வியாழன், நவம்பர் 4
புனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி
புனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம்.
கஃபாவின் அமைவிடம்:
சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கஃபாவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூயமையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),
- அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.
- அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.
- அல்பைத்துல் ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.
- அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19,28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்:25, 27).
- அல்கஃபா,(அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது
- குறிப்பு: கஃபதுல்லாஹ் என்ற சொல் நாம் பாவித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.
கஃபா என்பதன் பொருள்:
சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.
கஃபாவைக் கட்டியவர்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஃபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.
அந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து ‘ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா? எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார். உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும்படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனி உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).
இந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரம் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலம் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).
கஃபாவின் பராமரிப்பு
கஃபாவை ஆரம்ப காலத்தில் குஸாஆ என்ற குரைஷியக் கோத்திரத்தில் ஒரு பிரவினர் நிர்வகித்து வந்தனர், இவர்களின் காலத்தில்தான் சிலைகள் இல்லாத தூய்மையான புனித அந்த இல்லத்தில் சிலைவைக்கப்பட்டு, அதன் நோக்கம் மாசுபடுத்தப்பட்டது. அந்தப்பாவத்தை முதல் முதலில் அம்று பின் லுஹை அல்குஸாயி என்பவனே அதனுள் அரங்கேற்றினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் அம்றுபின் லுஹைல் அல்குஸாயை நரகத்தில் அவனது குடல்களை இழுத்துக் கொண்டு வேதனை செய்யப்படுவதைக் கண்டேன், அவனே கஃபாவில் முதல்முதலில் சிலை வணக்கத்தை உண்டாக்கியவன் எனக் கூறினார்கள். (புகாரி).
இவர்களின் பின்பு குரைஷியரிடம் அதன் நிர்வாகம் கைமாறியது. அதிலும் இறையற் கோட்டபாட்டில் இணைவைத்தலும், பல சமூகக் கொடுமைகளும் அரங்கேறவே செய்தன. உயர் சாதி குரைஷியர் அவர்களின் குலத்தில் இல்லாத, தாழ்த்தப்பட்ட மக்களை? புனித கஃபாவில் ஆடையின்றி நிர்வாணமாக தவாஃப் செய்ய விட்டனர், எல்லோரும் அரஃபாவில் தங்கி இருக்க, இவர்களோ முஸ்தலிபாவில் தங்குவர், இப்படி பல நடைமுறைகள். இவர்களின் ஆட்சியில்தான் கஃபாவினுள் 360 சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் ஹிஜ்ரி 8வது வருடம் மக்கா வெற்றியின் போது ‘ சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என்ற திருமறைவசனத்தைக் கூறியவர்களாக உடைத்தெறிந்தார்கள். (பார்க்க : புகாரி, முஸ்லிம்).
கஃபாவை தகர்க்க எடுத்து முயற்சி சுக்குநூறாகியது
அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து கஃபாவை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான் என்பதை அல்ஃபீல் அத்தியாயம் தெளிவு படுத்துகின்றது.
அபாபீல் பறகைள் சுமந்து வந்தது அணுவைத்தான் என்று விளக்க முற்படுவது அறியாமையின் உச்சமாகும்.
கஃபா குரைஷியரால் புணர் நிர்மானம் செய்யப்படுதல்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புணர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம்: உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம் (அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் ஆக்கி, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இற்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்கு பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் மறைமுகமாக விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி என்ன என்பது பற்றி அறிய முற்பட்டால் மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் புணர் நிர்மானம்
ஹிஜ்ரி 60- முதல் 72- வரையுள்ள காலம் வரை இப்னு சுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆட்சியாரளராக இருந்தார்கள். ஹிஜ்ரி: 64ல் சிரியாவில் இருந்து வந்த யஸீத் பின் முஆவியாவின் படை அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்களுடன் புனித கஃபாவில் எறிகணைகளைக் கொண்டு போர்தொடுத்தது. அதனால் புனித கஃபா தீப்பிடித்தது. அதன் கட்டடம் ஆட்டம் கொடுத்தது, அதன் கற்கள் உதிரத்தொடங்கியது. அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா ரழி அவர்களிடம் கூறிய ஹதீஸின் அடிப்படையிலும், மக்காவாசிகளின் ஆலோசனையையும் பெற்று கஃபாவைப் புணர் நிர்மானம் செய்தார்கள். ஹிஜ்ர் பகுதியில் கூடுதலாக ஆறுமுளம் அதிகரித்ததோடு, அதற்கு கிழக்கு, மற்றும் மேற்கு வாசல்களையும் வைத்தார்கள். அதன் வாசல்களை நிலத்தோடு படும்படியாகவே செய்தார்கள். அப்போது அதன் நீளம் மொத்தம் பதினெட்டு முளமாக இருந்தது என்ற செய்தியினை முஸ்லிமில் பார்க்கின்றோம்.
உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக் பின் மர்வான் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு நாள் கஃபாவைத் தவாஃப் செய்து கொண்டிருந்த போது, உம்முல் முஃமினீன் பேரில் பொய்யுரைத்து காஃபாவையும் இடித்து இவ்வாறு செய்த இப்னு சுபைர் அவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக எனத்திட்டினார். அதைகேட்டுக் கொண்டிருந்த ஹாரிஸ் என்பவர் அமீருல் முஃமினீன் அவர்களே! அவர்களை நீங்கள் திட்ட வேண்டாம், அன்னை ஆயிஷா அவர்கள் கூற நானும்தான் செவியுற்றுள்ளேன் என்றார். அப்படியா எனக்கு அந்தச் செய்தி தெரிந்திருப்பின் நான் உடைக்காமல் அவரின் புணர் நிர்மான அமைப்பில் விட்டிருப்பேனே என அப்துல்மலிக் வருத்தப்பட்டார். (பத்ஹுல் பாரி- பாடம்: மக்காவின் சிறப்பும், அதன் புணர் நிர்மானமும் ).
ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் என்பவனின் நச்சரிப்பினால் இதன் மேற்கு வாசல் மூடப்பட்டது, ஹிஜ்ரில் இணைக்கப்பட்டதும் இப்போதுள்ள போன்று திறக்கப்பட்டது, இந்தப் புணர் நிர்மானத்தை சீர்குலத்ததில் அப்துல் மலிக்கை விட அவரின் கவர்னர் ஹஜ்ஜாஜ் என்ற கொடியவனுக்கே அதிக பங்குண்டு எனக் கூறமுடியும். (பார்க்க: முஸ்லிம்).
ஹிஜ்ர்:
தடை, தடுக்கப்பட்டது என்ற பொருளில் ஆளப்படும் இந்தப்பகுதி கஃபாவின் இடது மூலையில் அரவைட்டம் போல இடம் பெறுகின்றது. ஒருவர் தவாஃப் செய்கின்றபோதும், பர்ள் தொழுகின்ற போதும் அதற்குள் பரள் தொழுவதும், தவாஃப் செய்வதும் கூடாது என்ற அர்த்தத்தில் இந்தப் பெயர் வரலாயிற்று.
சிலர் அங்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் அடக்கப்பட்டதாகக் கதை அளந்து அதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்பர். அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஹிஜ்ரின் பெரும் பகுதி கஃபாவைச் சார்ந்த பகுதியாகும். அது குரைஷியரின் புணர் நிர்மாணத்தின் போதே இவ்வாறு விடப்பட்டது என்ற உண்மையினஷனை முன்னர் எடுத்தெழுதியுள்ளோம். அதற்காக அதைத் தொடுவது பரகத், அருள் என்றெல்லாம் எண்ணக் கூடாது.
அல்ஹஜருல் அஸ்வத்: (கறுப்புக்கல்)
கஃபாவின் கிழக்கு மூலையில் (முனையில்)இருக்கின்ற கல்லாகும். இது கருப்பு நிரமான கல் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அது வெண்ணிறமாகே சுவனத்தில் இருந்து வந்திருக்கின்றது. ‘ஹஜருல் அஸ்வத்’ ஆலங்கட்டியை விட வெண்ணிறமாகவே சுவனத்தில் இருந்து வந்திறங்கியது, அதை ஆதமின் பிள்ளைகளின் தவறுகள் கருப்பாக்கி விட்டன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
இதை ஒருவர் நேரடியாகத் தொட்டு முத்தமிடலாம், அல்லது கையால் தொட்டு கையை முத்தமிடலாம், அல்லது ஒருகைத்தடியால் தொட்டு அந்தத்தடியை முத்தமிடலாம் இவ்வாறு செய்வதற்கு நபிமொழியில் ஆதராத்தைக்காணலாம். இதனால், நன்மை தீமை எதுவும் ஏற்படுவதில்லை, அல்லாஹ்வின் தூதர் செய்தார்கள், அதனால் நாமும் செய்கின்றோம் என்ற உணர்வே மிகைக்க வேண்டும்.
வெள்ளி நிறத்தில் இப்போது ஏன் தெரிகின்றது
அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் மக்காவை ஆட்சி செய்த போது கஃபாவில் தீப்பிடித்தது. அதனால் அந்தக்கல்லில் சில மாற்றம் தெரிந்தது. அதற்காக அந்த நபித்தோழர் அவர்கள் அதைச் சுற்றி வெள்ளிநிரத்தால் வடிவமைத்தார்கள். இவர்களே இவ்வாறு முதலாவது செய்தவர்கள் என அல்அஸ்ரகி என்ற வரலாற்றாசியர் குறிப்பிடுகின்றார்கள். பின்பு அப்பாஸிய கலீபாவான ஹாரூன் அர்ரஷீத் (ரஹ்) அவர்கள் ஹஜருல் அஜஸ்வத் இருக்கும் இடத்தை துப்பரவு செய்து, அதைச் சுற்றித் துளைத்து டயமன் உலேகத்தை அதன் மேலும், கீழுமாகப் பொருத்தினார்கள். அத்தோடு வெள்ளியை அதற்குள் உருக்கிவிட்டார்கள் என்ற செய்திiயை (அல்மவ்ஸுஅத்துல் அரபிய்யத்துல் ஆலமிய்யா) என்ற நூலில் பார்க்க முடிகின்றது.
ருக்னுல் யமானி:
கஃபாவின் வலது மூலையில் ஹஜருல் அஸ்வதிற்கு நேர் மூலையில் இருக்கின்ற இடத்தை ருக்னுல் யமானி (வலது மூலை) என்று கூறப்படும். தவாஃப் செய்கின்ற ஒருவர் அதை தொடுவது மாத்திரம் நபிவழியாகும்.
கஃபாவின் வாசல்:
ஆரம்ப காலங்களில் கஃபாவின் வாசல் வழியாக மக்கள் சர்வசாதராணமாக சென்றுவரமுடியுமாக இருந்தது. குரைஷியர் தமது வசதிக்காக, தாம் விரும்பும் வர்க்கத்தினரை மாத்திரம் அதனுள் நுழைய அனுமதிப்பதற்காக அதை பூமியில் இருந்து உயர்த்தி அதற்கு ஒரு வாசல் வைத்தனர், அதைத் தொடர்ந்து வந்த இப்னு ஸுபைர் (ரழி) அவர்களின் புணர் நிர்மானத்தின் போது, தரையில் இருந்து இரு வாசல்கள் வைக்கப்பட்டன, பின்னர் வந்த உமையா ஆட்சயிளாரால் மேற்குவாசல் மூடப்பட்டது. மக்கள் நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு அதன் தற்போதைய வாசலும் தொடர்ந்தும் மூடப்பட்டவாறே இருக்கும்.
வருடந்தோரும் நடைபெறும் சவூதியின் சர்வதேச குர்ஆன் மணனப்போட்டியில் கலந்து கொள்ளும் காரிக்கள், ஹாபிள்கள், விஷேட விருந்தினர்கள், சர்வதேசமட்டத்தில் பேசப்படும் அறிஞர்கள் போன்றோரர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளின் மாத்திரம் அது திறக்கப்படும். தற்போதைய கதவு பூமியில் இருந்து இரண்டு மீற்றர் உயரத்தில் இருக்கின்றது. அதன் கதவு சுத்தமான தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். படிகள் மூலமே அதற்கு ஏறிச் செல்லாம். அந்தப்படிகளும் கூட வெள்ளியினால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
கஃபாவின் உட்புறம்
கஃபாவின் உட்புறம் பெறுமதிமிக்க மார்பிள்களால் விரிக்கப்பட்டிருக்கின்றது. அதன் நடுவில் பலமான மூன்று மரத்தாலான தூண்கள் போடப்பட்டுள்ளன. இது அவ்வப்போது சில சீர்த்திருங்களுக்கு உட்படுவதுண்டு. அதன் உட்பகுதியின் முகட்டில் பண்டையக்கால விளக்குகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
ஷாதர்வான். ஹிஜ்ர் நீங்கலாக கஃபாவின் சுவரைச் சுற்றி (மதாஃப்) தவாஃப் செய்யும் இடம் மூன்றுதிசைகளாலும் சூழப்பட்டிருக்கும் மென்யான கட்டுமானமாகும். அது அடிப்படையில் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளத்தோடு ஒட்டியதாகும்.
அல்ஹத்தீம் (அல்லது) அல்ஹுதைம்
ஹஜருல் அஸ்வதிற்கும், கஃபாவின் வாசலுக்கும் இடையிலுள்ள பகுதிக்கு இந்தப் பெயர் கூறப்படுகின்றது. ஹஜருல் அஸ்வத் முதல், ஹிஜ்ர் வரையும் உள்ள பகுதிக்கும் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுவதுண்டு. இதற்கு நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது, பாராமுகமாக விடப்படுவது என்ற பொருள் உண்டு. இது கஃபாவிற்கு வெளிப்புறமாகத் தெரியும் ஒரு பகுதியாகும்.
கஃபாவின் புணர் நிர்மானத்தின் போது அதை உயர்த்திக் கட்டாமல் விட்டதற்காகவும் (பாராமுகமாகவிடப்பட்டது என்ற பொருளில்) இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், ஜாஹிலிய்யா காலத்தில் தவாஃப் செய்வோர் தமது ஆடைகளைக்களைந்து இந்த இடத்தில் கொண்டு வந்து போடுவார்கள், அவை பல நாட்கள் கவினிப்பாரற்றுக் கிடக்கும். அதனால் அதன் மற்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முல்தஸ(ஜ)ம்
கஃபாவின் வாசலுக்கும், ஹஜருல் அஜ்வதிற்கும் இடையில் உள்ள குறித்த ஒரு சிறு பகுதிக்கு இந்தப் பெயர் சொல்லப்படுகின்றது. அரபியில் இறுக்கமாக பற்றிக் கொள்ளுதல் என்ற பொருள் தரும் அந்த இடமாது பிராத்திப்பவர்கள் பிரார்த்திக்கின்ற போது அதைப் இறுக்கிப் பற்றிக் கொண்டு பிரார்த்திப்பதால் அந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சமகால ஹதீஸ் துறை ஆய்வாளருமான அஷ்ஷைக்: அப்துல் முஹ்ஸினுல் அப்பாத் என்ற அறிஞர் இதில் பிராரத்திப்பது பற்றி வந்திருக்கும் இரண்டு ஹதீஸ்களையும் சுட்டிக்காட்டி அவ்விரண்டும் பலவீனமான செய்தியாகும் என அபூதாவூத் கிரந்தத்தின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
மீஸாப்
தண்ணீர் வடிந்தோடும் பீலிக்கு அரபியில் மீஸாப் என்று கூறப்படும். கஃபா ஆரம்பத்தில் முகடின்றிக் காணப்பட்டது. குரைஷியரின் கட்டுமானப்பணியின் போதே அதற்கு முகடு போடப்பட்டு, அந்தப்பீலியும் வைக்கப்பட்டது. ஹிஜ்ர் வழியாக மழைத் தண்ணீர் ஓடும்படியாக அது வைக்கப்பட்டிருந்தது. அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் புணர் நிர்மானம் செய்த போது குரைஷியர் வைத்த பீலிக்கான வழியையே வைத்திருந்தார்கள். அதன் நீளம் நான்கு முளம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது உள்ளும், புறமும் தங்கத்தினால் ஆனதாகும்.
மகாமு இப்ராஹீம்
இப்ராஹீம் அலை) அவர்கள் புனித கஃபாவைக் கட்டிய போது ஒரு தூரத்தை அடைகின்றார்கள். அப்போது தனது மகன் ஒரு கல்லைக் கொண்டு கொடுக்கின்றார். அவர்கள் அதன் மீது நின்றவாறு தனது கட்டுமானப்பணியை முடித்தார்கள். அதனால் இதற்கு மகாமு இப்ராஹீம் -இப்ராஹீம் நின்ற இடம்- என்ற பொருள் வந்தது.
பீ.ஜே. என்பவர் இதற்கு மாற்றமாக இப்ராஹீம் நபியின் வீட்டைத்தான் அது குறிக்கும் என்று எழுதியுள்ளார். அது முற்றிலும் முரண்பட்ட விளக்கமாகும். ஏனெனில் அல்லாஹ் அங்கு மகாமு இப்ராஹீம் என்ற அத்தாட்சியை அத்தாட்சிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளான். அதன் அர்த்தம்தான் என்ன ! புகாரியில் வருகின்ற அறிவிப்பின்படி
இஸ்மாயீல் (அலை) அவர்கள் கல்லைக் கொண்டுவர, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டுவார்கள், கட்டிடம் உயர்ந்ததும், இந்தக்கல்லைக் அவர் (இஸ்மாயீல்) கொண்டு வந்து, அவரு(இப்ராஹீ)க்காக வைத்தார், அவர்கள் அதன் மீது நின்றவர்களாக கட்டுவார்கள், இஸ்மாயில் கல்லைப் பரிமாறுவார்.(புகாரி-3366) .
அதில் جاء بهذا الحجر- فقام عليه இந்தக்கல்லை அவர் கொண்டு வந்தார், இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீதேறி நிற்பார்கள். என தெளிவாக இடம் பெற்றுள்ளதை ஆதாரமாகக் கொண்டே ‘ மகாமு இப்ராஹீம்’ என்பது, ‘இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் என்ற சரியான பொருளில் அழைக்கப்பட்டது. அந்தக்கல் தவாஃப் செய்வோருக்கு இடைஞ்சலாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு உமர் (ரழி) அவர்கள் இப்போதிருக்கும் இடத்தில் நகர்த்தி வைத்தார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த வரலாறாகும்.
ஜம்ஜம் நீரூற்று
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஹாஜர் (ரழி) அவர்களையும், அவர்களின் முதலாவது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் உத்திவரின் பேரில் புனித கஃபாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தடியில் விட்டுவிட்டுப் பிரிந்தார்கள். அவர்களிடம் இருந்த தண்ணீpர் முடிந்த போது பக்கமாக உள்ளஸஃபா, மர்வா என்ற இரு சிறுமலைகளுக்கும் இடையில் தண்ணீர் தேடி ஓடினார்கள். மலை மீதேறி வழிப்பயணிகள் யாரிடமாவது தண்ணீர் உதவி வேண்டுவது அவர்களின் நோக்கமாக இருந்தது. இறுதியாக அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அவர்களை அனுப்பி அவர்களின் இறக்கையினால் நிலத்தில் அடித்து தண்ணீர் பீறிட்டுப்பாயச் செய்தான். இதுவே உண்மையான வரலாறு. இஸ்மாயீல் நபியின் காலின் பாதம் பட்டதனால் ஜம்ஜம் நீரூற்று வந்தாகக் கூறுவது கற்பனைக் கதையாகும். இந்த அதிசயக் கிணற்றில் இருந்து லெட்சோபக்கணக்கான லீட்டர்கள் நாளாந்தம் அள்ளப்படுகின்றன. அதில் எவ்வித குறைவும் ஏற்பட்டதில்லை. அல்லாஹு அக்பர்.
கஃ.பாவின் ஆடை:
ஆரம்ப காலம் கஃபாவின் மீது முதல் ஆடை போடப்பட்டு வந்திருக்கின்றது என்பது வரலாறு. அதன் தொடரில் தற்போதைய சவூதியின் ஆட்சியில் அது பாரிய விஸ்தரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி மன்னர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் இரு ஹரம் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் அக்கறை காட்டினார்கள். ஹி. 1346-ல் முஹர்ரம் மாதத்தின் ஆரம்பத்தில் புனித கஃபாவின் ஆடை தயாரிப்பிற்காக ஒரு இடத்தை நிறுவும்படி பணித்தார்கள். அதற்கமைவாக தனியான நெசவு உற்பத்தி நிலையம் ஒன்று அவர்களின் ஆட்சியில் திறக்கப்பட்டது. சவூதி அரசின் முதலாவது ஆடை உம்முல் குராவில் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாறு ஹி. 1357 வரை நடைமுறையில் இருந்து வந்தது.
இதில் சிறந்த தொழில் நுட்பம் பேணப்பட வேண்டும் என்றதற்காக பைஸல் பின் அப்தில் அஸீஸ் என்ற மன்னர் ஹி.1382ல் கஃபாவின் ஆடைக்கென மற்றொரு புதிய தனியான தொழிற்சாலை ஒன்றை நிறுவும் படி கொடுத்த பணிப்புரைக்கு அமைவாக ஹி. 1397ல் உலகில் அதி நவீன கருவிகளைக் கொண்ட கஃபா ஆடை உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது. இதன் தொழில் நுட்பத்திறண் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளக் கூடியதாகும். கஃபாவின் ஆடை வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகின்றது.
கஃபா தொடர்பான இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளும், சின்னங்களும் உள்ளன. விரிவை அஞ்சி தவிர்த்துள்ளோம். இவ்வாறு பல சிறப்புகளையும், வராற்றுச்சின்னங்களையும் உள்ளடஙக்கப் பெற்றதுதான் இந்தப் புனித பள்ளிவாசல். அங்கு சென்று ஹஜ், உம்ரா செய்யும் பாக்கியம் பெற அல்லாஹ் அனைவருக்கும் நற்பாக்கியம் தருவானாக!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக