முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம்… ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட்டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத் துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்
தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…
வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனால் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னிங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.
மார்பகத்தில் வலி: முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கையான தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட்டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.
அடிவயிற்று வ லி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.
வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட்டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்வது… இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்கு காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும்.
வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவுக்கு உதவும்.
எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்பவதிகளின் எடை மேலும் அதிகமாகும். தாய்ப்பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிகளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச்சிதைவை தடுப்பற்காக செயல்படும் ‘ப்ரோஜெஸ்டிரோன்’ (றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ) ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்கவிளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச்சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மாத்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறைத்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்தத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொள்வது போன்றவற்றால் இதை தவிர்க்கலாம்.
மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என்றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.
முதுகுவலி மற்றும் கால்வீக்கம்: இடுப்பு எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகுவலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழாய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.
போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’
நன்றி:- டாக்டர். வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
1 comments:
10 naal periods thalli poirukku eppa docor poi confirm pannalam
கருத்துரையிடுக