Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, டிசம்பர் 5

வழிப்பறிச் சாலைகள்?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் சாலைகள் மிகமிக அவசியம். அனைத்துப் பொருள்களும் உள்நாட்டின் பல பகுதிகளுக்குப் போய்ச் சேரவும், ஏற்றுமதி செய்வதற்காக விமான நிலையம் அல்லது துறைமுகங்களுக்குச் செல்லவும் அகலமான சாலைகள் அவசியம். அகலமான சாலைகள் அமையும்போதுதான், கனரக வாகனங்கள் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது என்பதால்தான் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியா போன்ற நாடுகளில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலைகளை அகலப்படுத்தும் பணியை அரசே ஏற்றுச் செய்வது, பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என்பதால்தான் இதில் தனியாரை ஈடுபடுத்தும் கருத்து உருவானது. அதாவது, இந்தச் சாலைகளை அமைத்து, பராமரித்து, செலவிட்ட தொகையைக் கட்டணங்கள் மூலம் லாபத்துடன் சம்பாதித்து முடித்த பின்னர், அதை நாட்டுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

"உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை' என்பதுதான் இந்த தனியார்மயத்தின் தாரக மந்திரம்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் சாலைகள் உருவாக்கத்தில் பங்குகொண்டு, தற்போது சுங்கக் கட்டணம் என்கிற பெயரில் சுங்க வரி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலாகிறது. இவர்கள் முதலீட்டை லாபத்துடன் பெறுவது எப்போது? எந்த நாளில் இந்தச் சாலை சுங்கக் கட்டணம் இல்லாதபடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் வாகன உரிமையாளர்கள் தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான சுங்கவரி தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பர் 5-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த இருக்கின்றனர். அரசால் சுங்கமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் தனியார் நிர்வகிக்கும் சுங்கங்களிலும் வசூலிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது. இப்போது அரசு சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.40-ம், தனியார் சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாடு நியாயமற்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும், மேலைநாடுகளிலும் இத்தகைய திட்டத்தில் (உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை) சாலைகள் அமைக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் அங்கெல்லாம் நடைமுறை என்னவென்றால், அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் எவ்வளவு, தற்போதைய தேதி வரை எந்த அளவுக்கு வசூலாகியுள்ளது, தற்போது அந்தச் சாலையில் ஒருவர் செலுத்திய தொகைக்குப் பின் எவ்வளவு குறைகிறது என்பதை டிஜிட்டல் கருவியில் பொத்தானை அழுத்தினாலே போதும், படிக்க முடியும். ஆனால் இந்தியாவில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.

கிருஷ்ணகிரி-தொப்பூர் நாற்கரச் சாலைக்கு ரூ. 160 கோடி செலவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தச் சாலையில் மாதம் ரூ. 3 கோடி வசூலாகிறது. அப்படியானால் இந்தத் தனியார் சுங்கத்துக்கு எதற்காக 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) ஆட்சேபம் செய்யும்போது, இதேபோன்று எல்லா சுங்க மையங்களிலும் வசூலாகும் தொகை, இதனால் தனியார் அடையும் லாபம் ஆண்டுக்கு சில நூறு கோடிகளாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசு சுங்க மையங்களில் கட்டண வசூலைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம். இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. இதில் வசூல்வேட்டை கோடிகோடியாய் நடந்துகொண்டிருக்கிறது. அரசுக்குப் பெரும் இழப்பு. இதுதவிர, இந்தக் கட்டண மையத்துக்கு உள்பட்ட சாலைகளில் விபத்துகள் நடந்து, குறுக்குத் தட்டிகள் உடைந்துபோனால், தடுப்புகள் சிதைந்தால் அதைச் சரிசெய்தல், நடுத்திட்டில் உள்ள செடிகளைப் பராமரித்தல் இதற்காகத் தனியாக ஒரு பில் கொடுத்து, பணத்தைப் பெறுவதிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இவர்களும் பொய்யான கணக்குகளுக்குப் பணம் கேட்க, அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

இத்தகைய நாற்கரச் சாலைகள் முக்கிய நகரங்களை இணைப்பதாக, தடையற்ற தனிவழியில் அமைய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் இவை அனைத்தையும் எல்லா ஊர்களையும் தொட்டுச் செல்லும்படியாக அமைத்து, எல்லா வாகனங்களும் கட்டாயமாக இந்தச் சாலைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 7,600 கி.மீ. தொலைவுக்கு நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் முக்கியமான சாலைகள் மட்டுமே நாற்கரச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் ஏறக்குறைய 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் நாற்கரச் சாலைகள் இல்லை.

தமிழ்நாட்டுச் சாலைகளை அகலப்படுத்தியதைப் பாராட்டுவோம். ஆனால் சுங்க வரி என்ற பெயரில் இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை அநியாயமாகச் சுரண்டப் போகிறார்கள்? செலவிட்ட தொகை, வசூலாகியுள்ள தொகையை மக்கள் காணும் வகையில் டிஜிட்டல் பலகையில் ஒளிரச் செய்தால் என்ன? எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியான சுங்க வரி நிர்ணயித்தால் என்ன? ஒரு சாலையில் போய்த் திரும்புவதற்கு அதேநாளில் முன்கட்டணம் செலுத்தியவர், 5 நிமிடம் தாமதமாக வந்தாலும் ஏற்க மறுத்து வசூலிப்பது என்ன நியாயம்? ரயிலைத் தவறவிட்டவர்கூட, தனது கட்டணத்தில் ஓரளவு திரும்பப்பெறும் உரிமை இருக்கும்போது, 24 மணி நேரத்துக்குப் பிறகும் சில மணிநேரம் கருணைக்காலமாக அனுமதித்து, கட்டணத்தைக் குறைத்தால்தான் என்ன? லாரி உரிமையாளர்களின் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயம்தானே!

கத்தியைக் காட்டினால் மட்டும்தான் வழிப்பறி என்றில்லை. இந்தச் சாலைகளில் முறையற்ற, வெளிப்படை கணக்குகள் இல்லாத சுங்க வசூலும் வழிப்பறிதான்.

கத்தியைக் காட்டும் வழிப்பறியில் இருந்து மக்களைக் காப்பாற்றும் கடமை உடைய அரசு, சுங்க வழிப்பறிக்குத் துணை நிற்கும் இந்த அவலத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க லாரி உரிமையாளர்கள்போல மக்களும் முன்வர வேண்டும். இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் மக்கள் மன்றமும் மௌனம் காத்தால், வழிப்பறி நியாயப்படுத்தப்பட்டுவிடும்!

-தினமணி தலையங்கம்

1 comments:

பெயரில்லா சொன்னது…

அருமையான செய்தி
விக்கிரவாண்டி ல் சரியாக வைத்து கும்பகோணம் பிரிவு சாலைக்கு செல்லும் அனைத்து வண்டிகளையும் தண்டம் கட்ட வைக்கிறார்கள் . பஸ் டிக்கெட்டை விட அநியாயக் காசை வாங்குகிறார்கள் . சென்னை அம்பத்தூரி லிருந்து மதுரை சென்றால் அவ்வளவுதான் கார் ஒன்றுக்கு சுங்க கட்டணமாக சுமார் நானூறு ரூபாய் வரை அழுக வேண்டியது கட்டாயம்