Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜனவரி 29

காத்திருக்குது அபாயம்

காத்திருக்குது அபாயம்
------------------------------------------------------------------------------------------------------

மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலத்தால் சூழப்பட்ட அழகான தீபகற்ப நாடு இந்தியா. உலக அளவில் தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காலம் தவறி மழை, ஓரிடத்தில் அதிக மழை, அருகே உள்ள பகுதியில் கடும் வெயில் என காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை வதைக்கிறது. வானிலையை கணிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்களும் திணறுகின்றனர். இதுபோன்ற தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


காலநிலை மாற்றங்களால் உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது. தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2050ம் ஆண்டில் இந்தியவைச் சுற்றியுள்ள கடல்களின் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று ஐஎப்எம்ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


கடல் மட்டம் உயரும்போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று இப்போதே எச்சரித்துள்ளது அந்நிறுவனம். தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1076 கி.மீ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் உள்ளன. 13 மாவட்டங்களும் கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 10 மீட்டர் வரை தாழ்வாக உள்ளன. எனவே கடல் மட்டம் 1 மீட்டர் உயரும்போது 1091 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி முழுவதும் நிரந்தரமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதனால் தமிழகத்தில் சுமார் ஸி1.27 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடலோரத்தில் உள்ள துறைமுகங்கள், மின் நிலையங்கள், விவசாய நிலங்கள், சாலைகள், நிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும். துறைமுகங்களில் ஸி36,595 கோடி அளவிற்கும், மின் நிலையங்களில் ஸி13,814 கோடி, விவசாய நிலங்களில் ஸி14,608 கோடி, சாலைகளில் ஸி3,145 கோடி, நிலங்களில் ஸி61 லட்சத்து 15,471 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். கடலோரங்களில் மூன்றரை லட்சம் மீனவர்கள் உட்பட ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.


நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படும். இந்த பகுதிகள் கடல் மட்டத்தைவிட மிகத் தாழ்வாக உள்ளன. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். சென்னை, கடல் மட்டத்தில் இருந்து 5 மீட்டர் தாழ்வாக உள்ளது. சென்னையில் கடலோரத்தில் பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தரமணி, வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் 20 ஆண்டுகளில் கடல் நீர் சூழ்ந்துவிடும் என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.


விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள்

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள கடல் மட்டத்தைவிட 100 மீட்டர் தாழ்வாகவே கடல்மட்டம் இருந்துள்ளது என்றும், கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில்தான் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் டைட்டஸ் என்ற விஞ்ஞானி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார். 2100ம் ஆண்டில் 10 செ.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும் என்று ஹாப்மேன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு 1 முதல் 2 மி.மீ வரை கடல் மட்டம் உயருகிறது என்று வாரிக் மற்றும் ஆர்லமென்ட்ஸ் என்ற விஞ்ஞானிகள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி நிரூபித்து உள்ளனர். கடலில் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகள் அனைவருமே கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளனர்.


அப்துல் கலாம் கருத்து

இந்தியாவில் தட்பவெப்ப மாறுபாட்டால் நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறுவதற்கு நீர்நிலைகளும் நமக்கு முக்கிய தேவை. நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்தால் விவசாயம் குறைந்து விடும். 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த நீர்நிலைகளின் நிலையை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் புரியும். ஆந்திராவில் உள்ள கோதாவரியில் மழை பெய்யும்போது மட்டும் 2,500 டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. சாதாரண நாட்களில் 700 டிஎம்சி வீணாகிறது. இதேபோல எல்லா மாநிலங்களிலும் தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் தேவை.


அழிவை தடுக்க என்ன வழி

கடலோரப் பகுதிகளில் முழுமையான பகுப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டும். கடலோர பகுதிகள் குறித்த மிக விரிவான மற்றும் உண்மையான தகவல்களை சேகரிக்க வேண்டும். கடலோர கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் தட்பவெப்ப மாற்றத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். முன் எச்சரிக்கை கருவிகளை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். மண் அரிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


மெரினா மூழ்கும் அபாயம்

சென்னையில் 1 மீட்டர் கடல் மட்டம் உயரும்போது மெரினா கடற்கரை மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. இது ஒரே நாளில் நடக்காது. ஆனால் சிறிது சிறிதாக கடலின் ஆதிக்கம் அதிகரித்து இது நடக்கும் என்கின்றனர். மெரினா போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நொச்சிக் குப்பம், மாட்டான் குப்பத்தை சேர்ந்த வயதான மீனவர்கள் கூறும்போது, “நாங்கள் சிறுவனாக இருந்த காலத்தில் கடல்நீர் மட்டம் ரொம்ப தூரத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக அருகில் உள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர்மட்டம் உள்ளே வந்துள்ளது’’ என்றனர்.


சிரபுஞ்சியில் குடிநீர் இல்லை

இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடமாக இமயமலை அருகே உள்ள சிரபுஞ்சி இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிரபுஞ்சியில் தற்போது லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.


கடலுக்குள் கபாலீஸ்வரர் கோவில்

சாந்தோம் ஆலயத்துக்கு பின்புற கடல் பகுதியில்தான் உண்மையான கபாலீஸ்வரர் கோவில் இருந்தது. அந்த இடத்தை கடல் நீர் ஆட்கொண்ட பிறகுதான் மயிலாப்பூரில் புதிய கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. கடலுக்குள் இன்னும் பழைய கபாலீஸ்வரர் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடலுக்குள் புற ஊதா கதிர்கள் தாக்கம்

புவி வெப்பம் அடைவதால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் புற ஊதாக் கதிர்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிலப் பகுதிகளை மட்டும்தான் புற ஊதாக் கதிர்கள் தாக்குகிறது என்று நினைத்திருந்த ஆராய்ச்சியாளர்கள், கடலிலும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடலின் மேற்பரப்பில் இருந்து 10 மீட்டர் ஆழம் வரை புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது என்று “ஸ்மித்’’ என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கடல்நீரின் வெப்பம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 80 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சுனாமி அலைகளும், பெரிய புயல் சின்னங்கள் உருவாகி நிலப்பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஜஸாக்கல்லாஹ் கைர்: http://www.kiliyanur.com/general/danger.html