புது(மையான) கணக்கு!
[ஸையித். ஏ. நஜ்முத்தின், அய்யம்பேட்டை]
ஒவ்வொரு ஆண்டும் வியாரிகள், ஏப்ரல் மாதம் புதுக்கணக்கு பார்ப்பார்கள் என்பது பலருக்கு தெரிந்த விஷயமே! அவ்வாறு கணக்குப் பார்க்கும்போது பொதுவாக ஐந்து வகையாகப் பார்ப்பார்கள்.
அவை: 1. இருப்பு, 2. வரவு, 3. செலவு, 4. இலாபம், 5. நஷ்டம்.
அந்தக் கணக்கில் (Stock Taking) முதலாவதாக இருப்பு எவ்வளவு என்று பார்க்கப்படும். அதை அடுத்து மற்றவைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கப்படும். அவ்வாறு கணக்குப்பார்த்து செய்து வருவதுதான் முறையான வியாபாரமாகும். அப்போதுதான் அதில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபருக்கும் நன்மை பயக்கும். இவைகள் உலகம் சம்பந்தப்பட்டவை.
அதுபோல ஒவ்வொரு முஃமினும் வியாபாரியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கணக்குப் பார்க்க வேண்டும். ஆயினும் வியாபாரம் செய்வதற்கு இடம் தேவையில்லை. தொழில் இரகசியம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் உண்மையே! அதனால்தான் இது புது(மையான) கணக்கு.
ஆனாலும் இந்தக் கணக்கிலும் இருப்பு எவ்வளவு என்பது முதலில் தெரிய வேண்டும். பிறகுதான் ஏனைய கணக்குகளைப் பார்க்க முடியும். அதாவது இருப்பு இல்லையென்றால் இந்த புதுக்கணக்கை பார்க்க முடியாது.
இருப்பு - என்பது ஒவ்வொருவரும் இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கை (ஈமான்) ஆகும்.
வரவு - என்பது அந்த ஏக இறைவனை வணங்குவது, மனத்தால் அவனை தியானிப்பது, நாவால் அவனைப் புகழ்வது, தர்மம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, பிறர் மீது இரக்கங் காட்டுவது, பெற்றோருக்கு பணிவிடை செய்வது, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவுவது, தீனை எத்தி வைப்பது மற்றும் நீதியும் நேர்மையும் நிலைக்கப் பாடுபடுவது. இவையெல்லாம் நற்கருமங்களில் (வரவில்) சேர்வதாகும்.
செலவு – என்பது அழிந்து போகும் பொருளைத் தேடுவதிலேயே நேரத்தை (வாழ்க்கை முழுவதையும்) செலவு செய்வது. மேலும் மனைவி, மக்கள் சுற்றத்தார், நண்பர்களுக்காக வாழ்வது மட்டுமே இலட்சியம் என நேரத்தை செலவு செய்வதும் ஆகும். அதாவது விலை மதிக்க முடியாத நேரத்தை இந்த முறையில் செலவு செய்வதாகும்.
இலாபமா? நஷ்டமா? – என்பதைப் பார்க்க வேண்டும். ஆயினும் உலக வாழ்வில் (வியாபாரத்தில்) பார்ப்பது போல் இதை நாமே பார்த்துவிட முடியாது. ஏனெனில் இந்த கணக்கை சரிபார்ப்பவன் இறைவன் ஒலுவனே! ஆனாலும் இந்தக் கணக்கை மனிதர்கள் அனைவரின் கையிலும் ஒப்படைக்கப்படும். அந்தக் கணக்கில் தவறு இருப்பதாக எவரும் வாதிட முடியாது. ஏனெனில் அது பொய்க்கணக்கல்ல.
எனவே ஒவ்வொரு நாளும் விழித்தது முதல் உறங்கச் செல்லும்வரை கணக்கில் வரவை சேர்க்க என்னென்ன வழிகள் உண்டோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தப் புது(மையான) கணக்கைத் துவங்க நல்ல நேரம் எது, நல்ல நாள் எது? என்று பார்க்கவும் தேவையில்லை.
உலகக்கணக்கு ஏப்ரல் மாதம் என்றால், இந்தக்கணக்கை ஆரம்பிப்பதற்கு அப்படி எந்த நாள் குறிப்போ மாதக்குறிப்போ வருடக்குறிப்போ நிர்ணயித்துக்கொண்டு துவங்க வேண்டிய அவசியமல்ல! உண்மை விளங்கிய அடுத்த நொடியிலிருந்து துவங்க வேண்டிய கணக்கு. ஆக, இக்கட்டுரையை படித்து முடிக்கும்போது இதுவரை விளங்காமல் இருந்தவர்களும் அல்லது விளங்கியும் அலட்சியமாக இருந்தவர்களும் உடனடியாக புதுக்கணக்கு – அதாவது நன்மைகளை புரிந்து லாபத்தை ஈட்டக்கூடிய வியாயாரத்தை ஆரம்பிக்கலாமே!
ஏனெனில் திருக்குர்ஆன் கூறுகிறது; ''ஒவ்வொரு ஆன்மாவும் தம் முயற்சிக்குத் தக்க கூலியைப் பெற்றே தீரும்" (20:15)
www.nidur.info
வெள்ளி, ஜனவரி 7
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக