ஓத தெரியாதவர்கள் தொடலாமா? கூடாதா? என்கிற மண்டையைப் பிளக்கும் வெட்டி விவாதங்கள் நடைபெறுகின்றன.

காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை இதுபோல வீண் விவாதங்கள் நடத்தும் அறிஞர்களும் இதைப் போய் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்து அதையே சிடிகளாக வாங்கிப் பார்த்து ரசிக்கும் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இஸ்லாத்தின் அனைத்துப் பண்பாடுசார்ந்த வாழ்க்கை நெறிகளை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இன்றையகாலத்திற்கேற்ப இஸ்லாமிய மார்க்கத்தைப் பிற மக்களிடம் முன்னிறுத்தி இஸ்லாத்தின்பால் அழைக்கும் பணியை மிக வேகமாக நாம் செய்ய வேண்டும்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் பிற மக்களிடம் எடுத்துச் சொல்லி நம்மோடு சேர்ந்து பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்த அழைக்க வேண்டும். தினந்தோறும் தொழுகையிலும் நம்மோடு வாழும் முஸ்லிம் அல்லாதவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று தொழ வைக்க வேண்டும். நமது திருமணங்களை இஸ்லாமிய வழியில் நடத்துகின்ற போது?! கண்டிப்பாக அவர்களையும் அழைத்து இஸ்லாமிய திருமணங்கள் எவ்வளவு எளிமையானது என்பதை நேரில் உணர்த்த வேண்டும்.

மீலாது விழாக்கள் அதன் நோக்கம் சிதைந்துவிடாமல் அதிகம் அதிகம் நடத்தப்பட வேண்டும். அதில் முஸ்லிம் அல்லாத பிற அறிஞர்களைத்தான் அதில் பங்கேற்க வைக்க வேண்டும். அவர்கள் தப்பும் தவறுமாகப் பேசினாலும் பரவாயில்லை. அவர்களை நேர்வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் உள்ளது. தந்தைப் பெரியார் கலந்து கொண்ட மீலாது விழாக்கள் மூலம் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு.

காஃபிர்களாக இருந்து சத்தியவழிக்கு மாறியுள்ள நாம் நம்மோடு காஃபிர்களாக உள்ளவர்களை அரவணைக்காமல் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

இன்னமும் “முஸ்லிம்கள்” என்று பெருமை பேசும் சிலர் நாங்கள் உயர்ந்த குலம் நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்று வீண் பெருமை பேசி, சாதி, குலம், மொழி போன்ற இஸ்லாம் வெறுக்கின்ற காட்டுமிராண்டித்தனத்தை கடைபிடித்து வருகின்றனர். இவற்றை அடியோடு கிள்ளி எறிய வேண்டும்.

எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமை விட சிறந்தவன் கிடையாது. சிறந்தவன் என்பதற்கு இறையச்சம் மட்டும்தான் அளவீடு என்று இறைவன் பறைசாற்றுகின்றான்.

முஸ்லிம்கள் மார்க்கப் பிடிப்புள்ள முஸ்லிம்களாக மாற மாற இஸ்லாத்தின் வீச்சும் வேகமும் அதிகரிக்கும்.