திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்டு லாபம் ரூ. 3.76 கோடி
கும்பகோணம், அக். 30: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு ரூ. 3.76 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அந்தச் சங்கத்தின் தனி அலுவலர் சொ.வை. கந்தசாமி தெரிவித்தார்.
திருபுவனம் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தனி அலுவலர் சொ.வை. கந்தசாமி தலைமை வகித்து பேசியது:
இந்தச் சங்கம் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகளில் லாபம் ஈட்டுவதில் மாநிலத்தில் முதன்மைச் சங்கமாக விளங்கி வருகிறது. 2010 மார்ச் 31-ம் தேதியுடன் 1836 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழ்நாடு, வெளி மாநிலங்கள் என நேரடி, முகவர் கிளைகள் மூலமாக திருபுவனம் விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில் ரூ. 3,76,14,531 லாபம் கிடைத்துள்ளது. நிகழாண்டில், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மொத்த ஊதியத்தில் 34 சதம் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், சங்கத்தின் மூலம் குறுகிய காலக் கடன், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம், புங்கர் பீமா யோஜனா திட்டம், ஹட்கோ நெசவாளர் வீடுகட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
தொடர்ந்து, திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நல அறக்கட்டளை சார்பில் செயல்படும் திகோசில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட, சங்கப் பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்குவது, சங்கத்தில் பணிபுரிந்து பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கைத்தறி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். கைத்தறி உயர்நிலைக் குழுத் தலைவர் எஸ்.கே. பஞ்சநாதன், முன்னாள் தலைவர் அய்யன்சாமி, உள் தணிக்கையாளர் கே.பி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்தியிலிருந்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக