ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே
by செங்கொடி
கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம்.
உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் கூற்றில் தவறேதும் இல்லை, சரியானது தான். ஆனாலும், அது முழு உண்மையையும் வெளிப்படுத்திவிட்டதாக கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்து அமைப்புகள் எனும் சொல்லின் பொருளில் காங்கிரசும் உள்ளடங்கியுள்ளது.
பாஜக தொடங்கி ஆர்.எஸ்.எஸ், சிவசேனா உட்பட அனைத்து இந்து அமைப்புகளும், ராகுல் ஒரு கத்துக்குட்டி என்பது முதல் காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பது வரை நாளிதழ்களில் அறிக்கைவிட்டு ‘உள்ளேன் ஐயா’ கூறியுள்ளன.
தொண்டர்களோ உருவ பொம்மை எரிப்பதுவரை போய்விட்டனர்.
மோடி, “ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர்” என்கிறார்;
வெங்கையா நாயுடு, “பொறுப்பற்ற பேச்சு, இந்தியாவை பலவீனப்படுத்தும்” என்கிறார்:
பால் தாக்கரே, “இந்து மதத்திற்கு எதிரான சகிக்க முடியாத கருத்து” என்கிறார்;
உமாபாரதி, “நேரு குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் க்கு இடம் கொடுத்தார் தெரியுமா?” என்கிறார்;
ஆர்.எஸ்.எஸ், “உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டு தூதரிடம் பேசலாமா?” என்கிறது.
ஆனால் மறந்தும் கூட ஒருவராவது, அவர் சொன்னது தவறு இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்று கூற மறுக்கிறார்கள். ஏனென்றால் அப்படிக் கூறினால் மக்கள் வேறொரு வாயால் சிரிப்பார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
பின் எதற்கு இந்த கூச்சல்?
பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அடிவாங்கி முடங்கிக்கிடந்த பாஜகவை ஸ்பெக்ட்ரம் ஊழல் விழித்தெழ வைத்தது ஊழலை எதிர்த்து ஏனையோருடன் இணைந்து இருபது நாட்களுக்கும் அதிகமாக இவர்கள் நடத்திய ‘கூச்சல் குழப்ப’ போராட்டத்தினால்(!) மக்கள் மத்தியில் ஊழலை எதிர்ப்பவர்கள் என்று தங்களுக்கு மதிப்பு வந்துவிட்டதாக மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு, குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது ஒரு ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து விடுபட சரியான நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ராகுல் பேச்சை பயன்படுத்திக்கொண்டு அடுத்த சுற்றை தொடங்கிவிட்டனர்.
பண்டைக்காலம் முதல் இன்றுவரை இந்துமத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாகவே இருந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்?
பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட பௌத்தம், சாங்கியம் போன்றவற்றை தின்று செரித்தது பயங்கரவாதமில்லையா?
நந்தன், வள்ளலாரை எரித்துக்கொன்றுவிட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டது பயங்கரவாதமில்லையா?
வில்லை இனி தொடக்கூடாது என்பதற்காக ஏகலைவன் கட்டைவிரலை வெட்டியெறிந்துவிட்டு குருதட்சனை என்று கூசாமல் கூறியது பயங்கரவாதமில்லையா?
ஒரு கிழவனை இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு கொன்றது பயங்கரவாதமில்லையா?
இந்தியாவெங்கும் கொலைவெறிபிடித்து நடத்திய கலவரங்கள் பயங்கரவாதமில்லையா?
யாருக்குச் சொந்தமான இடம் என அறுபது ஆண்டுகளாக நடந்த வழக்கில் நாங்கள் அப்படி நம்புகிறோம் ஆகவே உங்களுக்கு இடமில்லை என கட்டப்பஞ்சாயத்து செய்ய வைத்தது பயங்கரவாதமில்லையா?
காலிஃபிளவர் வயலுக்கு இரத்தப்பாசனம் செய்த பகல்பூர் படுகொலைகள் பயங்கரவாதமில்லையா?
எப்படி உயிருடன் எரித்தோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம் என செய்முறை விளக்கங்களுடன் சொல்லிக்காட்டிய குஜராத் வெறியாட்டங்கள் பயங்கரவாதமில்லையா?
மக்களில் பெரும்பாலானோரை தீண்டத்தகாதவன் என ஒதுக்கிவைத்திருக்கும் இந்துமதமே பயங்கரவாதமில்லையா?
பிஜேபியினரும் இந்து அமைப்பினரும் குதிக்கத்தொடங்கியதும், நான் அப்படிக் கூறவில்லை எல்லா பயங்கரவாதங்களும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தான் கூறினேன் என்று பின்வாங்கியிருக்கிறார் ராகுல். காங்கிரசோ இதில் ஏதோ சதி இருக்கிறது என்று ஐயப்பட்டிருக்கிறது. ஆனால் இதை இவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் சிமியும், ஆர்.எஸ்.எஸ் ம் பயங்கரவாத அமைப்புகள் தான் என்று ராகுல் பேட்டியளித்தார்.
காவி பயங்கரவாதம் என சிதம்பரம் கூறினார். ஆக இது வெளிப்பட்ட ரகசியமல்ல, காங்கிரஸின் தற்போதைய வேலைத்திட்டமே, இந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று தாக்குவது தான்.
இது ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் உத்தி தானேயன்றி, இந்து அமைப்புகள் என்று தன்னிலிருந்து பிரித்துக்காட்ட காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை.
தான் ஒரு இந்து சனாதனி என காந்தி அறிவித்துக் கொள்ளவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் உறுப்பினராக இருந்தவர்கள் காங்கிரஸிலும் உறுப்பினர்களாக, தலைவர்களாக, பிரதமராக இருக்கவில்லையா?
காந்தி கொலையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த R.S.S உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடையை விலக்க காய் நகர்த்தியது காங்கிரஸ்காரகளில்லையா?
முஸ்லீம்களா கொள்ளையடிக்கப்பட்ட கோவில் என்று சோமநாத ஆலயத்தை புதுப்பிக்கும் அரசியலைக் கையிலெடுத்து இந்து வெறியை ஊட்டியது இராஜேந்திர பிரசாத் இல்லையா?
தற்போதைய பிஜேபி யின் வசனமான பசுவதை தடைச்சட்டம் என்பதை வடமாநிலங்களில் அமலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் இல்லையா?
உபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் டன் இளைஞர் காங்கிரஸும், காங்கிரஸ் சேவாதளமும் இணைந்து படுகொலைகள் புரியவில்லையா?
திருட்டுத்தனமாய் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் பொம்மையை வழிபட கதவைத்திறந்தது ராஜீவ் இல்லையா?
1992 மசூதி இடிப்பின் போது ஒரு லட்சம் ராணுவத்தினர் மசூதியை இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா?
பிஜேபி இந்து அமைப்புகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மீது காங்கிரஸுக்கு எவ்வித அக்கரையும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு இந்து மக்கள் மீது பிஜேபி க்கும் ஒரு அக்கரையும் இல்லை என்பதும் உண்மையே.
எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதைப்போல் படம் காண்பிக்கும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய கொள்கை ஒன்றுதான்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம். விலைவாசி எட்டமுடியாத உயரத்தில் நிற்பது தொடங்கி, இன்று மலைக்க வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்வரை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பது இரண்டு கட்சிகளும் தட்டாமல் செயல்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தான். இந்து என்றும் முஸ்லிம் என்றும் கிருஸ்தவம் என்றும் பேதம் பார்க்காமல் லவ்ஹூல் மஹ்பூழ் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனம் நிறைவேறும் நிமித்தமாக ஏவப்படும் பிரம்மாஸ்திரமாய் உழைக்கும் மக்களைத் தாக்கும் தனியார்மய கொள்கைகளை அட்டியின்றி நிறைவேற்றிவரும் இக்கட்சிகள் நடத்தும் நாடகத்தை சிந்திக்கும் மக்களால் மதிக்க முடியுமா?
மக்கள் கழுத்தறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்து என்றும் முஸ்லீம் என்றும் கிருஸ்தவம் என்றும் பக்கம் பிரித்து வரும் இவர்கள் முகத்தில் காறி உமிழாமல் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை.
Source;
http://senkodi.wordpress.com/2010/12/20/indu-terrerism
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக