இஸ்லாம் ஒரு உலகளாவிய மார்க்கம்
Islam is an Universel Religion
அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வினால் இறுதித் தூதர் என்கிற முத்திரையுடன் கி.பி.570-ல் பிறந்து 40 ஆண்டுகள் கழித்து கி.பி.610லிருந்து கி.பி. 633 வரை 23 ஆண்டுகள் இந்த பூமியில் இறைத் தூதராக வாழ்ந்து மரணித்துள்ள பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுஅறிமுகம் செய்த வாழ்வியல் கோட்பாடு தான் இஸ்லாமிய மார்க்கம்.
உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வியாபித்துள்ள மனித இனத்தின் எல்லா காலத் தேவைகளையும் சேர்த்து பூர்த்தி செய்யும் ஆற்றலும் வல்லமையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு உண்டு.
எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் என்கிற இறுதி வேதத்தை மனித இனத்துக்கு வழங்கி அதன்படியும், அல்குர்ஆனாகவே வாழ்ந்து மரணித்துள்ள பெருமானாரையும் பின்பற்றி வாழ வேண்டும் என்பது தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுக் கடமையாக்கப்பட்டுள்ளது.
பெருமானார் காலத்திற்குப் பிறகு உலகம் அழிக்கப்படுகின்ற காலம் வரை வாழப்போகும் முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமிய மார்க்கத்தை அடிபிறழாமல் பின்பற்றி வாழவேண்டும் என்பதோடு வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதன் கருத்துக்களையும் வழிகாட்டுதலையும் பிற மக்களிடம் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தை பூர்ணமாகப் பின்பற்றுவதற்கும் அதை பிற சமூக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மனித சமூகத்தின் துயர் துடைக்கும் வழிகாட்டியாக முன்னிலைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களிடம் நுட்பமான இஸ்லாமிய அறிவும் சமகால உலக பிரச்சனைகள் குறித்த ஆழமான சிந்தனையும் ஒருங்கே பெற்றால் மட்டும் தான் அது சாத்தியமாகும்.
அதுபோன்று பன்முக அறிவுடைய அறிவு ஜீவிகள் சமகாலத்தில் முஸ்லிம்களிடமிருந்து தேவையான அளவுக்கு தகுதி மிக்கவர்கள் உருவாகவில்லை. காரணம் கடந்த 200 வருடங்களாக முஸ்லிம்களின் கல்விமுறை இஸ்லாமிய முறையிலிருந்து மாற்றப்பட்டது தான்.
குறிப்பாக இந்தியாவின் தற்போதைய எந்த பிரச்சனையையும் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களால் அணுக இயலாமல் போனதற்கு காரணம் பாதை மாற்றப்பட்ட அவர்களின் கல்வி முறைதான். ஆனால் உலக அளவில் அவ்வப்போது ஒரு சில அறிவு ஜீவிகள் உருவாகின்றனர். அவர்கள் அவர்களின் துறை சார்ந்த உலக சிக்கல்களுக்கு இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைக்கின்றனர். அதை உலகமும் வியந்து பாரட்டி ஏற்றுக் கொள்கிறது. அந்த வரிசையில் வந்த ஒருவர்தான் டாக்டர் அபூ அல் வஃபா.
எகிப்தில் உள்ள கெய்ரோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைமைப் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் அபூ அல் வஃபா அவர்கள் எழுதிய நூலை ஐ.நா. சபையின் அகதிகள் உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
‘‘ஐ.நா. அவையின் அகதிகள் குறித்த சர்வதேச சட்டங்களும் ஷரீஅத் கூறும் அகதிகள் சட்டங்களும்’’ என்கிற தலைப்பில் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி பல புதிய தகவல்களை டாக்டர் அபூ அல் வஃபா தனது ஆய்வு நூல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.
இந்த நூல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. சபையின் அகதிகள் பராமரிப்பு ஆணையத்தின் தலைவரான ஆண்டானியோ கட்ரஸ் அவர்கள்,
“இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுகளிடமிருந்த பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பழக்கவழக்கங்களை இஸ்லாம் அப்படியே அங்கீகரித்து அவற்றிற்கு சட்ட வடிவம் கொடுத்தது. அவை மனித குலத்திற்கு நீதிநெறி சார்ந்த சட்டங்களாக இன்றளவும் திகழ்கிறது.”
இன்றைக்கும் அகதிகள் உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்களில் 80 விழுக்காடு இஸ்லாமிய சட்டங்கள்தான் பேணப்படுகிறது.
அல்குர்ஆனில் சூரா அத்தவ்பாவின் 6வது வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போல “(நபியே) இணை வைப்பவர்களில் ஒருவர் உங்களிடம் பாதுகாப்பு கோரினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியுறும் வரையில் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்” போன்ற அலகுர்ஆனின் பல வசனங்களும் பல ஹதீஸ்களும் அடைக்கலம் தேடி வருபவருக்கான உரிமைகளை இஸ்லாம் எந்த அளவிற்கு மனிதநேயத்துடன் நெறிப்படுத்துகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.
இதையெல்லாம் தெள்ளத் தெளிவாக இன்றைய சர்வதேச சட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்த டாக்டர் அபூ அல் வஃபா அவர்கள் வழிகாண இயலாத பல சிக்கல்களுக்கு புதிய தீர்வை முன்னிலைப்படுத்தி உள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் உலகின் இன்றைய முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான அகதிகள் உரிமை பாதுகாப்பு, பராமரிப்பு, போன்றவற்றிற்கு தீர்வாக இஸ்லாமியத் தீர்வை முன்வைத்துள்ளார். உலகம் மனமுவந்து அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த தீர்வை அவரால் எப்படி உருவாக்க முடிந்தது என்றால், நுட்பமான இஸ்லாமிய அறிவு, இஸ்லாமியச் சட்டங்கள் குறித்த அறிவு, உலக சட்டங்கள், உலக அதிகள் நிலை, ஐ.நா. சட்டங்கள் போன்றவற்றில் ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றதன் விளைவாக உலகிற்கு அவர் சார்ந்த சட்டத்துறையின் ஒரு பிரிவிற்கு இஸ்லாமிய தீர்வை முன்வைக்க முடிந்தது. இவரைப் போன்ற அறிவும் தெளிவும் உடைய அறிவுஜீவிகள் தான் இன்றைக்கு முஸ்லிம் சமுகத்திற்கும் உலகிற்கும் தேவை.
வெறும் இஸ்லாமிய அறிவு மட்டும் என்பது இஸ்லாத்தை பகுதி அளவிற்கு புரிந்து கொள்ள உதவும்.
இஸ்லாமிய அறிவும் உலக அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற ஆற்றல்மிகுந்த முஸ்லிம்களால் தான் இந்த உலகை வழிநடத்த இயலும். இந்தியாவிலும் தமிழகத்திலும் டாக்டர் அபூ அல் வஃபா போன்ற அறிவுஜீவிகள் உருவாக வேண்டும் என்றால் முஸ்லிம்களின் கல்வி
முறை அடியோடு மாற்றப்பட்டு பாரம்பரிய கல்வி முறையான முதலில் இஸ்லாத்தை பயின்றுஅதன் மூலம் இந்த உலகத்தின் எல்லா அறிவையும் பெறுவது என்ற நிலை உருவாக வேண்டும்.
வெறுமனே உலகத்தை மட்டும் படிப்பவர்களாலும் வெறுமனே மார்க்கத்தை மட்டும் படிப்பவர்களாலும் எந்தச்சூழலிலும் உலகின் எந்த பிரச்சனைக்கும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தவே இயலாது என்பதை இன்றைய முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லையென்றால், அதை பிறருக்கு முன்னிலைப்படுத்த முடியவில்லையென்றால் இஸ்லாத்தின் மீதான புரிதல் இன்மையும் அதனால் ஏற்படும் வெறுப்புகளும் அதிகரிக்கத்தான் செய்யும்.
இன்று அதுதான் நடந்துவருகிறது.